கடமை பயம்

ஆக்ஸிலேட்டர் முறுக்கல்களில் புகைந்தும்,ஹாரன்கள் அலறியும்,வியர்வை சிந்த மிதித்தும், சுமைகளை சுமந்தும், வேடிக்கை பார்த்தும், கையோடு கைகோர்த்தும், இடி, மோதல், இரைச்சலென நெருக்கடிகளில் மூச்சிறைக்க கடந்தும், பச்சை சிக்னல் வில் அம்பு பாய அனைத்தும் ‘மாரத்தான் பந்தய’மென ஒன்றை ஒன்று முந்தி போவதும் வருவதுமாக பரப்பான சாலைகள். முற்பகல், ஒண்பதரை என முட்கள் துரத்தி தொட்டு கொண்டிருக்க அவரவரது வேலைகளில் மும்பரமாய் ஓடிக் கொண்டிருந்தனர். ‘அழகு பார்மஸி’யில் லேண்ட் லைனில் டிரிங்…டிரிங்…என ரீங்காரமிட கடை முதலாளி ‘சுந்தரம்’
“ஹலோ…அழகு பார்மஸி “
“ஹலோ… நாங்… சுமங்கலி கட்பீஸ்’ சதாசிவம் பேசுறேங்…”
“ம்… சொல்லுங்க சார்”
“ஈபோஃபிட் இஞ்சக்ஷன் வேணுமெ…!”
“எத்தனை சார்?”
“மூணுவேணும்”
“இப்ப பையங்கிட்ட கொடுத்தனுப்புரேங் சார்”
“ஓ.கெ”என ரிசீவரை வைத்து விட்டு பாண்டியனிடம்
“சதாசிவம் சாருக்கு ஈபோஃபிட் இஞ்சக்ஷன் மூணுவேணுமா!”
“இந்தா இவங்கிட்ட கொடுத்தனுப்புங்க”ன்னு அலமாரி கண்ணாடிகளை துடைத்து கொண்டிருந்த அழகுவை நோக்கி கைகாட்டினான் பாண்டியன். டி.ஃபார்ம் படித்து பல வருடங்களாக அலுமினிய ஃபாயில்களை லாவகமாக வளைத்து வளைத்து வெட்டுவதில் அனுபவசாலி எல்லா மருந்துகளும், விலைகளும் அவனுக்கு கண் முன்னே வந்து கரணம் போடும், இருந்தும் எதுக்குமெ சிரிக்காத இறுக்கமான‘ஹிட்லர் மூஞ்சி’. புதுசா வேலைக்கு சேர்ந்த ‘அழகேசன்’ தான் தற்போதைய கடையின் எடுபிடி. அழகுங்கிற பேரெ ‘அழகு பார்மஸி’யில சேர்த்துக்க காரணமா இருந்தது. பேருகேத்த மாதிரி அழகுகிட்ட ஏதும் அழகா இல்ல. அவனோட முந்தைய வளர்ச்சில தைத்த சட்டை, டிரவுசர் இப்ப முட்டிக்கு மேல எட்டி கெடக்குது. வீட்ல இவந்தான் மூத்தவன் இவனுக்கு அடுத்து ரெண்டு தங்கச்சிங்க ஸ்கூலுக்கு போகுதுங்க. அப்பாவுக்கு மில்லுல வேலை. அப்பாவொட சம்பாத்தியம் வயித்துக்கும், வாடகைக்குமெ சரியா போகும். இதுல காலேஜு படிப்புக்கெல்லாம் வழியில்லாம படிப்ப 12ம் வகுப்போட வீட்ல மட்டம் போட்டுட்டாங்க. ‘என்ன செய்ய! நாம கொடுத்து வெச்சது அவளதான்’னு இதோ இந்த மாதிரி எடுபுடியாகிட்டான். ‘டீ‘வாங்கறதுலேர்ந்து வாசல் பெருக்கி தண்ணீர் தெளிக்கிறது, கண்ணாடி அலமாரிகளை துடைக்கிறது, சில்லறை கேட்டு அல்லல் படுறது, ‘ஃப்ரீ ஹோம் டெலிவரி’ங்கிற இம்சை வரை. இப்ப அந்த இம்சை தான்… டெலிவரி அட்ரஸ், போன் நம்பரை வாங்கிட்டு சிட்டு குருவியான அழகு. என்னத்தான் எடுபிடியனாலும் சைக்கிள்ல ஏறிட்டான்னா அவந்தான் மொத்ததுக்கும் ராசா அவன் வீலுக்கு கீழதான் எல்லாமே. சைக்கிள்ல வேகமா போறப்ப சட்டைகுள்ள காத்து புகுந்து பாராசூட்டா பின்னாடி பறக்கும் அதோட அவனும் சேர்ந்து பறப்பான். அந்த மாதிரி சமயத்துலதான் அவன் உயிர் வாழ்றதுல ஒரு அர்த்தம் இருக்குன்னு நெனைச்சுக்குவான் அப்பத்தான் அவனோட… அந்த சைக்கிளோட… நெறைய்யா மனம் விட்டு பேசுவான்.
‘கடையில பாண்டியங்கிட்ட பேச்சு வாங்குறதை விட இந்த ஹோம் டெலிவரி எவ்ளவோ… மேலு. முதலாளி கூட பரவாயில்ல என்ன ஏதுங்கேட்காமலெ சேத்துகிட்டார். ஆனா…! இந்த பாண்டியன் பைய ஏங்கிட்ட ஆயிரம் கேள்விங்க…கேள்வி கொக்கியில தூண்டில்ல மாட்டுன மீனாட்டம் பல தடவை மாட்டி தொங்கியிருக்கேன். அது கூட பரவாயில்ல! ‘ஊங்கிட்ட வேற சட்டையெ இல்லயா?’ன்னு எப்ப பாத்தாலும் என்னோட சட்டைய பாத்து கிண்டலு, நக்கலு வேற. அவனோட நக்கலுக்கு நாங் ஆளாகிட்டெங்கிறத நெனைக்கும் பொழுது ஆத்திரமா… வருது. வழி முச்சந்தியில் ‘குறைதீர்த்த விநாயகர் ஆலய’த்தில் பூஜை மணியடிக்க ஆத்திரத்தை பிரேக் கம்பிகளில் ‘க்றீச்…’ன்னு அழுத்தி அடக்கினான். சைக்கிளிலிருந்த அவன் உசரத்தில் லகுவாக தரையில் காலுண்றி, கண்களை மூடி
“புள்ளையாரப்பா ஏங்குறைகளையும் கொஞ்சம் தீரப்பா! இந்த பாண்டியன் தொல்ல தாங்க முடியல… அதுக்கு ஒரு வழிய பண்ணு; ஓணருட்ட நல்ல பேர வாங்கி கொடு; அப்புறம்… ஏங் தங்கச்சிங்க என்ன மாதிரியில்லாம நல்லா மேல் படிப்பெல்லாம் படிச்சு பெரிய…வேலையில சேரனும்; அம்மாவுக்கு…” பின் வந்த வண்டியிலிருந்து ஹாரன் ஒலி பீங்ங்ங்…பீங்ங்ங்… என ஒலிக்க வெள்ளை நிற ஸ்விஃப்ட் காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு மூக்கு கண்ணாடியை தூக்கிவிட்டு பலகீனமான குரலில்
“ஏம்ப்பா வழிய விட்டு நில்லு! மத்தவங்கல்லாம் போக வேண்டாமா?”என அவரின் தோனி ‘அய்யய்யோ…’ என தானாக மொத்தமும் வழி விட்டு நின்றது. சதாசிவம் வீட்டிற்கு போக கொடுத்த வாய் வழி தகவலும், அட்ரஸுடன் வந்து சேர்ந்தவனாக. திறக்காத கதவில் கணமான பெயர் பலகை ‘சதாசிவம்’ என தொங்கியிருக்க அதில் கணமான பூட்டும் ஆடிக்கொண்டிருக்க அதோடு அவன் மனமும் கிடந்தாடியது. பீங்ங்ங்… பீங்ங்ங்… என கோயிலில் வழி கேட்ட அதெ வெள்ளை நிற ஸ்விஃப்ட் கார் ‘ப்ராக்’கில் இருந்தவனை மூக்கு கண்ணாடி வழியே ஏறிட்டது
“என்னப்பா! யாரு?”
“சார்… நாங் அழகு பார்மஸியிலெர்ந்து வர்ரேங்”
“ஒ… மெடிசனா…!“ என அவர் முகத்திலிருந்த கேள்வி கோடுகள் கலைந்தோடின.
“கொஞ்சம் இருப்பா… இதொ வர்ரெங்…”என ஓடிச்சென்று கதவுகளை விசாலாமாக்கி, காரின் கதவுகளை படார்…எனத்திறந்தார். அவருடைய அந்த வேகத்தில் காரினுள் இருப்பவர்களுடைய வலி, வேதனை அவனக்கும் வலித்தது. கைகளில் இருக்கும் மருந்து காரினுள்ளே கேட்கும் அந்த வலிக்கென அவனுள் லேசாகச் சொன்னது. காரிலிருந்து ஒரு அறுபது வயது அம்மையை அவரது ஜெராக்ஸ் காப்பியாக இருபது வயதுக்கார பெண் பிடித்து வர அந்த வயதான அம்மையார் சித்ரவதையை அனுபவித்தவராக அடி எடுத்து வைத்து முயல இன்னுமொரு கைக்கு தாங்கலாக பிடிக்க ஓடினார். சிறு நாழிகையில் வெளியெ வந்தவராக
“சாரிப்பா… உன்ன நிக்க வெச்சுட்டெங்… எவ்ள பில் வந்துருக்கு?”
“ரெண்டாயிரத்து நாநூறு சார்”என.அவரது பர்ஸிலிருந்த பணத்தை எடுத்து எண்ணினார்.
“ஐயோ…! பணத்தை கிளினிக்குல… கொடுத்துட்டேனெ! நயன் ஹண்ட்ரட்ஸ் தானே இருக்கு…! ஏ.டி.எம்…ல போய்தான்… எடுக்கணும்!”ன்னு சொல்லிக் கொண்டிருக்க வீட்டினுள்ளீருந்து
“ஐயோ…கடவுளே…”என கேட்க அவர் திரும்பி அந்த வலியின் குரலில் உறைந்தார். பிறகு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவராக
“இப்ப நயன் ஹண்ட்ரடுதானேப்பா இருக்கு…! மீதிய நாளைக்கு… வந்து வாங்கிறீங்களா…?”என்றார். அவரால் ஏதும் செய்ய முடியாத மனநிலை மனைவி படும் அவஸ்த்தையிடமெ அல்லல் பட்டது.
“செரிங்ங்ங்க… சார்” என அந்த துயரத்திலிருந்து அழகு கிளம்பினான். வழி நெடுக அவரை நினைத்தே மனமும், சைக்கிளும் ஓடியது. ஓட்டம் கடை வந்து சேர
“இப்ப நயன் ஹண்ட்ரடுதான் கொடுத்தார் மீதிய நாளைக்கு வந்து வாங்கிக்க சொல்லிட்டாரு”என சட்டை பையிலிருந்து ஒண்பது நூறுக்களை எடுத்து முதலாளியிடம் நீட்ட.
“ஏம்ப்பா…? அவருட்ட பணமில்லையா…!”
“இல்ல… ஏ.டி.எம்ல போய்தாங் எடுக்கனும்னாரு… அதான்…”
“ஓ…!”வென நோட்டுக்களை கண்களில் ஒத்தி எடுத்து கல்லாவில் நிரைத்தார். ‘சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது’ங்குற மாதிரி
“ஏங் இருந்து வாங்கிட்டு வர்றது தானெ…, நாளைக்கிங்றது நாளைக்கி, நாளைக்கின்னு நாளு தள்ளி அப்பறம் காலாவதியா போயிடு”ன்னு சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தவனா பாண்டியன் அள்ளிவுட. முதலாளியும் கூட சேர்ந்தவராக
“ஆமாப்பா… நீ இனிமெ அங்கெயெ இருந்து வாங்கிட்டு வந்திடு… அப்புறன்னா அது மறந்து போவும்…நாளைக்கு காலையில மறக்காம போயிடு?”ன்னு ஒத்து ஊதினார்.
“செரிங்க…” என ‘தலையாட்டி பொம்மை’யாக தலையசைக்க அவன் மனம் கல்லாய் கணத்தது.
அடுத்த நாள், காலை மணி ஒண்பதரை என மணிக்கூண்டில் முட்கள் துரத்த அதெ பரப்பான சாலைகள், மனிதர்கள், வண்டிகள், பேருந்துகள், போன்ற இத்தியாதிகள். அதெ பழைய சட்டையை துவைத்து காயப்போட்ட கம்பிகளின் அச்சு சுருக்கமுடன் அழகு பார்மஸியில். புராஜெக்ட் ரிப்போர்டுகளை எழுத வேண்டிய கைகள் டீ’ டம்ளர்களை கழூவி அதில் நாயர் கடை ‘டீ’யை நிரப்பி கொண்டிருந்தது. முதலாளி ஊதுபத்திகளின் நறுமணத்தை இஷ்ட தேவதைகளிடமும் வரிசையாக காட்டி வர புகை கடையை இந்திரலோகமாக சூழ்ந்தது. பாண்டியன் கடைக்கு தேவையான மருந்துகளை ‘வாண்டட் நோட்’டிலிருந்து டீலரிடம் ‘போன் ஆர்டர்’ கொடுத்து கொண்டிருந்தான். முதலாளி ஒரு ‘டீ’டம்ளரை எடுத்துக்கொண்டு
“ம்…நேத்து சதாசிவம் சாரு வரச்சொன்னார்ல…!”என்றதும் பாண்டியன்
“ஆமாம்மா… நீ போய் வாங்கிட்டு வந்திடு போ… ம்ம்ம்… கிளம்பு…” என நொடிப்பொழூதும் அங்கெ இருக்க அவகாசம் தராதவனாய் அழகை அவசரப்படுத்தினான். அவனக்கும் சேர்த்து ‘டீ’யை மூன்று டம்ளர்களில் நிரப்பியிருக்க, அவனது அவசரத்தில் அழகு வேகவேகமாக சைக்கிளில் சதாசிவம் வீட்டை நோக்கி பறந்தான். மூன்றாவது டம்ளர் ‘டீ’ குடிக்காமலே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது.
‘இன்னிக்கி எப்படியாவது மீதிய வாங்கி கொடுத்துட்டுத்தான் மறு வேலை டீ’யக்கூட குடிக்க வுடாம என்ன வாங்கிட்டு வா…வாங்கிட்டு வா…ன்னு தொறத்துறாங்க சரியான கல் நெஞ்சுக்காரங்க ச்சே…’ என சலிப்பில் சைக்கிளை ஸ்டாண்டுகூட போட முடியாதவனாய் பொறுமையிழந்து வெளி கேட்டில் அப்படியெ சாய்த்தான். வீட்டின் வெளியெ சிலர் நின்றும், அமர்ந்தும் எந்தவித சலசலப்புமின்றி சின்னதாக பேசியும் பேசாமலும் இருந்தார்கள். சதாசிவம் சாரை தேடினான் அவர் இல்லை. ஏதொ விபரிதம் என அவனுள் சொன்னது. இருந்தும் முன்னே நின்று விழுங்குவது போல் பார்த்த ஒரு ஜோடி பூத கண்களிடம்
“சார்…சதாசிவம் சாரு…?”
“உள்ள போய் பாருங்க!” என்றன அந்த கண்கள் மிரட்சியாய். அவரது ஆள் காட்டி விரல் ‘உள்ளே’ என வழியும் காட்ட சாரின் மனைவிக்கு ஏதொ நடந்துட்டதாக அவனுள் பச்சி லேசாக சொன்னது. சாரை பார்த்துட்டா போதும் வரவேண்டிய பாக்கி வந்துடும் என்ற ஆவல். அவனை முன்னோக்கி இழூத்தன. உள்ளீருந்த பிரேதத்தை பார்த்ததும் படிக்கட்டுகளிலியே தயங்கின. அவரது மகள் அழூதுகொண்டிருந்தாள்.இந்த முறை அவனது பட்சி தப்பாகி போனது சாரின் மனைவியும் அருகே அழூதுகொண்டிருக்க சுற்றியும் சில சொந்தங்கள் அழ. அது ஒரு ஆண் சடலமாக கிடந்தது. வேறு யாரோ சொந்தமாகக்கூட இருக்கலாம் என கொஞ்சம் தைரியம் கூடதீடீரென
“சதாசிவம்… சதாசிவம்… யேங்ராசா… என்னவுட்டு போயிட்டியா… அந்த ஆண்டவனுக்கு கண்ணுல்லையா…” என ஒரு பெண் வாயிலும், வயித்திலும் அடித்து கொண்டவளாக வழியில் நின்றவர்களை இடித்து தள்ளிவிட்டு ஓடினாள். இடியில் சரிந்தான் அழகு.
“என்ன…? சதாசிவமா…!”என குழப்பத்தில் பிரேதத்தின் முகத்தை பார்த்து தீர்மானித்திட திரும்ப ஓடி நின்று பார்த்தான். ஆம்…அது… சதாசிவமே…!
“பாவம் நல்ல மனுஷன் இப்டி போயிட்டாரே…!ன்னு உள்ளிருந்து ஒருவர் வெளிவர, முழூதும் பார்த்திட ஏறிட்டான். நிலைப்படியில் நெற்றி‘நங்’கென இடித்தது
“ஐயோ…!”என அடிபட்ட நெத்தியில் கையை அப்பிக்கொள்ள வலியில் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது; ஒப்பாரியில் கூடியதைப் போல அழூது வழிந்தான். சதாசிவத்தின் மகள்
“அப்பா…அப்பா…”என்றழ அது சதாசிவம் சார் என உறுதியானது.ஒரு நல்ல மனிதருக்கான அடையாளமாக சிரித்தபடியெ படுத்திருந்தார். அவரது முகத்தில் துயர கோடுகள் மொத்தமும் தொலைந்திருந்ததால் முடிவெடுப்பதில் சிரமமாகி போனது. பெரிதாக கும்பல் வந்து துக்கம் அனுசரிக்கவே இடமின்றி பிதுங்கி வெளி வந்தான்.மழை தூரல்கள் துக்கம் அனுசரித்தது. கேட்டு கதவில் சாய்த்திருந்த சைக்கிள் காணமல் போக; ஓடி அங்குமிங்கும் சுற்றி முற்றி கண்ணுக்கெட்டும் தூரம் வரை பார்வையை வீசி எறிய
“ஐயோ…சைக்கிள்…ஏங்…சைக்கிள்…எங்க?” எனபதறியடித்து எழ முகத்தில் தண்ணீரை தெளித்தபடி கண்ணேதிரெ அம்மா கத்திக் கொண்டிருந்தாள். அதையும் மீறி மேற் கூறையின் ஓட்டை கிழிசல்களில் சூரியனின் ஃப்ளாஷுகளில் பளிரென கண்களை கூசியது.
“டேய்… டேய்… அழகு… உன்னெ எவ்ள நேரமா எழூப்பறது. இந்தா…சீக்கிரம் போய் தண்ணீய புடிச்சுட்டு வா… இன்னும் கொஞ்ச நேரத்துல நின்னுடும்” என காலி குடத்தை அவன் கையில் திணித்தபடி ‘ஒஹ்ஹோ… ஒஹ்ஹோ…வென இருமி சென்றாள். ‘ஓ… இதுவெல்லாமே கணவா…! அப்ப இந்த தண்ணீ...? எழூப்புறதுக்காக தெளிச்சதா! என்கிற குழப்பத்தில் நெற்றியை துடைத்தான் வலி நெற்றியை புடைத்திருக்க, அவனது தலையணை பழைய நாற்காலியின் கால்களில் பிண்ணி கிடந்தது. நிலையில் இடித்தது ‘ஓ… அது இது தானா… என நாற்காலியின் கால்களை பார்த்து தனக்குத்தானே சிரித்து கொண்டான் மாடத்திலிருந்த உடைந்த கண்ணாடி அவன் அசடு வழிந்ததை போட்டுக்கொடுத்தது. சுவரின் ஓரம் நிறுத்தியிருந்த சைக்கிளை பார்த்ததும் தொலைந்தது திரும்ப கிடைத்த சந்தோஷத்தில் புதிதாக ஒரு முறை தொட்டு பார்த்தான்.
“டேய் அங்க ‘ஒஹ்ஹோ…’‘ஒஹ்ஹோ…’ என்னடா பண்ணிட்டுருக்க…?” என இருமியெ துரத்தினாள்.
“இதப்போறேம்மா…”என கண்ணாடியில் தலைமுடியை விரல்களால் கோதி சரி செய்தவனாய் குடத்துடன் குழாயடிக்கு ஓடினான். அவனுக்கு அது ஒரு மறக்க முடியாத கனவாக இல்லை… சம்பவமாகவே இருந்தது. வழக்கம்போல் கடைக்கு கிளம்பினான்.
“அம்மா… போயிட்டு வர்ரேம்மா…”
“செரீ…கண்ணு… போயிட்டு வா… ஒஹ்ஹோ…”என இருமல் வழி அனுப்பி வைத்தாள். மனம் முழூதும் அக்கனவு பரவி கிடந்தது. கடைக்கு செல்லும் வழியில் தான் சதாசிவம் சாரின் வீடு. இதோ…! வந்துவிட்டது கனவில் கண்டதை போலவே கேட்டுக்கதவும் திறந்திருக்க உள்ளெ அதேபோல் வீட்டின் வெளியெ சிலர் நின்றும், அமர்ந்தும் எந்தவித சலசலப்புமின்றி இருந்தும் அவன் சைக்கிள் வீட்டை மின்னலாக கடந்துவிட. மனம் மட்டும் வீட்டு வாசலில் பஞ்சர் போட்ட பீசா ஒட்டிகொண்டது. ’என்னவாயிருக்கும்? கனவுல கண்டதா இருக்குமோ...! ச்சே… அப்படியெல்லாம்… இருக்காது’ என மனசு அங்கெயும் இங்கெயுமாக இழூத்தடிக்க கடைசியில் சதாசிவம் சாரின் வீட்டை நோக்கி ஓடியது. ஏற்கனவெ ரிசர்வேஷன் செய்யப்பட்டிருந்ததை போல சைக்கிளை கேட்டு கதவில் சாத்தினான். பெயர் பலகை ஆடியது ‘இல்லை’யென. கண்கள் அங்கும் இங்குமாக தேடி அலைந்தது. இப்பவும் அவர் கண்ணில் பட வில்லை. சற்று முன்னே நின்றவரிடம்
“சார்…சதாசிவம் சாரு…?”
“உள்ள போய் பாருங்க!” என அதே ஆள் காட்டி விரல் ‘உள்ளே’ என வழியும் காட்டியது. ஏதோ எல்லாம் முன்பே ஒத்திகை பார்த்தது போல, ஏற்கனவெ பழகி போனதாக இருந்தது. சாருக்கு ஏதோ நடந்ததாக அவனது உள் மனம் இம்முறை வேறாக சொன்னது. பகீரென்றது… வியர்வை மழையாகி உடம்பெல்லாம் நனைந்தது. ஆனால், அவனுக்கு முன்னே சென்று என்னவென்று பார்கக்கூடிய மன தைரியம் வரவில்லை. கனவில் கண்டவை எல்லாம் நிஜமோ! என்ற எண்ணமெ மிஞ்சிட அங்கிருந்து பின் வாங்க விட்ட இடத்திலேயே சைக்கிள் பத்திரமாக இப்போது சாய்ந்து கிடக்க, அவனால் அங்கெ சில நாளிகைக்கூட இருப்பு கொள்ளாது சுயத்தை இழந்தவனாக சைக்கிளை தள்ளியவாறு நடந்தான்; விரைந்தான்; மனம் பேதலிக்க; காற்றில் தொப்பலான வியர்வை உலர; கடைக்கு வந்தான். தாமதமானதால் கடை முன்னமெ திறந்து வாசல் தெளித்திருந்தது. நாயர் கடை டீ’ வாங்கி வர செவ்வாய், வெள்ளியென வாரந்தவறாமல் சாம்பிராணி காட்டும் வழக்கத்தில் கனவில் கண்ட அதெ மூட்டம் ஊதுபத்திகளிலிருந்து வராத மிதமிஞ்சிய புகை மூடுபனியாகி மூடிக்கொண்டிருந்தது. அடுத்தது எங்கெ மீதித்தொகையை வாங்கி வர சொல்லி விடுவார்களோ என எண்ணிக்கொண்டே. மூன்று டம்ளர்களில் டீ’யை நிரப்பினான். புகை மூட்டம் இப்போது கலைந்து இந்திரலோகமாக கடை மிதந்தது. பாண்டியன் போனில் ஆர்டர் கொடுத்துக் கொண்டிருக்க முதலாளி டீ’யை பருகினார். பாண்டியனும் அவனது டீ’யை எடுத்துக்கொள்ள கனவு வரிசைப்படி மீதி தொகை வசூலுக்கான ஆயத்ததில் மூன்றாவது டம்ளர் டீ’யை எடுத்துகொள்ளாமல் அழகு நின்றான். முதலாளி யோசனையுடன்
“ம்…நேத்து சதாசிவம் சாரு வரச்சொன்னார்ல…!”என்றதும் பாண்டியன் அழகிடம்
“ஆமாம்மா… நீ போய் மீதிய வாங்கிட்டு வந்திடு போ… ம்ம்ம்… கிளம்பு…”என்றான்.
அழகு சைக்கிளை எடுக்க போனவனாய்….

எழுதியவர் : அபிமான் (3-Jul-15, 10:59 pm)
Tanglish : kadamai bayam
பார்வை : 100

மேலே