கூட்டணி - நகைச்சுவை நாடகம்

............................................................................................................................................................................................

பார்வையற்ற ஒருவருக்கு பிரபல கண் மருத்துவமனை ஒன்று கண்தானம் கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒரு கண் கிடைத்த நிலையில் அதில் அரசியல் புகுந்து விட்டது. இதுதான் நாடகச் சுருக்கம்.

பாத்திரங்கள்: நே.நே.தே.மா. கட்சித் தலைவர் ராக்கப்பன், நே.நே.பூ.மா கட்சித் தலைவி பெருங்கொடி, நி.நே.பா.மா. கட்சித் தலைவர் கோலப்பன், தொண்டர்கள், கண் டாக்டர் கனியமுதன், பார்வையற்ற நோயாளி வீர கேசவன்...

நே.நே.தே.மா. கட்சித் தொண்டர்: தலீவா, சட்டசபை தேர்தல் வருது; ஏதாவது புதுமையா செஞ்சு மக்கள் நம்மைப் பத்தி பேசற மாதிரி வைக்கணும்...!

ராக்கப்பன் : நாம ஆளுங்கட்சி இல்லே. அத ஞாபகம் வச்சிக்கோ. பணம் செலவழிக்காம பேரை வாங்கற வழியிருந்தா சொல்லு.

நே.நே.தே.மா. கட்சித் தொண்டர் : (ஜன்னல் வழியே பார்த்து) தலீவா.. அதோ போறார் பாருங்க, ஒரு ஆள்... கண்ணாஸ்பத்திரியிலேர்ந்து க்ராஸ் பண்றாரே... அவுருதான். அவருக்கு ஏதோ கண்ணு கெடச்சிருக்கு.. அடுத்த வாரம் ஆபரேசன்...! அவரை நைசாப் பேசி நம்ம கச்சியிலே இட்டாந்துடறேன்..! கச்சி சார்பில கண்ணு குடுத்த மாதிரி ஆக்ட் பண்ணிக்கலாம்... ஓகேயா?

ராக்கப்பன் : செம ஐடியா..! கோழியை அமுக்கு...!

நே.நே.தே.மா. கட்சி நி.நே.பா.மா. கட்சியோடும் நே.நே.பூ.மா கட்சியோடும் கூட்டணி சேர்கிறது.


நே.நே.பூ.மா கட்சித் தொண்டர்: (தலைவியின் காதோடு) நே.நே.தே.மா. கட்சித் தலைவர் கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்மா.. கொஞ்சம் அசந்தா தேர்தல்ல சீட் கொடுக்காம இதயத்தில் இடம்னு சொல்லிடுவார்...!

பெருங்கொடி : ஐயே, இவர் இதயத்துல என் கையை வைக்க..!

ராக்கப்பன் : கூட்டணிக் கட்சித் தோழர்களே, அடுத்த வாரம் நாம ஒரு பிரம்மாண்ட கூட்டம் நடத்தி நம்ம பவரை காட்டப் போறோம்..! வீர கேசவன் என்கிற வீர மகன்! அந்த செல்வத் திருமகன் கட்சியின் தயவால் கண்ணடைந்து காசினியைக் காணப் போகிறான்..! அனைவரும் திரள்க..!

பெருங்கொடி : திரள்றோம்... திரள்றோம்... நீங்க கண்ணு கொடுத்து பேர் வாங்குவீங்க.. நாங்க ஜால்ரா அடிக்கணுமா? நாங்களும் எங்க பங்குக்கு ஒரு கண்ணு கொடுக்கிறோம்...

ராக்கப்பன் : சரி, கொடுங்க.. தமிழன் கொடுப்பதை தடை செய்ய மாட்டான்..!

நி.நே.பா.மா. கட்சித் தலைவர் கோலப்பன் : அப்ப நாங்களும் ஒரு கண்ணு கொடுப்போம்...!

ராக்கப்பன் : அது எப்....படி????

கோலப்பன் : ஒரு கண்ணு கொடுக்கிற உரிமை கூட எங்களுக்கு இல்லையா? பதினெட்டு சதவீதம் ஓட்டு வங்கி எங்களோடது..! இல்லைன்னா சொல்லுங்க, கூட்டணியிலிருந்து விலகிக்கிறோம்...! ! !

நே.நே.தே.மா. கட்சித் தொண்டர்: (காதோடு) தலீவா, அது டாக்டர் பாடு, நோயாளி பாடு..! நமக்கென்ன வந்தது? கூட்டணிக் கச்சித் தலீவர் ஆசையா கேக்கறாரு, ஒத்துக்கோங்கோ...!

ராக்கப்பன் : சரி.சரி..!

(பிரம்மாண்ட விழா நடந்து மூன்று கண்கள் கண் மருத்துவர் கனியமுதனிடம் ஒப்படைக்கப்படுகின்றன.)

கனியமுதன்: இந்த ரெண்டு கண்ணையும் வீரகேசவனுக்கு வச்சிடறேன்..! இந்த கண்ணு இன்னொரு நோயாளிக்கு...

நே.நே.பூ.மா கட்சித் தொண்டர்: ஏய், டாக்டா..! இன்னா எங்க கைலயே ராங் காட்டிகினியா? எங்க கண்ணு வீர கேசவன் மூஞ்சிக்குத்தான் போகணும்..! அல்லாங்காட்டி நீ இருப்பே..! ஒன் வூடு இருக்காது..! கூண்டோட கைலாசம்...!

நி.நே.பா.மா. கட்சித் தொண்டர் : விவரம் புரியாத மடப்பயலுங்க..! ஒரு டாக்டர் கிட்ட இப்படியா பேசறது? டாக்டர் சார்! வருத்தப்படாதீங்க. நாங்க கொடுத்த கண்ணை வீர கேசவனுக்கு வச்சிடுங்க. இல்லாட்டி நீங்க இருப்பீங்க; உங்க குடும்பம் இருக்கும்.. இந்த ஆஸ்பத்திரி செங்கல் செங்கல்லா ஆயிடும்..!

கனியமுதன்: அடப்பாவி! நீ நல்லபடி தொடங்கி அதே டிராக்குல போறியே?

நே.நே.தே.மா. கட்சித் தொண்டர்: ஒரிஜினல் ஐடியா எங்களோடது..! சொதப்பிடாதே..! (கையில் பிச்சுவா எடுத்து டாக்டர் கழுத்தில் கோடு கிழிக்கிறான்) புரிஞ்சிகிட்டியா?

கனியமுதன்: ஊம்..ஊம்.. ஒருத்தன் குடும்பத்தை குறி வைக்கிறான்; இன்னொருத்தன் ஆஸ்பத்திரி..! நீ எனக்கே குறி வை..! நான் ஆபரேசனே பண்ணலப்பா..!

(மூன்று கட்சித் தொண்டர்களும் சேர்ந்து) : டேய்...ய்...ய்..! ! ! ! ! ! !

(வீர கேசவனுக்கு ஆபரேசன் நடக்கிறது. மூன்று கூட்டணித் தலைவர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். டாக்டர் கனியமுதன் வெளியே வருகிறார்)

நே.நே.பூ.மா கட்சித் தொண்டர்: டபாய்க்கிற வேலை ஏதும் செய்யலியே?

கனியமுதன்: அடப் போய்யா, உள்ள போய் பார்..!

(கூட்டணித் தலைவர்கள் வீர கேசவனை பார்க்கின்றனர். வலது கண் இடது கண்ணோடு நெற்றியிலும் ஒரு கண் முளைத்து வீர கேசவன் உட்கார்ந்திருக்கிறான்..!)

தொண்டர்கள்: (கன்னத்தில் படபடவென்று தட்டியபடி) முக்கண் கொடுத்த வருங்கால முதல்வர் வாழ்க...! ! ! ! ! ! !

காமிரா ஃபிளாஷ் அடிக்கிறது. தொண்டர்கள் போனபின் அமர்க்களம் ஓய்கிறது.

கனியமுதன்: ஹையோ.. கண்டத்திலிருந்து தப்பிச்சேன்..! உனக்கு கண்ணு நல்லாத் தெரியுதா?

வீர கேசவ: நல்லாத் தெரியுது டாக்டர்..! எனக்கு எதிர்காலமும் தெரியுது..! இங்க வந்துட்டுப் போன மூணு தலைவர்களும் ஜெயிலுக்குப் போறது தெரியுது..! அங்க களி சாப்புடுறது தெரியுது..!

கனியமுதன்: யோவ்..! மெதுவாப் பேசுய்யா..!

(வாயைப் பொத்துகிறார்)


முற்றும்

....................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (8-Jul-15, 4:37 pm)
பார்வை : 934

மேலே