தொடர்பு எல்லைக்கு அப்பால் - சந்தோஷ்

"தயாளனுக்கு என்னாச்சி....? இதுவர 38 தடவ கால் பண்ணிட்டேன்.. எடுக்க மாட்டிங்கிறாரே..இந்த ஆம்பிளங்களே இப்படித்தானா.. அவங்களுக்கு பிடிக்காத மாதிரி பொண்ணுங்க நடந்துகிட்டா... அவங்களே அவங்களை பிடிக்காத மாதிரி பீல் பண்ணி அலையுறாங்க... ச்சே... " ஒட்டுமொத்த ஆண்களையும் தனது விமர்சனக் கோப்பையில் ஊற்றி கழுவிக்கொண்டிருந்தாள் மேகா... அன்று ஒரு நாள் தயாளனுடன் ஏற்பட்ட சின்ன மனச்சங்கடம்.. நேற்று பெரிய அளவில் இருவருக்குள்ளும் ஈகோவாக வெடித்தது.

மேகா வேதியியல் பி.ஹெச்.டி வெற்றிகரமாக முடித்து.. மேற்கொண்டு ஆராய்ச்சி படிப்புக்காக அயர்லாந்து செல்ல வாய்ப்பு வந்தது. இதை எம்.காம் படித்த தனது காதலன் தயாளனிடம் சொன்னப்போதுதான்.. தேவையற்ற விவாதம்.. அவர்களின் தேவையான திருமண வயதில் வந்தது.
"போக வேண்டாம்.. இங்கே இந்தியாவிலே ஆராய்ச்சி செய்து சம்பாதித்துக்கொள் "என அவனும்.. "இல்ல.. அங்க போனா தான் இன்னும் நிறைய தெரிஞ்சுக்க முடியும்.. " என இவளும் பேச பேச,,,,, பேசக்கூடாத அளவிற்கு விரிசல் வந்தது. அது காதலின் ஊடலாக இருக்கலாம் என சொல்லமுடியாத அளவிற்கு சென்றது. இருந்தாலும் தாழ்வுமனப்பான்மையுடைய தன் காதலனை தன் படிப்பின் அருமையினை எடுத்துச்சொல்லி.. அவனையும் அவளோடு அயர்லாந்துக்கு அழைத்துச்செல்வதாக நேற்று அன்பாகதான் எடுத்துச்சொன்னாள். " அப்படின்னா.. நான் உனக்கு அங்க வந்து வேலக்காரனா இருக்கனுமா ?.. டாக்டரேட் பட்டம் வாங்கிட்டா நீ சொல்ற மாதிரி நான் பறக்க நான் ஒன்னும் உன் கையிலிருக்கிற பட்டம் இல்ல......." அவனுக்குள் அவளை விட குறைவாக படித்துவிட்டோம் என்கிற தாழ்வுமனப்பான்மை... ஈகோவாக மாறிவிட.. மேகாவிற்கோ... தயாளன் சராசரி ஆண் வர்க்கம் தான்.. புரட்சிகரமான சிந்தனையாளன் அல்ல.. ஆணாதிக்கவாதி என்கிற ஆதங்கம் வந்து.. "சரிதான் போடா " என்கிற பாவனையில் விழியில் வீசிவிட்டு வந்துவிட்டாள்.

என்றாலும்.. தயாளின் அன்பு.... காதல்... தன்மீது உயிராக இருக்கும் அவனின் மாண்பை மீண்டும் மீண்டும் அவளுக்குள் இருக்கும் காதல் அவளுக்கு உணர்த்த இன்று காலையிலிருந்து தயாளனுக்கு போன் செய்தாள்.

மேகா தன் உணர்வை புரிந்துக்கொள்ளவில்லை என புலம்பிக்கொண்டிருந்த தயாளனுக்கு. அவனின் நண்பன் நரேஷ் ஆறுதல் சொல்லியும் மனம் தேற்றிக்கொள்ள முடியா நிலையிருந்த தயாளன்.... " டேய் மச்சான்... தண்ணி அடிக்கனும் போல தோணுதுடா.. ப்ளீஸ் வாங்கி கொடுடா........... அவ வேண்டாம் டா............... அவளுக்கு திமிரு அதிகமாச்சி... அவளுக்கு வேற எவனோ செட் ஆகிட்டான். அதான்.. அவ அவ என்னை கிழட்டிவிட்டுட்டு போறா... "

" மாப்ள.. என்னடா.. தண்ணி அடிக்கிற பழக்கமே உனக்கே இல்லயேடா.. ! வேண்டாம்டா.. குடிச்சி பழகிட்டினா. உன் வாழ்க்க பாழா போயிடும்.. "

" போயிடுச்சி டா.. போயிடுச்சி.. இனி போக என்னா இருக்கு ? "

" தயா... லவ் மட்டும் வாழ்க இல்லடா... நிறைய சாதிக்க.. நிறைய வாய்ப்பு இருக்குடா.. நீ சாதிச்சி காமி.. அவ முன்னாடி வாழ்ந்து காமிடா..... இந்த போதை உன்னயும் கஷ்டப்படுத்திட்டு.. உன் குடும்பத்தையும் கஷ்டப்படுத்தும் டா...."

" டேய்.. போடா... பெரிய மயிரு மாதிரி பேச வந்துட்டான்.. அவ போதையை மறக்கதான் இந்த போதை.... தள்ளு நான் போறேன்......... "

நண்பன் நரேஷின் வார்த்தைகளை அலட்சியப்படுத்திய தயாளன் தன் பைக்கை எடுத்து தான் தங்கியிருக்கும் விடுதிக்கு வெளியே வந்தவன்,. அங்கிருந்த ஒரு வாட்ச்மேனிடம்.. " பாஸ்... குடிக்கனும்.... எங்க கிடைக்கும் "

"என்ன தம்பி குடிக்கனும்.. ? சரக்கா.. "

"இதுக்கு எதுக்கு தம்பி என்ன கேட்கிற,.. இப்போலாம் தெருவுக்கு தெரு பிள்ளையார் கோயிலை விட டாஸ்மாக் கடைதானே இருக்கு... போ.. போ சீக்கிரம் போ.. டைம் வேற மாத்திட்டாங்களாம்..... 10 மணிக்கு மேல போனா சரக்கு 20 ரூபா அதிகமா கொடுத்து வாங்கனும்.. "

" ஓ இங்கதான் இருக்கா.?


டாஸ்மாக் கடை...

"அடிச்சா மப்பு குப்புன்னு ஏறனும்.. எது ஸ்ட்ராங்கோ அது கொடு " கடையில் சப்ளையர் செய்யும் சிறுவனிடம்... தயாளன்..

" என்ன அண்ணாதே.. புதுசா.... ? "

" ம்ம் ..."

"சின்ன பையனா இருக்கான்... இங்க வேலைச்செய்றான்... குழந்தை தொழிலாளர் சட்டம்... எல்லாம் இங்கு இல்லயா மச்சி.. " அங்கிருந்த கல்லூரி முதலாமாண்டு மாணவர் கூட்டத்தில் ஒருவன்.

" அட போ மச்சி.. வந்தோமா.. குவார்ட்டர் அடிச்சோமா.. சும்மா .. மஜாவா ஏறிச்சா.. ரூம்க்கு போயி குப்புற ப்டுத்தோமான்னு இரு மச்சி...என்னாத்துக்கு ஒனக்கு வேண்டாத பஞ்சாய்த்து... "


இந்த ஆரோக்கிய உரையாடலை ரசிக்க கூடிய மனநிலையில் இல்லாத தயாளன். அந்த புது இடத்தின் சூழல் அவனுக்கு ஒரு வித அசெளகரியத்தை கொடுத்தாலும். உள்ளுக்குள் சென்ற விஸ்கியின் போதை.. அவனை.. அவன் நிலையிலிருந்து விடுவித்தது. அவனின் ஜீன்ஸ்க்குள் இருந்த சாம்சங் போன்.. சைலண்ட் மோடில் இருக்க வைப்பரேஷன் ஆகிக்கொண்டே இருந்தது...

தொந்தரவு தாளாமல்.. எடுத்தான் பார்த்தான்.... மேகா கொடுத்த 65 மிஸ்டு கால்கள் திரையில் எண்ணிக்கையாக காட்டின.. " என்ன மயிருக்கு கூப்பிடுறா.. இவ.. மூஞ்சில காறித்துப்பினா மாதிரி போனவ போக வேண்டியதுதானே.. இடியட்......... இந்த பொண்ணுங்ளே.....இப்படித்தான்...." மனதுக்குள் புலம்பினான்."

மீண்டும் அவளின் அழைப்பு.. இம்முறை எடுத்தான்...

" என்னாடி வேணும்..... சும்மா சும்மா நையு நையுன்னு கூப்பிட்டு... போடி .. அயர்லாந்துக்கு.. ஒடிடு... மவளெ எங்கனாவது ஒன்ன பார்த்தேன்,......... மூய்ச்சில குத்திடுவேன்" குளறி உளறி பேசிய தயாளனின் குரலால் அதிர்ச்சியடைந்த மேகா.....

" தயா.. தண்ணியடிச்சீயா.. நீ தண்ணியடிப்பியா.. ச்சேஒன்ன போயி லவ் பண்ணினேன் பாரு....."
" ஒன்ன யாருடி லவ் பண்ணச்சொன்னா.. நீ பீ பீ பீ ஹெச் டி படிக்கிற வரைக்கும் ஊர் சுத்த நான் தேவ பட்டேன்.. இப்போ அயலாந்து ல வேற எவனோ கிடச்சி அங்க ஓடுற. போடி ..போடி.. உன்கூட.... நான் வந்து அங்க விளக்கு பிடிக்கனுமா போடியே இவளே "

" அடச்சீ வைடா போனா.. இன்னொரு தடவ என் கேரக்டர் பத்தி தப்பா பேசிப்பாரு... "

"என்னாடி பண்ணுவ..... வைடி வைடி... பெரிய கண்ணகி இவ..... "

மறுமுனையில் கால் கட் ஆகியது.......

250 மி.லி... 500 மி. லி என கடந்து மில்லி மில்லியாக போதை தலைகேறிய தயாளன் டாஸ்மாக் கடையை விட்டு வெளியேறினான்..
---
நரேஷிடம் மேகலா.. " அண்ணா அவன் என்ன தப்பா தபபா பேசுறான்.. அவன் ஏன் இப்படி .. தண்ணிலாம் அடிக்கிறான்னா... உங்ககிட்ட காலையில பேசனுன்னு நினைச்சேன். "

" என்ன மேகா சொல்ற தண்ணியடிச்சிட்டானா.. கொஞ்ச நேரம் முன்னாடி தான் என் ரூம்க்கு வந்து நீ ஏமாத்திட்டன்னு புலம்பிட்டு.. தண்ணி அடிக்கனும்ன்னு வாங்கிகொடுன்னு சொன்னான்.. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்... அவனே வாங்கிகுடிக்கிறேன்னு போனான்.. நான் அவனதான் தேடிட்டு இருந்தேன் மேகா.. சரி கவலபடாதே.. இங்கதான் டாஸ்மாக் ல இருப்பான். நான் பண்ணின போனும் எடுக்க மாட்டிங்கிறான்... எனக்கு மட்டும் கால் நல்லா இருந்தா... அவன் தேடிட்டு போயிருப்பேன்.. சாரி மா.... "

" அண்ணா.. நீஙக் ஏன் சாரி சொல்றீங்க.. நான் அவன்கிட்ட பக்குவமா பேசுறேன். அவன் எனக்கு வேணும்ன்னா .. நல்ல பையன் தான்... ஆனா....."

" ஆனா... புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்கமா.. விட்டுக்கொடுத்து பேசுங்க இரண்டு பேரும்.. டீப்பா லவ் பண்ணிட்டு... புரிஞ்சிக்காமஏன் பிரியனும்.. .. ? பேசுங்க அன்பா பேசி.. புரிய வை மா.. ஆத்திரப்படாதே.. "

" ம்ம்ம் சரின்னா..... நான் விட்டுக்கொடுத்துதான் போறேன். அவனுக்கு இன்ப்ரியாட்டி காம்பளக்ஸ் அண்ணா.. அதான் அவன் ப்ராப்ளம்.. சரி ரூம்க்கு வந்தா.. அட்வைஸ் பண்ண்ணுங்க.. நான் அயர்லாந்து போகலன்னுன்னு சொல்லுங்க.. நாளைக்கு நாம மூனு பேரும் மீட் பண்ணி பேசலாம் அண்ணா " மடமட தழுதழுத்த குரலில் அழுகையை அடக்கியவாறு ... மீண்டும் தயாளனின் செல்போனுக்கு டயல் செய்தாள்... மேகா...20 முறை மிஸ்டுகால்களாக..... மாறின... 21 வது முறையில்



" நீங்கள் தொடர்புக்கொள்ளும் வாடிக்கையாளர், தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார். சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும் " கணினி பெண்மணி பேசினாள். மேகாவின் இதயம் ஏனோ துடித்தது....

மறுநாள் செய்தியாக ......

"குடிப்போதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ..... மேம்பால தடுப்புச்சுவற்றில் மோதி பலியாகினார்."


மேகா.. தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருக்கிறாள் தயாளனின் செல்போனுக்கு.. ... ஆனால் தொடர்பு எல்லைக்கு அப்பால் அவன் சென்றதை அறியாமல்...


(முற்றும் )

**
-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (11-Jul-15, 4:52 pm)
பார்வை : 408

மேலே