டாஸ்மாக் ஊழியர்களின் நிலை

டாஸ்மாக் ஊழியர்களின் நிலை
தமிழகத்தில் மதுவிற்கு எதிரான போராட்டங்கள் வலிவடைந்து வருகிறது. இதுவரை தமிழக முதல்வரோ, அந்தத் துறைக்கான அமைச்சரோ, தலைமச் செயலரே, அந்தத் துறையின் செயலரோ எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள்.
மது ஒழிக்கப்படவேண்டிய மிக முக்கியமான விஷயம். இன்று பள்ளி மாணவர்களும், பெண்களுங்கூட மது அருந்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. குடி குடியைக்கெடுக்கும் என்று சொல்லிக்கொண்டே மதுவை விற்க அரசாங்கமே மதுக்கடைகளை நடத்துவது பாராட்டத் தக்க செயல் அல்ல. இன்று மதுப்பழக்கத்தால் சீரழிவோரின் எண்ணிக்கை பெருகி வருகிறதென்றால் அதற்கு தி.மு.க. அஇஅதிமுக ஆகிய இருகட்சிகளுமே காரணம். இப்போது அந்தக் கட்சிகளைக் குறை சொல்வதால் எந்தப் பயனும் இல்லை. மக்களின் ஒட்டுமொத்த முடிவு, பெண்கள் மற்றும் இளைய தலைமுறையின் நல்வாழ்வை மனதில் கொண்டு அரசு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்.
மதுவினால் வரும் வருவாய்க்காக லட்சக்கணக்கான குடும்பங்களைச் சீரழிக்கக் கூடாது. குற்றம் புரிபவர்களில் பெரும்பாலோர் மது அருந்திய பின் இரட்டைத் துணிச்சல் (Dutch courage) பெற்றுக் குற்றச்செயலகளில் ஈடுபடுகிறார்கள். குடிகாரர்களால் மகிளிர் படும் அல்லல் பற்றி நாள்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே மதுக்கடைகளை மூடுவதே ஒரு நல்ல அரசின் கடமை.
மதுக்கடைகளை மூடிவிட்டால் டாஸ்மாக் கடைகளின் பணியாற்றும் ஊழியர்களின் நிலை என்னா ஆகும் என்ற கேள்வியும் எழுகிறது. அவர்களது கல்வித் தகுதிக்கேற்றவாறு தேர்வு வைத்து கொஞ்சம் சலுகை காட்டி காலிப் பணியிடங்களில் அவர்களை அமர்த்தலாம். தேர்ச்சிபெறத் தகுதியில்லாதவர்களை வைத்து அழிந்து வரும் வனப்பகுதிகளில் மரஞ்செடி கொடிகள் அழிக்கப்பட்ட இடங்களில் காடுகளில் வளரும் மரங்களின் விதைகளை பருவமழை வருவதற்கு முன்பாகவே ஊன்றி வைத்தால் பின்னர் அவை வளர்ந்து வனங்கள் பசுமை பெறும் . விலங்குகள் ஊருக்குள் வருவதும் தடுக்கப்படும். அதே போல எத்தனையோ மொட்டைக் கரடுகளும் குன்றுகளும் உள்ளன அங்கெல்லாம் மண்ணிருக்கும் இடத்தில் எல்லாம் வேப்பமரம், அரச மரம் ஆலமரம் போன்ற மரங்களின் விதைகளை மழை காலத்துக்கு முன்னதாக ஊன்றி வைத்தால் அவை கோடை வெயிலையும் தாங்கி செழிப்பாக வளரும். வனத்துறை இது பற்றி சிந்தித்து அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். வீட்டுச் சுவரில் உள்ள வெடிப்பில் வளரும் ஆலமரம் அரசமரம் ஆகியவற்றின் கன்றுகள் குன்றுகளிலும் கரடுகளிலும் வளராதா?
இந்தப் பணிகளில் வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்களைத் தவிர என்.சி.சி, என்.எஸ்.சி மற்றும் விருப்பமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்களையும் ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஓரிரண்டாடுகள் இந்தப் பணியைச் செய்தால் நாம் இயறகை வளத்தைப் பெருக்கி குறைந்துவரும் பருவ மழையின் அளவை அதிகரிக்கச் செய்து கோடையின் கொடுமையைக் குறைக்கலாம். இந்தப் பணிகளில் ஈடுபடுத்துப்படும் ஊழியர்களுத் தகுந்த ஊதியமும் மாணவர்களுக்கும் வேலையின்றி இருப்பவர்களுக்கும் ஊக்கத்தொகையும் கொடுக்கலாம்.
டாஸ்மாக் வருவாய் இழப்பை குறைந்த அளவிலாவது ஈடுகட்ட அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடமிருந்து சம்பளம் மற்றும் இதர படிகள் வாங்குவதை நிறுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இவர்களில் யாரும் ஏழைகள் அல்ல. அரசு வருமானத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. தேவையற்ற சுற்றுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளலாம். அரசு வாகனங்களை அரசுப் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த்வேண்டும். அவற்றை சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
இது தவிர பல ஆண்டுகளாக ஏரி குளங்கள் கால்வாய்கள் எல்லாம் தூர் வாரப்படாமல் கிடக்கின்றன. பணியிழக்கும் டாஸ்மார்க் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் வேலையில்லாதவர்களை எல்லாம் பயன்படுத்தி ஏரி குளங்களைத் தூர் வாரினால் அதிக மழை நீரை தேக்கி வைத்து வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம். டாஸ்மாக் கடையில் மது விற்பதைவிட நான் சொல்லும் பணிகள் கேவலமான பணிகள் அல்ல . குடியைக் கெடுக்கும் மதுவை விற்பது தான் மிகவும் கேவலமான செயல். சமுதாய முன்னேற்றத்திற்கு உழைப்பது போற்றத்தக்க செயலே.
அதிகாரிகள் அரசுப் பணியில் இருப்பது சுகபோகத்தை அனுபவிக்க அல்ல. நல்ல ஆலோசனைகளை அமைச்சர்களுக்கு வழங்கி அவற்றைச் செயல்படுத்தும் வழிகளை ஆய்ந்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல. நாட்டில் உள்ள பல துறைகளின் வல்லுநர்கள், ஆய்வாளர்கள், பொது மக்கள் ஆகியோரின் கருத்துக்களையும் அவ்வப்போது கேட்டறிய வேண்டும்.