தெய்வம் சான்ற திறல்-8
தெய்வம் சான்ற திறல்-8
ஒரு தேவாலயத்தின் போதகர் அங்கு இருந்த கூட்டத்தைப் பார்த்து இவ்வாறு கூறினார். “அடுத்த ஞாயிறு வழிபாட்டின்போது நான் பொய் சொல்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதைப் பற்றிப் பேசப் போகிறேன். அதனால், நான் கூறுவதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள ஏதுவாக திருவிவிலியத்தில் மாற்கு நற்செய்தியாளரின் 17ஆம் அதிகாரத்தை படித்து விட்டு வாருங்கள்” என்றார். அடுத்த வாரம் ஞாயிறு அன்று அவர் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். ”நான் சென்ற வாரம் கூறியபடி எத்தனை பேர் மாற்கு 17 ஆம் அதிகாரத்தைப் படித்தீர்கள்” என்று கேட்டார். கூடியிருந்த அ்னைவரும் தங்கள் கையை உயர்த்தினர். . அதைக் கண்ட அந்த போதகர், “பொய் சொல்வது மிகப் பெரிய பாவம் என்பது பற்றி உங்களிடம் நான் நிறைய நேரம் பேச வேண்டும். ஏனெனில் மாற்கு நற்செய்தியில் மொத்தம் 16 அதிகாரங்களே உள்ளன. ஆனால் நீங்கள் அனைவருமே 17ஆம் அதிகாரத்தை படித்ததாகக் கூறினீர்கள்” என்றார்
.இப்படித்தான் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைந்து இறைவனைக் காண சின்னங்கள் அடையாளங்கள் நம்புவோர்க்கு தொன்று தொட்டு உதவி புரிந்து வந்துள்ளன.
திருவிவிலியமும் திருக்குரானும் இறைவார்த்தைகள் கொண்டவை என நம்பப்படுகிறது. திருவிவிலியத்தை பல நூறு ஆண்டுகளாக பலர் தனித் தனி புத்தகங்கள் ஆக எழுதியதைத் தொகுத்து அளித்து இருப்பினும், தூய ஆவியின் தூண்டுதலால் அது எழுதப்பட்டது என அந்த மறையினை நம்புவோர் கூறுவர். திருக் குரானோ எனில், வானதூதர் ஆகிய கபிரியேல் சொல்லச் சொல்ல இறைத் தூதர் முகமது நபி அவர்களால் எழுதப்பட்டது என நம்புகின்றனர். இந்த திருக் குரானின்படி அடையாளங்கள் ஏதும் அந்த மறையினர் பின்பற்றுகின்றனரா என ஆய்வோம்.
இசுலாமியச் சின்னம், அடையாளம், குறி என திருக்குரானிலோ, இறைத் தூதர் முகமது நபியின் பொன் மொழிகள் அடங்கிய ஹடித்துகளிலோ ஏதுமில்லை. ஆயினும் கிறிஸ்துவர்கட்கு சிலுவையும் , யூதர்கட்கு தாவீதின் நட்சத்திரமும் இருப்பதுபோல் தங்கட்கும் ஒரு சின்னம் இருந்தால் நலம் என இசுலாமியப் பெருமக்களும் விழைகின்றனர். இன்று இசுலாத்தின் சின்னம் என நாம் காண்பவை அனைத்தும்முந்தைய பேரரசுகள் மற்றும் இன்றைய அரபு தேசியவாதத்தி்னர் பயன்படுத்திய அடையாளங்களே. இவற்றிற்கும் இசுலாமிய விசுவாசத்திற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. ஆயினும் காலப் போக்கில் பல்வகை சின்னங்கள் இசுலாத்தின் சின்னங்களாய் மாறி விட்டுள்ளன.
இவ்வகை சின்னங்களுள் மிகப் பிரபலமான ஒன்று பிறை நிலவும் நட்சத்திரமும ஆகும். ஆனால் இதனை சின்னம் என முறைப் படுத்தி திருக்குரானில் ஏதும் கூறப்படவில்லை. பின் இது எப்படி மக்கள் விரும்பிப் பயன்படுத்தும் சின்னமாக மாறியது என ஆயுங்கால், அது ஆட்டோமான் பேரசுக்கும் இசுலாத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகும். இந்தப் பேரரசு 1299—1922 வரை நீண்டு சுமார் ஏழு நூற்றாண்டுகள் நிலவிய ஒன்று என்பதாலும், அதன் கொடியில் உள்ள பிறை நிலவும் நட்சத்திரமும் இசுலாத்தைப் பிரதிபலிப்பதாகக் கொண்டனர்.. இறைத்தூதர் முகமது நபி அவர்கள் இதைப்பற்றி ஏதும் கூறவில்லை. ஏனெனில் அவர் இறைவன் அடி சேர்ந்த சில ஆண்டுகட்குப் பின்னரே இது தோன்றியது. பெரும்பான்மை முஸ்லிம் பெருமக்கள் இதனை சின்னமாக, அடையாளமாக ஏற்பினும் அது சரியல்ல.
சுமேரிய நாகரிகத்துடன் தொடர்பு உடைய நட்சத்திரம் மற்றும் பிறை நிலா சின்னம் உண்மையில் சூரிய கடவுள், நிலவுக் கடவுள், பெண் தெய்வம் ஆகிய டயானாவை குறிப்பது என்பதும் இவ்வழக்கம் கி.மு, 2100இல் தோன்றியது என்பதும் வரலாறூ அரிஞர்களின் கூற்று . .இதுவே ஆட்டோமான் பேரரசின் யுத்தக் கொடிகளில் பயன்படுத்தப்பட்டு அதன் கீழ் “ நசர் உம்மின் அல்லாஹ்“ என்ற வரிகள் எழுதப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
சவூதி அரசின் கொடியில் “ஷஹதா” எனப்படும் இசுலாத்தின் விசுவாச அறிக்கையும், படுக்க வைத்த வாள் ஒன்று அதன் கீழ் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒருவர் முஸ்லிம் ஆவதற்குச் சொல்ல வேண்டிய விசுவாச அறிக்கை ஆகிய
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,
நஹ்மதுஹூ வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்---
“அல்லாவே ஒருவரே கடவுள், அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை, முகமது நபி அவரது தூதர்” எனும் பொருள் தொனிக்கும் நம்பிக்கையின் பகிரங்க அறிவிப்பு இது என்பதால், இதனை ஒரு சின்னமாக ஏற்கலாம்.
மேற்கானும் இரு சின்னங்கள் தவிர, எண்கோண நட்சத்திரம் என்பது இசுலாமியக் கொடிகளில், மசூதிகளில், தொழுகைக் கூடங்களில், மற்றும் திருக்குரானில் அட்டைப் படத்தில், அதிகாரப் பிரிவுகளை, வசனங்களை வகைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் இதுவும் இசுலாத்தின் சின்னமல்ல. மாறாக இப்படிப்பட்ட வரைபடங்கள், சித்திரங்கள் செதுக்கப்பட்ட உருவங்களை இசுலாம் மதிப்பதே இல்லை. எனவே கடந்த கால இசுலாமியர் அரபு மொழி வடிவினையும், இதர வடிவங்களையும் இசுலாமிய வடிவங்களில் அழகு சேர்க்க பயன்படுத்தினர். இந்த எண்கோண நட்சத்திரம் அதன் விளைவே ஆகும்.இது இரு சதுரங்களை ஒன்றன் மீது ஒன்றாய் எட்டு கோணங்கள் தெரியும்படி வைப்பது ஆகும். இது திருக்குரான் வாசிப்பதற்கு உதவும் ஒரு கருவியாக மட்டுமே உதவும்.
சில வண்னங்கள் மட்டும் இசுலாத்தின் சின்னங்கள் ஆகி விட்டுள்ளன. அவற்றில் பச்சையும் வெள்ளையும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பச்சை வண்ணம் பல நூற்றாண்டுகளாக சம்பத்தப்பட்டது என்பது திருக்குரானில் அல்லாஹ்வே குறிப்பிடுவதாலும், விண்ணக வீட்டில் உள்ளோர் அனைவரும் அணிந்திருக்கும் ஆடையின் நிறம் அது எனக் குறிப்பிட்டு இருப்பதாலும் இவ்வண்ணம் முக்கிய இடம் பெறுகிறது. இசுலாமிய காலிப்புகள் காலத்தில் உமயாத் காலிப்பு என்பவர் வெள்ளைக் கொடியும், அப்பாசித் காலிப்பு கருப்புக் கொடியும் பயன்படுத்தியதால், இன்று அரபு நாடுகள், சிவப்பு, வெள்ளை, பச்சை, கருப்பு ஆகிய வண்னங்களை தத்தம் கொடிகளில் பயன்படுத்துகின்றனர்.
ஒரு சமயத்தின் அடையாளமோ, குறியோ, சின்னங்களோ எதைக் குறிக்கின்றது என நோக்குங்கால், பலருக்கு பல நேரங்களில் அவை புனிதப் பொருளாகவும், சிலருக்கு அவை அவரை இந்த மறையினர் என அடையாளம் காட்டவும் உதவுகின்றன.
ஒரு குறிப்பிட்ட மறையினரின் கலாச்சாரம், வரலாறு பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள், ஆன்மிகம் கட்டுமான கலைத்திறம், அலங்கார வடிவம் ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும், வழிபாடுகளில், பூசனைச் சடங்குகளில் பயன்படுத்துவதையும் காண்கிறோம்
ஹம்சா, பாத்திமாவின் கை, கைகளில் கண், ஹமேஷ் கரங்கள், சம்சா என்றும் கூறப்படுபவை பாதுகாப்பு கவசங்கள் ஆகும். செமிடிக் மொழியின் மூலச் சொற்படி “ஐந்து” --, இசுலாத்தின் ஐந்து தூண்கள் எனப்படும். இந்த ஐந்து தூண்கள் என்னவென்று பார்த்தொமெனில் அவை,
1.ஷாஹதா எனும் நம்பிக்கையின் அறிக்கை,
2.சலாஅஹ் எனப்படும் ஐந்து வேளை தொழுகை,
3. சாவ்ன் எனப்படும் உண்ணா நோண்பு,
4. ஜகாஹ் எனப்படும், 2.5% சொத்து வரியாக தான தருமம் செய்தல்,
5. ஹாஜ் எனப்படும் புனித திருத்தலங்கட்கு ஹிஜ்ஜா காலங்களில் திரு யாத்திரை செல்லுதல் ஆகியவை ஆகும்.
இந்த சின்னங்கள் தாயத்தாகவும், கண் அல்லது திருஷ்டி படுவதற்கு எதிர்ப்பு சக்தியாகவும், கழுத்தில், சுவற்றில், கதவுகளில் தொங்க விடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
“பிஸ்மில்லா” என அரபு மொழியில் எழுதி, “அல்லாஹ்வின் பெயரால்” என்றும் எழுதி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என கருணை உள்ளம் கொண்ட மாட்சிமை படைத்த இறைவன் என்ற துவக்க சொல் சாப்பிடு முன்னரும், ஒரு நற்செயலைத் துவக்குவதற்கும் முன்பும் சொல்லப்படுகிறது,.
இசுலாத்தின் இறைவன், ஏகன் என்ற கொள்கையாலும், இறைவனைத் தவிர பிற படைப்பாளி எவரும் இல்லை எனும் நம்பிக்கையாலும், சித்திரமாக, சின்னமாக குறியாக, அடையாளமாக எதையாவது கொண்டால் அது இறைவனின் படைப்பு உரிமையை மனிதர் தவறுதலாக எடுத்துக் கொள்ளும் ஆணவப் பாவம் என்பதாலேயே எந்த சின்னத்தையும் கொள்வதில்லை. ஆயினும், அவர்களது நம்பிக்கை அறிக்கை எனப்படும் ஷாஹதா மட்டும் அரபு மொழியில் காலிகிராஃபி லிபியில் எழுதப்பட்டு வருகிறது
இவ்வாறு மறைகள், சமயங்கள் அனைத்தும் நம்பிக்கையின் அடிப்பட்டையில் இயங்குவதால், நம்பிக்கை என்றால் என்னவென்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

