நம்மை நாடியவருக்கு உதவுவோம்
நம்மை நாடியவருக்கு உதவுவோம்!
...........................................................
அமைதியே வடிவான புத்தபிரானுக்கு மேளம் அடிப்பதில் அலாதி இன்பம் தெரியுமா! அவரது கையில் எப்போதும் ஒரு மேளம் இருக்கும்.
யார் தனக்கு பெரிய அளவில் காணிக்கை தருகிறார்களோ, அப்போது மகிழ்ச்சியுடன் அந்த மேளத்தை அடித்து, தானம் அளித்தவரின் பெருமையைப் பறைசாற்றுவார். ஒரு சக்கரவர்த்திக்கு இந்த விஷயம் தெரியவந்தது.
தானம் அளிப்பதில் தன்னை விட உயர்ந்தவர் யாரும் இருக்கக் கூடாது. தனக்கு மட்டுமே அந்தப் பெருமை சேரவேண்டும் என்ற எண்ணத்தில் யானைகளில் முத்து, பவளம், வைரக்கற்கள், தங்கக்கட்டிகள், பழம், உணவு வகைகளை ஏற்றிக்கொண்டு சென்றார்.
வழியில் ஒரு மூதாட்டி வந்தாள். மன்னர்பிரானே..!
புத்தர் பிரானைத் தரிசிக்க போய்க் கொண்டிருக்கிறேன். பசி உயிர் போகிறது! அவரைப் பார்ப்பதற்குள் என் பிராணன் போய்விடக்கூடாது.
ஏதாவது உணவளியுங்கள்,அவள் கேட்டதும், ஒரு மாதுளம்பழத்தை அவளிடம் வீசினார் மன்னர்.சற்று நேரத்தில், அவர் புத்தரின் இருப்பிடத்தை அடைந்து தானத்தைச் செலுத்தினார். தன் தானத்தின் அளவிற்கு, புத்தர் ஒரு அரைமணி நேரமாவது மேளம் அடிப்பார் எனக் கருதினார். புத்தர் எழவே இல்லை.
அரசர் அதிர்ச்சியில் உறைந்திருந்த நேரத்தில், மாதுளம்பழம் பெற்ற மூதாட்டி அங்கு வந்தாள். புத்தரின் காலடியில் அரசரிடம் பிச்சையாகப் பெற்ற மாதுளம் பழத்தைச் சமர்ப்பித்தாள்.
புத்தர் எழுந்தார். மேளத்தை வேகமாக அடித்தார்.
அரசருக்கு கோபம்.
புத்தரே!
இதென்ன அநியாயம்! இந்தக்கிழவி ஒரு பழத்தைத் தந்ததற்காக மேளம் அடித்தீர்கள். நான் இவ்வளவு காணிக்கை கொடுத்தும் எழாமல் இருந்தீர்களே!.
புத்தர் பதிலளித்தார்:
மன்னா!
நீ காணிக்கை அளித்ததன் நோக்கம் உன் புகழ் வெளிப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்திற்காக!
இவளோ,
உன்னிடம் பிச்சையாகப் பெற்ற பழத்தை, கடும் பசியிலும் கூட சாப்பிடாமல், உயிர்போனாலும் போகட்டும் என்று என்னிடம் அளித்தாள்.
தானத்திலேயே உயர்ந்த தானம், தன்னுயிர் பிரியும் இருந்தாலும், அதையும் பொறுத்துக் கொண்டு பிறருக்கு உதவுவதே! என்றார்.
மன்னனின் குனிந்த தலை நிமிரவில்லை.
ஆம்,நண்பர்களே.,
அறிவு வளர்ச்சி இல்லாதவர்களுக்கு எந்தவித ஆதாயம் பாராமல் உதவ வேண்டும்.
ஆதரவு இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும்
ஆறுதல் அளிக்கும்படி இயன்ற அளவு உதவ வேண்டும்!
ஊனமுற்றவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கு
உள்ளுணர்வோடு, ஒருமனதோடு உதவ வேண்டும்!
கல்லாதவர்களுக்கும், நம்மை நாடி வந்தவருக்கு
கள்ளமில்லாமல், நல்லுணர்வு காட்ட வேண்டும்.
தன்னை உணராதவருக்கும், மனதால் பாதிக்கப்பட்டவருக்கும்
முழுமனதோடு தன்னலமில்லாமல் பரிவு காட்ட வேண்டும்.
நம்மை நாடியவருக்கு உதவுவோம்!