கணிப்பு -சிறுகதை- சந்தோஷ்

அந்தப் பேருந்து நிறுத்ததில் நான் செல்ல வேண்டிய பேருந்துக்காக காத்திருந்தேன். நடு வீதியில் பேருந்தை நிறுத்தி இரு போக்குவரத்து அலுவலர்கள் பயணச் சீட்டு சரி பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னால் நிற்கும் வண்டிகள் ஓயாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.. இரைச்சல் தாளாமல் சாலை ஓரம் செல்லும் பொழுதுதான் அந்த நிகழ்வை கவனித்தேன்.

அந்தப் பெண் 6"x 6" பூந்துவலை கைக் குட்டையால் மூக்கை வினோதமாக்ப் பிழிந்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் பார்த்தபின்தான் புரிந்தது கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்து கொண்டிருந்தது... கைப் பேசியில் யாருடனோ பேசப் பேசப் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்... வயது சுமார் இருபதுக்குக் கீழ்.. மாநிறம்.... எதிர்கால நடுத்தரவர்க்கம்....

எனக்கு அந்த பெண் அழுவதைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது... சட்டென்று சென்று என்ன என்று கேட்கவும் தயக்கமாகவும் இருந்தது... அந்த இடத்தை விட்டு அகலலாம் என்றால் நான் செல்ல வேண்டிய பேருந்தும் வரவில்லை.... கைப்பேசியை எடுத்து ஓலா ஆப் தடவினேன்.... இணைப்பின் வேகத்திற்கு ஏற்ப தடுமாறி இருப்பிடம் அறிந்து, செல்லும் இடம் கேட்டது... எவ்வளவு முயன்றும் அதற்குமேல் ஆப் நகரவில்லை..... கடுப்பில் அடுத்து வந்த வண்டியில் ஏறிவிட்டேன்.....

.......

” யாரவள்? யாரவள் ? ஏன் அழுகிறாள்..? எதற்கு அழுகிறாள்? நடுச்சாலையில் ஒரு கன்னிப்பொண்ணு அழுகிறாளே “ பொதுவாகவே ஆண்கள் மீது வந்திடாத கரிசனம். உதவி மனப்பான்மைக் குணம் பெண்கள் மீது வந்துவிடும் எனக்கு. ஆம் சாராசரி ஆண்களை போலத்தானே நானும்.. பெண் கண்ணீர் சிந்தினாள் என்றால் பேயும் கொஞ்சம் மனமிறங்கும் அல்லவா. மனமிறங்கியது. நான் ஏறிய பேருந்திலிருந்து நானும் பாதி வழியிலே இறங்கினேன். அந்த பெண் நின்ற இடத்திற்கு சென்றேன்.

இன்னும் அதே இடத்தில் நின்று அழுதுக்கொண்டிருந்தாள். அவளின் கையிலிருந்த கைக்குட்டையின் ஈரம் அதிகமாகியிருந்தது. அருகில் சென்று கேட்கலாமா என துணிந்தேன். ஆனால் தயங்கினேன். அவள் “ உன் வேலய பார்த்து போடா “ ந்னு சொல்லிட்டா.அசிங்கமா போயிடுமே... எண்ணினேன். இருந்தாலும் அவளை நெருங்கினேன்.

“ எக்ஸ்கியூஸ் மீ...” என்றேன்.

நாசியிலிருந்த கைக்குட்டையை விலக்கி சிவந்த மூக்கோடு அவள் முகத்தை என் பக்கம் திருப்பினாள். என்ன என்பதுப்போல அவளின் இருபுருவமும் கேள்விக்குறி வளைவுப்போட்டது. அவள் பேச தயாராக இல்லை என்பதாக உறுதியாகியது ..

“ இல்ல.. ரொம்ப நேரமா. நின்னுட்டு இருக்கீங்க.. அழுதுட்டும் இருக்கீங்க.. எதாவது ப்ராப்ளமா? என்னோடு ஹெல்ப் எதாவது....? “

எதாவது ஏடாகூடாமாக என்னை திட்டிவிடுவாளோ என்கிற பயம் கலந்த ஒரு கூச்சம் என்னை தொற்றிக்கொண்டது உண்மைதான்.. என்றாலும், அவளின் அந்த நிலைக்கு காரணம் என்ன என அறிந்திடும் ஆவலில் பயத்தை மீறி என் வார்த்தைகள் வெளியேறி வெற்றிப்பெற்றன.

கண்ணீர் சூழ்ந்த மைவிழியால் என்னை நோக்கினாள். சற்று உற்றும் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. அவளிடம் மெளனங்கள் மட்டும் என்னை வந்தடைந்தன.. பொதுவாகவே பெண்களின் மெளனத்திற்கு எப்படியான அர்த்தங்களை எடுத்துக்கொள்வது எனத்தெரியாமல்தானே பாதியளவு ஆண்கள் பித்துக்கொண்டு அலைகிறார்கள். நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?

“ சின்னப் பொண்ணா வேற இருக்கா. காதல் கீதல்ன்னு எவனாவது ஏமாத்திட்டு விட்டுட்டு போயிட்டானா.. ? இல்ல.. காலேஜ் செமஸ்ட்டர்ல பெயில் ஆகிட்டதுனால இருக்குமோ..? அதுவும் இல்லைன்னா வீட்டுல அம்மா அப்பா எதாவது திட்டிவிட்டதுனால சின்னவயசு ரோஷத்தில வீட்டைவிட்டு வெளியேறி . என்ன பண்றதுன்னு தெரியாமா அழகிறாளோ ? அய்யோ என்னான்னு தெரியலைன்னா தலவெடிச்சிடும் போலிருக்கே...” நான் தான் மனதுக்குள் புலம்பிக்கொண்டிருந்தேன்.

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க. நான் உங்களுக்கு உதவி செய்றேன். எனக்கும் டைம் ஆச்சு..ஆபிஸ் போகணும் “ என்று பிடிவாதமாக நானும் கேட்டேன்.

“உன்ன யாரு கூப்பிட்டா. வேலய பார்த்து போகவேண்டியதுதானே...” என கேட்டுவிடுவாளோ..? என் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. ஏதோ எனக்குள்ளே நாம அவமானப்பட போறாமோ என எண்ணத் தோன்றியது. ”சரி வெளியூர்தானே.. எவன் பார்க்கப்போறான். ?பாவம் ஒரு பொண்ணு தனியா அழுதிட்டு இருக்கு. எவனும் கண்டுக்க மாட்டிங்கிறான்.நம்ம வீட்டு பொண்ணா இருந்தா இப்படி விட்டுட்டு போவோமா.” என் மனமே என்னை சமாதானப்படுத்திக்கொண்டு மீண்டும் அந்த பெண்ணிடம் பேசத்தூண்டியது.

“ அட என்னம்மா.. பிரச்சினை.. ?வாய தொறந்துதான் சொல்லுங்க.. எதுனா இருந்தா நான் உதவுறேன்னுதானே சொன்னேன்.” கொஞ்சம் கடுப்புடன் கேட்டுவிட்டேன்.

இம்முறை அவளிடம் சற்று மாற்றம் தெரிந்தது, இரண்டி அடி விலகி நின்ற என்னை நோக்கி.. ஒரு அடி காலடி வைத்து நகர்ந்து வந்தாள். அவளின் முகத்தில் ஏதோ ஒரு தெளிவு இருந்தது. கிட்ட நெருங்கினாள். கைக்குட்டையால் கடைசியாக தன் நாசியை குடைந்து அழகையை நிறுத்த முயற்சி செய்து.. தழுதழுத்தக் குரலில்.....

“ அண்ணா..............”

“என்னது அண்ணாவா ? .. ஹம்ம்ம்ம் தமிழ்நாட்டுல கன்னிப்பொண்ணுங்க பாதிபேர் என்னை இப்படியே கூப்பிட்டா என் கதி .? எப்போதான் கல்யாணமாகும்....? சரி.. இவளோடு சேர்த்து மொத்தம் 1007 வது தங்கச்சி.. “ மனதுக்குள்ளே பாசமாக நொந்துக்கொண்டாலும்.. அந்த புது தங்கைக்கும் உதவும் ஆவல் உற்சாகமூட்டியது.

“ ம்ம் சொல்லும்மா தங்கச்சி “

“ கிண்டில இருந்து 45பி பஸ்ல வந்தேன்னா.. வரும்போது எவனோ என்னோடு பர்ஸ் பிக் பாக்கெட் அடிச்சிட்டான் அண்ணா. இப்போ செக்கிங் வந்துட்டுட்டாங்க. பஸ் பாஸ் என் பர்ஸ்லதான் இருந்துச்சி.. “

“ ஓ சரிம்மா.. இப்போ நான் என்ன பண்ணனும்... ? “

“ 500 ரூபிஸ் இருந்தா........ அவங்கிட்ட கொடுத்திட்டு.. நான் அடுத்த பஸ்ல காலேஸ் போயிடுவேன். “

“ எந்த காலேஜ் மா ? ? “

“ கியூன் மேரிஸ் “

’அந்த தங்கை பேருந்து பரிசோதகரின் கெடுப்பிடியில் பயந்துதான் அவ்வாறு அழுதுக்கொண்டிருந்தாள் என ஊர்ஜிதமாகியது எனக்கு. ஆனாலும்..அந்தப் பெண் கூட தோழிகள் யாருமில்லையா..? .’ கேள்விகள் என் மனதுக்குள் தான் எழுந்தன. வெளியேறி அவளிடம் கேட்கத் தோன்றவில்லை.

“ இந்தாம்மா.. 600 ரூபீஸ் இருக்கு... வச்சிக்கோ..” என்று சொல்லிவிட்டு அவளின் நன்றியை கூட நான் எதிர்பார்க்காமல்.. என் அலுவலகத்திற்குச் செல்ல அவசரப்பட்டு OLA App ஐ என் மொபைலில் இயக்கினேன். இம்முறை சரியாக இயங்கியது.

அந்த தங்கையான நங்கையும் பரிசோதகரிடம் அபாரதத்தை செலுத்திவிட்டு.....மீண்டும் என்னிடம் வந்தாள்.

“ தேங்க்ஸ் அண்ணா..ரொம்ப தேங்கஸ்.. யாருகிட்ட கேட்பதுன்னு தெரியாமத்தான் . ஊர்ல இருக்கும் என் அம்மாகிட்ட சொல்லி அழுதிட்டு இருந்தேன். இன்னிக்கு காலேஜ் லீவுனால.. ப்ரெண்ட்ஸ் கூட வரல.அதானால தான் இபப்டி ஆச்சி..”

“ ஓ.. காலேஜ் லீவா ? “ என கேட்டுவிட்டு...
என் மனதிற்குள் “ அப்புறம் என்னாத்துக்கு வந்தீயாம்.. லவர் எவனையாவது மீட் பண்ணவா ? “ நானே பேசிக்கொண்டது அவளுக்கு கேட்டுவிட்டதோ என்னவோ தெரியவில்லை.

”இன்னிக்கு காலேஜ்ல அனாதை குழந்தைகளுக்கு லயன்ஸ் கிளப் மூலமா ஒரு ஸ்பெஷல் டியூசன் எடுக்கிறாங்கன்னா. நானும்...போயி சொல்லிக்கொடுப்பேன். டைம் ஆச்சின்னா.. உங்க நம்பர் கொடுங்க .. நான் அப்புறமா பேசுறேன். ”

என் கன்னத்தில் ஓங்கி யாரோ அறைந்தது போலத்தோன்றியது. அடச் சே.. கொஞ்ச நேரத்தில ஒரு பொண்ணை பற்றி எப்படி எப்படிலாம் தப்பு தப்பா கணித்துவிடுறோம்.. ஆண்களுக்கே உள்ள புத்தியா இது... ?இல்ல என்னோட புத்தியா..? இல்ல இந்த சமுதாயத்தில பெண்கள் மீது வைக்கப்படும் பார்வையின் பாதிப்பா ? இல்லன்னா என்னோடு குணக்கட்டமைப்பு பிழையா ? மனம் கூனி குறுகியது.

“ எக்ஸ்கியூஸ் மீ அண்ணா.. டைம் ஆச்சி . கிளாஸ் ஆரம்பிச்சிடுவாங்க.. நான் கிளம்புறேன்... “

“வெயிட் மா .. கார்ல போகலாம்..... நான் உன்னை காலேஜ்ல டிராப் பண்ணிடுறேன்.. “

“ தேங்கஸ் அண்ணா......” என்றாள் அந்த தங்கத் தங்கை.



***

குறிப்பு: கதையின் முதல் பகுதியான ஒரு பெண் நடுச்சாலையில் அழுதப்படியே யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் நிகழ்வை தொடர்ந்து மீதி பகுதி கற்பனையாக எழுதப்பட்ட கதை. நிகழ்வை சொல்லி கதையாக புனைய வாய்ப்புத் தந்த முரளி அய்யாவிற்கு நன்றி.

இதே நிகழ்வை அடிப்படையாக எடுத்து “ உயிர்” எனும் சிறுகதையை முரளி அய்யாவும் எழுதியுள்ளார்.



-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (25-Aug-15, 9:27 pm)
பார்வை : 280

மேலே