அப்பாவா இப்படி

அப்பா அம்மாவிடம் சொன்னதைக் கேட்டதும் வருணுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் உடனே எழுந்து போனால் சரியா வராது என்று நினைத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மனசுக்குள் மட்டும் எப்படி இப்படி என்ற எண்ணம் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருந்தது.

இது நடக்கக்கூடிய காரியமா...? இது எப்படி சாத்தியமானது..? அப்படியா... இப்படியா... என எப்படி யோசித்துப் பார்த்தாலும் அவனுக்கு எப்படி நடந்திருக்கும் என்ற விடை மட்டும் தெரியவில்லை. அதற்கான விடை தெரியவில்லை என்றால் மண்டைக்குள் எழும் அப்படி இப்படியான கேள்விகளால் மூளை சிதறிவிடும் போல் இருந்ததால் கொஞ்சம் ரிலாக்ஸிற்காக வடிவேலு காமெடி பார்க்க ஆரம்பித்தான். அதில் இவன் அதுக்கு சரிவரமாட்டான் என்ற காமெடி ஓடிக்கொண்டிருக்க எதுக்கு சரிவரமாட்டான்னு வடிவேலு தெரிஞ்சிக்க அலைஞ்சிக்கிட்டுருந்தாரு... அதைப் பார்த்ததும் இது எப்படி நடந்திருக்குமென மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தான்.

நம்ம அப்பா எப்ப சிம்புவோட அப்பாவா மாறுனாருன்னு யோசிச்சான்... நீங்க டிஆர்ன்னு நெனச்சா அது தப்பு... என்னா அவரு ரொம்பக் கூவுறாரு... இவரு கூவவே மாட்டாரு... எதையும் கமுக்கமாத்தான் செய்வாரு... ஆனா இவனைத் திட்டுறதை மட்டும் பக்கத்து வீட்டு நந்தினிக்கு கேக்குற மாதிரித்தான் திட்டுவாரு... அதுவும் கரெக்டா அவ காலேசுக்குப் போகும்போது வாசல்ல நின்னு அத்தனை மாட்டையும் கூப்பிடுவாரு. .. இவனுக்கு அவ மேல ஒரு இது... அவளுக்கும் இவன் மேல கொஞ்சம் இது இருக்குங்கிறதை பார்வையும்... சிரிப்பும் சொல்லும்... இருந்தாலும் சொல்லவோ கேக்கவோ பயம்... என்னைக்காச்சும் ஒரு நாள் சொல்லிப்பான்... சரி விடுங்க... இது காதல் கதையில்லையே... எதுக்கு நாம அவன் காதல் பின்னால போகணும்... இங்க சிம்பு அப்பான்னு இவன் சொன்னது வாலு படத்துல சிம்புவுக்கு வர்ற அப்பா... ரொம்ப எதார்த்தவாதி... பையனைத் திட்டாத ஒரு நல்ல அப்பா... அப்பா அந்தப் படத்தைப் பார்த்துட்டு மாறிட்டாரோன்னு நினைச்சிக்கிட்டான். இருந்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் ரொம்பக் கம்மியேன்னு அவன் மனசு சொல்லிச்சு... காரணம் அப்பாவுக்கு சினிமா பிடிக்காது.



டிவியிலும் மனசு ஓடலை... எல்லாரையும் சிரிக்க வைக்கிற வடிவேலுவே அவனுக்கு போரடிக்க ஆரம்பிக்க, ஒவ்வொரு சானலாக மாற்றினான். 'ஏன்டா இப்படி மாத்திக்கிட்டே இருக்கே... கொஞ்ச நேரம் ஜோக் வையிடா'ன்னு கத்திய தங்கையை எப்போதும் கொலை வெறியோடு பார்ப்பவன், இன்று கொள்ளை அன்போடு பார்த்தான்.... சிநேகமாய் சிரித்தான்... 'ம்க்கும்.. இது இப்ப சிரிக்கும் அப்புறம் அடிக்கும் பேசாம எந்திரிச்சிப் போயிடலாம்' என்று எழுந்தவளை கையைப் பிடித்து இழுத்தான். என்னடா ரொம்ப பாசம் வழியுது என்றாள் பார்வையால்... 'அப்பா சொல்றது நிஜமாடி' கண்கள் விரியக் கேட்டான். 'எங்கிட்டே கேக்குறே... அப்பா அங்கதான் நிக்கிறாரு அவருகிட்ட கேளு... நீ ஒரு தண்டம்... அவரு ஒரு...' அதுக்கு மேல பேசாமல் படக்கென்று எழுந்து சென்றாள் .அவளுக்கு இன்று அப்பா மேல் தனிப்பட்ட முறையில் கோபம்... எது கேட்டாலும் படிக்கிற புள்ளைக்கு எதுக்குன்னு திட்டுவாரு... ஆனா இன்று அவர் செய்த காரியம்... படிக்காத எருமைக்கு.... அதான் அப்பாவை '.......' என்று சொல்ல வைத்தது.

எப்படி என்று யோசிக்கவெல்லாம் நேரமில்லை... எது எப்படியோ நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். இனி... அதாவது இன்று முதல் நடப்பவை நல்லதாக அமையட்டும் என்று நினைத்தபடி அப்பா அம்மாவை விட்டு நகரும் வரை காத்திருந்து அவசரமாக எழுந்து அவளிடம் ஓடினான். ' எப்படிம்மா...?அவரு சொல்றது உண்மைதானா...?'என்று அவளின் தோள் சாய்ந்து கேட்டான். 'ரொம்பக் கொஞ்சாதே அவரு சொன்னது கேட்டுச்சுல்ல... உனக்கு கேக்கணுமின்னுதானே சத்தமாச் சொன்னாரு.... எங்கிட்ட வந்து உண்மையா பொய்யான்னு விசாரிக்கிறே?' என்று அவனைச் சீண்டினாள்.

'அப்பா.... அதுவும் நம்ம அப்பாவா... ஹிட்லராவுல்ல இருந்தாரு... எப்படி இப்படி மாறினாரு... எனக்குப் புரியவேயில்லை... அவருக்கிட்ட எப்பம்மா நான் பேசியிருக்கேன்... இல்ல அவருதான் எப்ப எங்கிட்ட நல்லாப் பேசியிருக்காரு... என்னைய பாத்தாலே அவருக்கு உள்ளுக்குள்ள எரிச்சல் எடுக்குது... நானா படிக்க மாட்டேன்னு சொன்னேன்... அது எங்கிட்ட வரலையின்னு சொல்லிருச்சு... சரி போன்னு விட்டுட்டேன்... வேலைக்குப் போ... வேலைக்குப் போன்னா... சிம் கார்டு மாதிரி வீதி வீதியா போட்டு ஒண்ணு வாங்குனா ஒண்ணு ப்ரின்னு வேலையை விக்கிறானுகளா என்ன... போயி புரூப் கொடுத்து வாங்கிக்கிட்டு வர, நானுந்தான் அலையிறேன்... கிடைக்கலை...' விஜபி தனுஷ் மாதிரி முகபாவனையை வைத்துக் கொண்டு பேசினான்.

'அப்பா... தம்பி... ராசா... உங்கப்பாரு முகம் கால் கழுவிட்டு சோபாவுல வந்து உக்காந்து டிவி பாக்குறாரு... நான் அவருக்கு காபி கொடுக்கணும்... நீ வேணுமின்னா அவருக்கிட்டே போயி கேளு' என்று அம்மா ஜகா வாங்க, 'ஆமா நா போயிக் கேட்டா கழுவிக் கழுவி ஊத்துவாரு... எனக்குத் தேவை பாரு...' என்று அகன்றாலும் இது எப்படி... அப்பாவா இப்படி... என்ற கேள்வி மட்டும் தொண்டைக்குள் தொக்கி நின்றது.

அப்போது வாசலில் சத்தம் கேட்டதும் எல்லோரும் எழ, முதல் ஆளாய் ஓடினான். அங்கே அப்பா அவனுக்காக வாங்கிய பைக்கை ஷோரும் பையன் ஓட்டி வந்து நிறுத்தினான். மாலை போட்டு பொட்டு வைத்திருந்த வண்டியைப் பார்த்ததும் அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை... 'என்னடா கலரு பிடிச்சிருக்கா...?' என்று பின்னாலிருந்து கேட்ட அப்பாவின் வாயில் முதன் முதலாக 'தண்டச் சோறு... முண்டம்... தறுதலை... வெட்டிப்பய... ஊருசுத்தி... ' எல்லாம் வரவில்லை... அப்பாவிடம் நிறைய மாற்றம்... எப்படி இது நடந்தது...? என்ற கேள்வி எழ, இனி எதுக்கு அதெல்லாம் எப்படியோ நடந்திருச்சு... என்று கேள்வியை அடக்கி ஆச்சர்யக்குறியாக்கி அப்பாவை ஒரு பார்வை பார்த்து மீண்டும் வண்டிக்கு திரும்பினான். மனசு மட்டும் வண்டியில் கை வைக்கத் துடித்தது, ஆனால் அவரு பாட்டுக்கு அர்ச்சனையை ஆரம்பிச்சிட்டான்னு யோசிச்சு பேசாமல் நின்னான்.

சாவி நீட்டிய பையனிடம் காசு கொடுத்தபடி' தம்பிக்கிட்ட கொடுப்பா' என்றவர், 'போயி சாமிய கும்பிட்டுட்டு வா' என்றார். ஓடிப்போய் தீபாவளி அன்று பலகாரம் சுட்டதும் சாமிக்கிட்ட வச்சி கும்பிடு என்று அம்மா சொல்லும் போது வேகமாகப் போயி சாமிக்கு முன்னாடி வச்சிம் வைக்காமலும் விபூதியை பூசிக்கிட்டு வாய்க்குள் வைக்கும் அதே வேலையை படபடவென செய்து விட்டு வண்டிக்கு ஓடியாந்தான். அவனது பரபரப்பு அவர்களுக்கு இதழோரத்தில் சிரிப்பை வரவைத்தது.

'வண்டியை எடுத்துக்கிட்டு சுத்தாமா...இனியாச்சும் ஒரு வேலை தேடிக்கச் சொல்லு... அவனுக்கு பின்னால பொட்டப்புள்ள ஒண்ணு இருக்குங்கிற நினைப்பு இருக்கட்டும்...' என்று அம்மாவிடம் அப்பா சொல்லிக் கொண்டிருக்க, அதை எல்லாம் கண்டுக்காமல் தங்கையை தேடினான்... முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்து குரூரமாய் சிரித்தபடி எல்லாம் மறந்து பறக்கலானான்... எதிரே அதே புன்னகையில் நந்தினி... அவளைப் பார்க்கும் வரை அவனது அப்பா ஹீரோவாகத் தெரிய, பார்த்த பின் வருண் ஹீரோவானான்.

-----------------

(இது முதலில் கவிதையாய்த்தான் உருவானது. கவிதையை அப்படியே கதையாக மாற்றுவோமே என்ற முயற்சியில் கவிதையில் விதை எடுத்து கதை ஆக்கியாச்சு... என்ன அங்கங்கே மானே தேனே பொன்மானே போடுற மாதிரி நந்தினி, அம்மா, தங்கை கதாபாத்திரங்கள் இணைத்தாச்சு... கவிதையில் அப்பா வாங்கி வந்ததைப் பற்றி உண்மையா என்று மகன் யோசிப்பதாய் எழுதி கடையில் வாசலில் ஸ்கூட்டர் என்று எழுதியிருந்தேன்...)

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (29-Aug-15, 12:20 am)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 417

மேலே