முருகா முருகா

காலை ஏழே கால் மணிக்கும், எட்டே கால் மணிக்கும் இடையே எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன?

’அறுபது’ என்கிறது கடிகாரம். ஆனால் நான் அதை நம்புவதற்கில்லை.
ஏனெனில், எங்கள் வீட்டில் தினந்தோறும் காலை நேரத்தில் நடக்கிற ஒரு மணி நேரக் கூத்து, அந்த அறுபது நிமிடங்களைக்கூட இருபதாகத் தோன்றச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அதைவிடக் குறைவாக, நேரம் நெகட்டிவ்வில் ஓடுகிறதோ என்றுகூட பயந்துபோகிறேன்!

இத்தனைக்கும் காரணம், ஏழே கால்: நங்கை துயிலெழும் நேரம், எட்டே கால்: அவளுடைய பள்ளி வாகனம் வந்து சேரும் நேரம். இந்த இரண்டுக்கும் நடுவே இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக்கொண்டு சமாளிக்கவேண்டிய பொறுப்பு எங்களுடையது.

உண்மையில், நங்கை ஏழே காலுக்குத் துல்லியமாக எழுந்துவிட்டால், பிரச்னையே இல்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காக முடித்துச் சரியாக எட்டே காலுக்கு அவளை வேன் ஏற்றி டாட்டா காண்பித்துவிடலாம்.
ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கிறது? நாங்கள் எழுப்பும்போதுதான், நங்கை ‘தூக்கக் கலக்கமா இருக்கும்மா(அல்லது ப்பா)’ என்று செல்லம் கொஞ்சுவாள்.
உடனடியாக, என் மனைவிக்கு முதல் டென்ஷன் தொடங்கும், ‘தூங்கினது போதும் எழுந்திருடி’ என்று அவளை உலுக்க ஆரம்பிப்பார்.

தூக்கக் கலக்கக் கொஞ்சல் சரிப்படவில்லை என்றதும், நங்கை ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தாள், ‘இரும்மா, காலையில எழுந்ததும் ஒரு ஸ்லோகம் சொல்லணும்ன்னு பாட்டி சொல்லிக்கொடுத்திருக்கா, நான் அதைச் சொல்லிட்டுதான் பல் தேய்க்க வருவேன்’

என் மனைவியின் பலவீனங்களில் ஒன்று, சாமி, பூஜை, ஸ்லோகம் என்றால் அப்படியே உருகிவிடுவார். குழந்தையின் பக்தியைத் தடை செய்யக்கூடாது என்று கிச்சனுக்குத் திரும்பிவிடுவார்.

ஆனால், அந்த நேரத்தில் நங்கை நிஜமாகவே ஸ்லோகம்தான் சொல்கிறாளா என்று எனக்கு இதுவரை சந்தேகமாக இருக்கிறது. சும்மா பேருக்குக் கைகளைக் கூப்பிக்கொண்டு உட்கார்ந்தவாக்கில் தூங்குகிறாள் என்றுதான் நினைக்கிறேன்.
ஐந்து நிமிடம் கழித்து, கிச்சனில் இருந்து குரல் வரும், ‘என்னடி? எழுந்துட்டியா?’
‘இரும்மா, ஸ்லோகம் இன்னும் நாலு லைன் பாக்கி இருக்கு’

நங்கையின் அந்த மாய எதார்த்த ஸ்லோகம் முடியவே முடியாது, எப்போதும் ’நாலு லைன் பாக்கி’ நிலையிலேயே அவள் தரதரவென்று பாத்ரூமுக்கு இழுத்துச் செல்லப்படுவதுதான் வழக்கம்.

சரியாக இதே நேரத்தில்தான் என் மனைவியின் பொறுமை குறைய ஆரம்பிக்கும். பல் தேய்த்தல், ஹார்லிக்ஸ் குடித்தல், தலை பின்னுதல், குளித்தல் என்று ஒவ்வொரு வேலைக்கும் அவள் தாமதப்படுத்த, கன்னத்தில் கிள்ளுவது, முகத்தில் இடிப்பது, முதுகில் அடிப்பது என்று வன்முறையை ஆரம்பித்துவிடுவார்.

எனக்குக் குழந்தைகளை யார் அடித்தாலும் பிடிக்காது. இதைச் சொன்னால், ‘நீ சும்மா இரு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று பதில் வரும், தேவையா?
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நங்கையை நான் குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய்வது இல்லை. அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண்ணி அடி வாங்கிக்கொள்கிறாள்.

இதே நங்கையும் அவளுடைய அம்மாவும் மாலை நேரங்களில் இழைந்துகொள்ளும்போது பார்க்கவேண்டும். ஊரில் இருக்கிற, இல்லாத எல்லாக் கொஞ்சல் வார்த்தைகளும், முத்த மழைகளும் கணக்கின்றி பொழியப்படும். அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே சண்டை மூட்டிவிட எந்தச் சக்தியாலும் முடியாது என்று தோன்றும்.

ஆனால், மறுநாள் காலை? ’குடிகாரன் பேச்சு’ கதைதான் – ஏழே கால் தொடங்கி எட்டே காலுக்குள் நங்கைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு அடிகளாவது விழுவது, பதிலுக்கு அவள் எட்டூருக்குக் கேட்பதுபோல் அழுவது இரண்டும் சர்வ நிச்சயம்.
இப்படி மாலையில் கொஞ்சுவது, காலையில் அடித்துக்கொள்வதற்குப் பதில், என்னைமாதிரி அதிகம் கொஞ்சாமல், அதிகம் அடிக்காமலும் இருந்துவிடலாமில்லையா? இதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடி ஒரு ‘உனக்கு ஒண்ணும் தெரியாது’ பட்டம் வாங்கவேண்டியிருக்கும். எதற்கு வம்பு?
இந்த நிலைமையில், ஏழெட்டு நாள் முன்னால், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு யோகா குருஜி தோன்றினார். குழந்தை மருத்துவர்களுக்குமட்டுமே உரிய நிதானமான குரலில் வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கினார்.

அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், ‘குழந்தைகளை அவசரப்பட்டு அடிக்காதீர்கள். பொறுமையாக அன்பால் திருத்துங்கள், அவர்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்வார்கள்’

இதையே நான் சொல்லியிருந்தால், ‘அடி உதவறமாதிரி அக்கா, தங்கை உதவமாட்டார்கள்’ என்பதுபோல் ஒரு பழமொழி வந்து விழுந்திருக்கும். சொன்னவர் தாடி வைக்காத சாமியார், அதுவும் தொலைக்காட்சியில் தோன்றுகிற அளவுக்குப் பிரபலமானவர் என்பதால், என் மனைவி அக்கறையுடன் கேட்டுக்கொண்டார்.

குருஜி தொடர்ந்து பேசினார், ‘குழந்தைகளை அடித்துப் பழகியவர்களுக்கு, சட்டென்று அதை நிறுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அதற்கும் ஒரு சுலபமான வழி இருக்கிறது’

என் மனைவி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். இதுபோன்ற பத்து நிமிடத் தொலைக்காட்சி அறிவுரைகளில் ஆர்வம் இல்லாத நான்கூட, அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

கடைசியில், அவர் சொன்ன விஷயம், உப்புச்சப்பில்லாத ஒரு வறட்டு யோசனை: ‘கோபம் வரும்போதெல்லாம் குழந்தையை அடிப்பதற்குப் பதில் கைகள் இரண்டையும் உயர்த்தி முருகா, முருகா என்று ஏழெட்டு முறை சத்தமாகச் சொல்லுங்கள், கோபம் போய்விடும்’

இதைக் கேட்டபிறகு எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால் என் மனைவிக்குமட்டும் இந்த உத்தி நிச்சயமாக வேலை செய்யும் என்று தோன்றிவிட்டது.

இந்த நேரத்தில், நானாவது சும்மா இருந்திருக்கலாம், ‘உன்னால நிச்சயமா கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாது, முருகா முருகான்னு சொல்லிகிட்டே குழந்தையை அடிச்சு விளாசப்போறே’ என்று கிண்டலடித்துவிட்டேன்.
போதாதா? என் மனைவிக்கு இது ரோஷப் பிரச்னையாகிவிட்டது, ‘இன்னும் 30 நாள் நங்கையை அடிக்காம இருந்து காட்டறேன்’ என்று சபதம் போட்டார்.
எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும், ‘பார்க்கலாம்’ என்று மையமாகச் சொல்லிவைத்தேன்.

மறுநாள் காலை ஏழே காலுக்கு, நிஜமான சவால் நேரம் தொடங்கியது. ‘முருகா முருகா’ விஷயம் தெரியாத நங்கை வழக்கம்போல் எல்லாவற்றுக்கும் முரண்டு பிடித்தாள். ஆனால் பதிலுக்கு அம்மா தன்னை அடிப்பதில்லையே, அது ஏன் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை.

அதுகூடப் பரவாயில்லை. பூஜை அறையில் சொல்லவேண்டிய ’முருகா முருகா’வை, இந்த அம்மா ஏன் நடு ஹாலில், பாத்ரூமிலெல்லாம் சொல்கிறார்? அப்படிச் சொல்லும்போது அம்மாவின் பற்கள் நறநறப்பது ஏன்? கைகளைப் பிசைந்துகொண்டு கண்ணில் தண்ணீர் வர அப்படி ஓர் ஆவேசத்துடன் முருகாவை அழைத்து என்ன ஆகப்போகிறது?

ஆரம்பத்தில், என்ன நடக்கிறது என்பதே நங்கைக்கு விளங்கவில்லை. ஆனால் மறுநாள், விஷயத்தை ஒருவழியாக ஊகித்துவிட்டாள்.

அம்மா தன்னை அடிக்கப்போவதில்லை என்று தெரிந்ததும், அவளுடைய முரண்டுகள், குறும்புகள் இருமடங்காகிவிட்டன. ஒவ்வொரு விஷயத்தையும் வழக்கத்தைவிட மெதுவாகச் செய்ய ஆரம்பித்தாள், ‘முருகா முருகா’க்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்துக்கொண்டிருந்தது.

அதன்பிறகு ஒவ்வொரு நாளும், தன்னுடைய ‘முப்பது நாள், முப்பது பொறுமை’ சவாலைக் காப்பாற்றுவதற்காக என் மனைவி படுகிற பாடு இருக்கிறதே, அதை வைத்து முழு நீள நகைச்சுவை நாவலே எழுதலாம்! (பயப்படாதீர்கள், சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் :))

குருஜியின் ‘முருகா’ அறிவுரையை என் மனைவி பின்பற்றத் தொடங்கி ஒரு வாரமாகிறது. ஆச்சர்யமான விஷயம், இதுவரை நங்கைக்கு அடி விழவில்லை. ஆனால், இந்த நிலைமை அடுத்த வாரமும் தொடருமா என்பது சந்தேகம்தான்.
ஏனெனில், இந்த ‘முருகா’வையே மையமாக வைத்துப் பல புதிய குறும்புகளை உருவாக்கிவிட்டாள் நங்கை. வேண்டுமென்றே ஏதாவது செய்துவிட்டு, அம்மா முறைக்கும்போது, ‘சீக்கிரம், முருகா, முருகா சொல்லும்மா’ என்று வெறுப்பேற்றுகிறாள்.

இப்போது, என் மனைவிக்கு Catch-22 சூழ்நிலை. நங்கையின் பேச்சைக் கேட்டு ’முருகா, முருகா’ சொன்னால், அவளுக்கு இன்னும் தைரியம் வந்துவிடும், வேண்டுமென்றே வம்பு செய்வாள், குறும்புகளின் வேகம், சேதம் மேலும் அதிகரிக்கும்.

அப்படிச் செய்யாமல் ‘என்னையா கிண்டலடிக்கிறே?’ என்று குழந்தையை அடித்து விளாசவும் அவரால் முடியாது. ‘முப்பது நாள்’ சபதம் அவருடைய கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக, நான் இந்த விஷயத்தைப்பற்றிப் பேசுவதையே தவிர்க்கிறேன், பூஜை அறையில்கூட ‘முருகா, முருகா’ சத்தம் கேட்டால் சட்டென்று வேறு பக்கமாக விலகி ஓடிவிடுகிறேன்.

பின்னே? கோபம் ரொம்ப அதிகமாகி, நங்கைக்குப் பதிலாக என்னை அடித்துச் சபதத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று என் மனைவி தீர்மானித்துவிட்டால், நான் ‘முருகா’வைக் கூப்பிடமுடியாது, ‘ஆதிமூலமே’ என்று அலறினால்தான் உண்டு!
***

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (28-Aug-15, 11:29 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : MURUGAA MURUGAA
பார்வை : 260

மேலே