மரமும் பறவையும்
★என் இலைகளில்..
ஒட்டாது அதன் சிறகின் நிறங்கள்..
ஆனால் அது
என் விதைகளில் எழுதி..
என் வேர்களில் ஒட்டக்கூடும்.!
★இப்போதும் வந்துகொண்டுதான்..
இருக்கிறது ..
எங்கிருந்தோ சில அமர்வுகள்..
என் கிளை நோக்கி.!
★காற்று என் கிளைகளில்..
சிக்கெடுக்கும் அழகு கண்டு..
அது சிறகில் சிக்கெடுக்கும்
அதன் அலகு கொண்டு..
★என்னிலிருக்கும் துவாரங்களே..
குடையாகும் சில குருவிகளுக்கு..!
★என்னிலிருந்து பறந்துபோகும்..
பறவைகளே என்னை எடுத்துப்போகும்..
விதைகளாக திசையெங்கும்.!
★நான் கிளைவிரிக்கும் பறவை.
அது பறந்துபோகும் மரம்.
★பறவை எனக்குள் எழுதுவதும்..
நான் பறவைக்குள் எழுதுவதும்..
உங்களுக்கு புரியாத எழுத்துக்கள்.
மனிதன் தோன்றும் முன்னமே..அது
நாங்கள் உறவாடியதின் பதிவுகள்.!