நயந்த வார்த்தைகளுக்கு முன் சட்டென இளகும் அன்பினன் தமிழன்
சென்னை சர்வதேச விமான நிலையம்...
என் தந்தைக்கு மூட்டுவலி பிரச்சனை. ஏற்கனவே டெல்லி விமான நிலையத்தில் அதிக தூரம் நடந்ததினால் வலி அதிகமாகி தொடர்ந்து நடக்கவோ, ஒரே இடத்தில் நிற்கவோ முடியவில்லை. விமானச்சீட்டு பதிவின் போதே குறிப்பிட்டு சக்கரநாற்காலிக்கு கேட்டிருக்கலாம். செய்யவில்லை !
குடியேற்ற சோதனை அதிகாரியை நெருங்கி பாஸ்போர்ட்டுகளை ( பிரயாண உரிமைச்சீட்டு ! சரியா ?! ) கொடுத்தேன்.
" ஏர் இந்தியால வந்தீங்களா சார் ?! ஹூம் ! அவங்கமட்டும்தான் இதை மறப்பாங்க ! "
அவர் எங்கள் அனைவருக்குமாக ஐந்து நீண்ட படிவங்களை கொடுத்து நிரப்ப சொல்லிவிட்டார் ! பொதுவாக அந்த படிவங்களை விமானத்திலேயே கொடுத்துவிடுவார்கள். அனைத்துவிபரங்களையும் முன்கூட்டியே நிரப்பி தயாராக கொண்டுவரலாம் !
எனது விமான பயண வரலாற்றிலேயே முதல்முறையாக தாமதமின்றி சரியான நேரத்துக்கு வந்திறங்கிய தாய் மண்ணின் முதன்மை விமான நிறுவனத்தை ( இங்கு முதன்மை என்பது லாபத்தை குறிக்கும் சொல் அல்ல ! ) சிலாகித்துகொண்டிருந்ததால் அவர்கள் படிவங்களை கொடுக்க மறந்தது பெரிதாக படவில்லை !
நான் படிவங்களை நிரப்ப தொடங்க,
" அப்பா, அம்மா பிள்ளைகளை அங்க போய் உக்கார சொல்லுங்க சார் ! நீங்க மட்டும் இருந்தா போதும் ! "
நிற்க முடியாமல் தடுமாறும் என் தந்தையை பார்த்துவிட்டு அதிகாரி காட்டிய இடம் குடியுறிமை சோதனை மையத்துக்கு வெளியே தூரத்தில் இருந்தது. சட்டப்படி விசாவை சரிபார்க்காமல் அங்கிருந்து நகரக்கூடாது.
" பரவாயில்லை சார் ! வயசானவங்க... குழந்தைங்க.... "
எனது தயக்கத்தை படித்தவராய் பேசிய அதிகாரியின் குரல் மிக பரிச்சயமானது போல் தெரிய யோசித்தேன்... காரைக்காலில் எங்கள் குடும்ப மருத்துவரின் குரலை ஒத்திருந்தது அவரின் குரல். அதைவிட ஆச்சரியம் இருவருக்கும் ஒரே பெயர் !
இதையெல்லாம் அவரிடம் குறிப்பிட்டபோது ஒரு நண்பரை போன்ற சிரிப்புடன் கேட்டுக்கொண்டே தன் கடமையை செய்துமுடித்தார் !
பொதுவாக அனைத்து நாடுகளின், ஏன் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் கூட குடியுறிமை அதிகாரிகள் இறுகிய முகத்துடனேயே இருப்பார்கள். அதிகமாய் ஒரு வார்த்தை பேசினால் முறைப்பே பதிலாக கிடைக்கும் ! சலனமற்ற பார்வையுடன் இயந்திரம் போல சோதனைகளை முடித்து அனுப்புவார்கள் !
கிளம்புபோது அவரை திரும்பி பார்த்தேன். என்னுடன் வந்திருந்த பிரெஞ்சு மற்றும் ஆங்கில பயணிகளிடமும் அதே கனிவுடன் பேசிக்கொண்டிருந்தார் !
எனது பள்ளி பருவத்தின் என் சி சி கேம்பின் போது ஹிந்தி தெரியும் என்று பேச்சுவாக்கில் சொன்ன ஒரு நண்பனுக்கு தனக்கு வந்த சப்பாத்திகளில் ஒன்றை அனுப்பிய ஹவில்தாரும், ( பல தலைமுறைகளாக தமிழ்நாட்டிலேயே வசிக்கும் அந்த நண்பன் காய்ந்த சப்பாத்தியை விக்கலுடன் விழுங்கியபடி எங்கள் தட்டிலிருந்த் சோற்றை ஏக்கமாய் பார்த்தது வேறு விசயம் ! ) சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜட்டியுடன் நிற்க வைத்த மும்பை போலீஸ் அதிகாரி தான் ஹிந்தியில் பேசியதும் உடைகளை திருப்பி கொடுத்தை சொல்லும் என் நண்பன் ஒருவனின் அப்பாவின் அனுபவமும் சட்டென ஞாபகம் வந்தது !
சென்னை திநகர் பகுதியின் பரபரப்பான சரவணபவன்...
ஒவ்வொரு மேசையின் முன்னாலும் இடம்பிடிக்க வரிசை...
" தோ ! சீக்கிரமா முடிச்சிடறேன் தம்பி ! "
அவருக்கு பின்னால் நின்ற என்னை கண்டதும் இலையிலிருப்பதை அவசரமாய் விழுங்கியபடி பேசிய பெரியவரை பார்த்து அதிசயித்தேன் !
" ஒண்ணும் அவசரமில்லைங்க ! நீங்க பொறுமையா சாப்பிடுங்க ! "
" இல்ல தம்பி நான் முடிச்சிட்டேன் ! நீங்க பசியோட நிக்கறீங்கள்ல... ! "
மனிதர் அவசரமாய் எழுந்துவிட்டார் ! இத்தனை பாடுகளும் ஒரு ஞான் வயிற்றுக்குத்தான் ! அவர் ஒன்றும் இலவசமாய் சாப்பிடவில்லை ! கொடுத்த காசுக்கு பொறுமையாய், அமைதியாய், அவர் விரும்பும் நேரம்வரை உண்டு முடிக்கும் முழு உரிமையும் அவருக்குண்டு !
என்னதான் ஆயிரம் வேலைகளுடன் ஓடிக்கொண்டிருந்தாலும் கண்ணெதிரே ஒரு விபத்தினை கண்டுவிட்டால் சட்டென ஓடித்தூக்கும் குணம்... மழையோ, புயலோ, அரசு இயந்திரம் விழிக்கும் முன்பே ஜாதிமத பேதமின்றி வரிந்துக்கட்டிகொண்டு நிவாரணத்திலிறங்கும் சராசரி மனிதர்கள்... வடகோடியின் வெள்ள நிவாரணத்துக்குக்கூட தன்னால் இயன்றதை அள்ளிக்கொடுக்கும் நெஞ்சம்...
" யாரு பெத்த பிள்ளையோ... "
தீக்குளித்த, ஆசிட் வீசிய சம்பவங்கள் காதில் விழும்போதெல்லாம் அந்த முகம் அறியாத உயிர்களை தங்கள் பிள்ளைகளாய் எண்ணி விம்மும் மனங்கள் ...
" இனி அவன் பொண்டாட்டி புள்ளையோட கதி... "
கொடூர குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை பெற்ற கைதியின் குடும்பத்தை நினைக்கும் குணம்...
" என்ன இருந்தாலும் அவரை இந்த நிலமையில பார்க்க முடியலப்பா ! "
தனக்கு பிடிக்காத கட்சியின் தலைவராக இருந்தால் கூட அவரின் வீழ்ச்சியை தாங்காமல் தவிப்பவர்கள் !
இதுதான், இந்த மனிதநேயம் தான், இரக்ககுணம் தான் தமிழனின் தலையாய குணம் என தோன்றுகிறது !
" போகட்டும் விடு ! இதுக்குமேல என்ன செய்ய சொல்ற ?! "
தன் வீட்டின் தலைவாசல் தாண்டி நுழைந்து தலைகுணிந்தவனின் குற்றம் மறந்து மன்னிக்கும் மனிதநேயம் ! ( தமிழனின் இந்த மனித நேயத்தை மறதியாய் நினைத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவன் வீட்டிலேறும் அரசியல்வாதிகளையும் அவன் மன்னிப்பது வேறுவிசயம் ! )
இந்தியாவெங்கும் பரவிவிட்ட மததுவேச அரசியல் தமிழ்நாட்டில்மட்டும் இன்னும் தடுமாறுவதன் காரணம் தமிழனின் மனிதநேயம்தான் !
" என்னாய்யா ? அங்கேருந்து இங்க வந்ததுக்கு இவ்ளோ ரூபாயா ?!... "
" சரி ! சரி ! உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ! ஒரு பத்து ரூபா குறைச்சிக்குங்க ! "
" இல்ல... அதிகம் ! "
" என்னா சார்... எல்லாத்துக்கும் செலவு பண்ணிட்டு எங்ககிட்ட மட்டும் இவ்ளோ கறாரா... எதோ உன் பேரை சொல்லி... "
அவன் இறங்க, இவன் கொடுக்க....
நயந்த வார்த்தைகளுக்கு முன் சட்டென இளகும் அன்பினன் தமிழன் ! காலங்காலமாய் பெரிதாய் போர்களை சந்திக்காத மண்வாசி ! அன்பையும் அறத்தையும் போதித்து, அவமானம் நேர்ந்தால் துடைத்தெரிவதைவிட உயிர்த்துறப்பதை மேலாக கருதிய மரபில் வந்தவன் ! " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற பண்பாட்டு பரம்பரை சேர்ந்தவன் ! சக மாநிலத்தவனோ அல்லது அயல் நாட்டானோ எவராகினும் நேசக்கரம் நீட்டுபவன் !
என்னங்க நீங்க ? வெளிநாட்லயெல்லாம் வயசானவங்களுக்கு ஒரு வாசல், முடியாதவங்க உக்கார தனி சீட்டு அது இதுன்னு அவ்ளோ பண்ணிக்கிட்டிருக்கான்... "
உண்மைதான் ! ஆனால் மேலை நாடுகளிலெல்லாம் மனிதநேயம் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட விசயம் ! என்னால் நடக்க முடியாது, என்னால் நிற்க முடியாது என்றெல்லாம் சட்டப்படி நிருபித்தால் சட்டம் காட்டும் உதவிகள் கிடைக்கும் ! அங்கெல்லாம் சகமனிதன் என்ற எண்ணத்தைவிட சட்டத்தை மதிக்கவேண்டும் என்ற நிலையிலிருந்து செய்யும் உதவிகளே அதிகம் ! ஆழ்ந்து யோசித்தால் தடுக்கி விழுந்தவனை அனிச்சையாய் ஓடித்தூக்குவதற்கும் அப்படி தூக்க வேண்டியது கட்டாயம் என்று சட்டம் சொல்கிறது என தூக்கிவிடுவதற்குமான வித்யாசம் புரியும் !
மேலை நாடுகளில் உறவுகள் கூட சட்டங்களுக்கு உட்பட்டவைதாம் ! எழுபதை தாண்டிய பெற்றோருக்கு கட்டாயம் முதியோர் இல்லங்கள்தான் ! வாழ்க்கை முழுவதையுமே சட்டத்துக்கு உள்ளே, வெளியே என பிரித்து பழகிய நிலை அது !
ஆனால் மேலை நாடுகளின் நுகர்வோர் கலாச்சார அரசியலில் சிக்கிய தமிழனின் இந்த தலையாய மனிதநேயம் மிக வேகமாக மறைந்துகொண்டு வருவதையும் இங்கே குறிப்பிட வேண்டும் ! மததுவேச அரசியல் சூழ்ச்சிக்கு நாமும் பலியாகிவிடுவோமோ என பயமாக உள்ளது !
மீன்டும் சென்னை விமான நிலையம் !
" ரூல்ஸ்படி நீங்க முன்னாடியே பதிஞ்சிருக்கனும் சார்... பரவாயில்லை ! முடியாமதானே கேக்கறீங்க ! "
வரும்போது தந்தையால் நடக்க முடியாமல் போனதை கூறி சக்கரநாற்காலி கேட்கவும் உடனடியாக ஏற்பாடு செய்தார் ஒரு அதிகாரி.
டெல்லியில் விமானத்திலிருந்து இறங்கியபோது ஒரு சிப்பந்தி சக்கரநாற்காலியுடன் காத்திருந்தார். சென்னை அதிகாரி டெல்லிக்குமாக சேர்த்து பதிந்திருந்தது அப்போதுதான் புரிந்தது !
வரும்போது ஏர் இந்தியா விமானம் காலதாமதமின்றி இறங்கியதை ஆச்சரியமாய் குறிப்பிட்டிருந்தேன்... அதைவிட ஆச்சரியமாய், அரைமணி நேரம் முன்னதாகவே பாரீஸ் விமானநிலையம் வந்தடைந்தோம் !
விமான வாயிலில் ஒரு இளம்பெண் அதிகாரி சக்கரநாற்காலில்கள் மற்றும் சிப்பந்திகளுடன் நின்றிருந்தாள்...
" உங்கள் தந்தையின் பெயர் முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ளதா ?... "
" இல்லை... ஆனால்... "
" மன்னிக்கவும் ! முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்தான் உதவ முடியும் ! நடக்கவே முடியவில்லையென்றால் சொல்லுங்கள்... ஆம்புலன்ஸை கூப்பிடுகிறேன் ! "
குடியுறிமை மையம் அமைதியாய் இருந்தது...
கண்ணாடி தடுப்புக்கு பின்னாலிருந்து சலனமற்ற முகத்துடன் மாலை வணக்கம் கூறிய அதிகாரி எங்கள் பாஸ்போர்ட்டுகளை வாங்கினார்... அதே சலனமற்ற தொனியில் நன்றி கூறியபடி திருப்பிகொடுத்தார்.... எனக்கு பின்னால் வந்த பிரெஞ்சுக்காரர்களுக்கும் அதே தொனி !
அன்பு, காதல், காமம் அனைத்தையும் சட்டங்களுக்குள் அடைத்த ஐரோப்பிய யூனியன் எங்களை மகிழ்வுடன் வரவேற்றது !