அதிகாலை அறிமுகம்
ஆறு மணிக்கு அலாரம் வைத்து
ஏழு மணிக்கு துயில் எழும் மனிதனே..
உனது சோம்பேறித்தூக்கத்தை உதறிவிட்டு
இன்றாவது சீக்கிரம் எழு.
சப்தங்களால் காயப்படாத
உன்னத அதிகாலையை
உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
கருஞ்சிவப்பு வானில்
இரவு ஓவியன் வரைந்துவிட்டுப் போன
ஓவியச்சுவடுகளை
உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
அதிகாலைக்குளிரில்
அசையாது நிற்கும்
மரக்கிளைகளுக்குள்ளே
சந்தோசமாய் குதூகலிக்கும்
பறவைகளின் சுப்ரபாதத்தை
உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
அதன் கீழிருக்கும் பச்சைப்புல்வெளியில்
சிந்தியிருக்கும்
திரவ முத்துப் பனித்துளிகளின் மத்தியில்
சிறு சிறு வண்ணப்பூக்களோடு
தலைதுவட்டாத தளிர் மங்கைகளாய்
முகம் சிவந்து நிற்கும்
ரோஜா மொக்குகளின்
நாண நளினத்தை
உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
பனியும் மழைத்தூறலும் கலந்து
சாரலாய்த் தூவும்
பனிமழைப் படலம் கிழித்தபடி
உற்சாகச்சிறகடித்து
இரைதேடிபோகும் பறவைகள்
தூங்கும் உனைப்பார்த்து
வீசிச்செல்லும் ஏளனப் பேச்சுக்கள்
உறங்கும் உன் காதில் ஒலிக்க வாய்ப்பில்லைதான்
நீ தூங்கியது போதும் எழு மனிதனே
இதயம் எழுதிய கனவுகள் என்னவென்று
உன்னிடம் விசாரிக்க
இந்த அதிகாலை ஆவலாய்க் காத்திருக்கிறது.
இயற்கை படைத்த இத்தனை அழகும்
நீ ரசித்திட மட்டுமல்ல
அதிகாலை உற்சாகத்தில்
அத்தனை முயற்சிகளும்
வெற்றியில் முடியட்டும்
என்ற நம்பிக்கையிலும்தான்...!