என்னுடையதாகிறது உலகம்
மரங்களினூடே போகிறது
வெயில் ததும்பும் பாதை.
பூக்கள் மலரும்
சின்னத் தண்டுகளில்
நீட்சியாகிறது வசந்த காலம்.
பட்டுப் பூச்சியென
வளைந்து சுழலும் காற்று
பதற்றச் சிறகடிப்புடன்
மிதந்து போகிறது.
பாம்பென வளையும் நதிகள்
சுற்றிச் சுருண்டு
மேகத்திற்கு நீர் ஈந்தபடி
மழையைப் பற்றிப்
பேசிக் கொண்டிருக்கிறது.
எவருமற்ற ஒரு எறும்பு
ஊர் சுற்றிக் களைத்த பின்
பூமியின் வாய் மீது
தூங்கிக் கொண்டிருக்கிறது.
மின்னலால் நடுங்கிய பறவை
ஒற்றைச் சொல்லை
பாதியில் நிறுத்தி
கடந்து செல்கிறது தொலைவை
நீண்ட மௌனத்துடன்.
எதுவும்
என்னுடையதல்லாத உலகத்தில்
எல்லாவற்றையும்
இரசிக்கக் கற்றபின்...
என்னுடையதாகிறது
எல்லையற்ற இந்த உலகு.