தெய்வீகத்தின் ஒளி தொலைவில் கிளம்பியிருக்கக்கூடும்

சட்டென்று எழுதிவிடமுடியாதபடி ஏதேதோ தடுக்கிறது
அரையிருளின் மவுனங்கள் கனம்கூடிக்கிடக்கின்றது
இருன்மையின் புதரெங்கும் நெளியும் புழுக்கள் துரத்துகின்றது
வசீகரம்தேடிச்சலித்துத் தடம்புரள்கிறது வார்த்தைகள்

பிணிபடர்ந்த மனக்குகையின் வெறுமைகளை
எதைக்கொண்டும் நிரப்ப இயலவில்லை
தொட்டெடுக்க இயலாத பாதரசத்தருணங்களின்
நிழற்துகள்களை பார்க்கத்தான் முடிகிறது
வியர்த்து விதிர்தெழும் கனவுகள் தீரவில்லை

உலுக்கியெழுப்பத் துளியும் சந்தர்ப்பமற்ற
நிர்வாணநிஜங்களுக்கு அழிவேயில்லை
சுமக்கத்திராணியற்ற நிழற்கூட்டை
இறக்கிவைக்க இடமில்லை
அதீதங்களும் அற்புதங்களும்போல்
வேறு மாயையில்லை
கடித்துத்துப்பிய நகத்துணுக்குகளாய்
வீழ்ந்துகிடக்கின்றன காலத்தின் பிசிறுகள்

தெய்வீகத்தின் ஒளி தொலைவில் கிளம்பியிருக்கக்கூடும்
சாத்தானின் அருட்கரங்களின் ஆயத்த நீளலில்
அடைக்கலம்தேட சம்மதமில்லை
உருகியுருகி ஒன்றுமற்றுப்போனபின்
எதைக்கூற நானென்றும் எனதென்றும்

எழுதியவர் : முகநூலில்: மாதவன் ஸ்ரீரங் (4-Sep-15, 12:30 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 57

மேலே