கவிதையும் காதலும் - 4

காதலின் உச்சம் கவிதை
கவிதையின் உட்கணம் காதல்

காதல் அவளால் அவனுக்கு
மின்னலாய் தொடங்கும்
மிரட்சியில் மிரளும்
மீட்சிமை பொங்கும்
மனைமாட்சிக்கு கோலமிடும்.

கவிதை அவனுக்கு அவளின்
ஆளுமையில் அலங்காரம்
அசத்தும் சிருங்காரம்
அளவைதாண்டும் மெருகேறும்
ஆட்படுத்தும் பார்வைகளில் பரிவர்த்தனைகள்

காதல் மூச்சு கவிதை பேச்சு
காதல் சுருதி கவிதை பேதம்
காதல் மந்திரம் கவிதை தந்திரம்
காதல் சுகம்பெற கவிதை சுதந்திரம்

"25470.
எண்களைச்சுழற்றினதும்
என் எதிரில் நீ,
செவியினுக்குள்
உன் சிலம்புக்குரல்."
பட்டப்பகல் பார்க்காது போகும் தூரம் தெரியாது
நட்டநடு நிசிஅறியாது நாளும் கிழமை அறியாது
விதைமுதல் விருட்சமாய் வளரும் காதல்
கவிதை விலாசத்தில் காலைப்பதிப்பும் மாலைப்பதிப்பும்

கவிதை உரசலில் காதலில் சிறு விரிசல்
கவிதை மறுபதிப்பில் காதல் புதுப்பித்தல்.

"கடிதம் கண்ணுற்றேன், காகிதமானது மனம்
விழிநீர் விரைந்து வந்து வரைந்தது இக்கவிதை."
என்பாள்.
"சுகமாக அழவேண்டும் போலிருந்தது"
என்பாள்.

காதல் கவிதையில்
வேர் விட்டு விழுது விட்டு
வெண்சாமரம் வீசும்..

கவிதை வாஸ்து பார்த்து
கட்டப்படும் காதல் அழகிய வாசஸ்தலம்...

(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி (4-Sep-15, 10:09 am)
பார்வை : 80

மேலே