பாட்டி பாரதம்

போன வாரத்தில் ஒரு நாள், வழக்கம்போல் மதியச் சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்தேன். கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழையும்போதே உற்சாகக் கூக்குரலுடன் ஓடி வந்தாள் நங்கை, ‘அப்பா, பாட்டி வந்திருக்காங்களே’
’பாட்டியா? அவங்க எப்படி இங்கே வருவாங்க? சும்மா விளையாடாதேம்மா’ என்றபடி செருப்பைக் கழற்றினேன்.

ஆனால், நங்கை சொன்னதுதான் உண்மை. நிஜமாகவே அவளுடைய பாட்டி
அவளைப் பார்க்கப் புறப்பட்டு வந்திருந்தார்.

அப்பா, அம்மாவைவிட, ஏனோ குழந்தைகளுக்குப் பாட்டிகளைதான் அதிகம் பிடிக்கிறது. காரணம், அவர்களுக்குதான் குழந்தைகளுடன் செலவிட அதிக நேரமும் பொறுமையும் இருக்கிறது.

நாலு வாய்ச் சாப்பாட்டை ஒன்றரை மணி நேரம் ஊட்டுவதுமுதல், விதவிதமான கதைகளைச் சலிக்காமல் திரும்பத் திரும்பச் சொல்வதுவரை பாட்டிகளின் பொறுமை அசாத்தியமானது. கிட்டத்தட்ட அதே வயதில், அதே அளவு ஓய்வு நேரத்துடன் இருக்கும் தாத்தாக்களுக்குக்கூட இந்த தேவ குணம் வாய்ப்பது இல்லை.

நங்கையின் பாட்டி அன்று அவளுக்கு ஆண்டாள் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊர் வர்ணனையில் தொடங்கி, பெரியாழ்வாருக்கு முழ நீள தாடி, ஆண்டாளுக்கு ‘ஸ்ட்ராபெர்ரி (?) உதடு’, ‘ஆப்பிள் பழக் கன்னம்’ என்பதுவரை விளக்கமாக, பொறுமையாகக் காட்சிபூர்வமாகக் கதை விரிந்தது.

நானும் என் மனைவியும்கூட நங்கைக்கு நிறையக் கதைகள் சொல்வோம். ஆனால் அந்தக் கதைகளெல்லாம் வேகத்தடை நிறைந்த சாலையில் வண்டி ஓட்டுவதுபோல் நின்று நின்று செல்லும்.

உதாரணமாக, ஒரு வாய் இட்லியை நங்கை வாயில் போடுவோம், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம், அந்த ராஜாவுக்கு ரெண்டு பசங்களாம்’ என்று கன்னித்தீவு தினசரி கோட்டாபோல் இரண்வே வாக்கியத்தில் நிறுத்திக்கொண்டுவிடுவோம், ‘வாய்ல இருக்கிற இட்லியை முழுங்கு, அப்புறம்தான் கதை தொடரும்.’

நங்கை சும்மா இருப்பாளா?, ‘நீ கதையைச் சொல்லு, அப்போதான் விழுங்குவேன்’ என்று பிடிவாதம் பிடிப்பாள்.

உடனே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சீண்டுவது, கோபப்படுவது, திட்டுவது என்று ஏதேனும் நடக்கும். கடைசியில் இட்லி விழுங்கப்பட்டபிறகு, கதை ரெண்டு வரி நகரும், மறுபடி ‘தொடரும்’.

இப்படி ஒவ்வொரு வாய் இட்லிக்கும் இரண்டு வரிகள் என்கிற விகிதத்தில் கதையை நகர்த்திச் செல்வதால், எங்களுடைய கதைகள் எவற்றுக்கும் சரியான நீள, அகலம் கிடையாது. கடைசி வாய் இட்லி விழுங்கப்பட்டதும், மிச்சமிருக்கிற கதையை நாலே வரியில் சொல்லி முடித்துவிடுவோம்.

பாட்டிகள் அப்படியில்லை, அவர்கள் நிஜமாகவே ஆத்மார்த்தமாகக் கதை சொல்கிறவர்கள், அதில் மயங்கிக் குழந்தைகள் சாப்பிடுமேதவிர, ‘சாப்பிட்டால்தான் கதை சொல்வேன்’ என்று பிளாக்மெயில் செய்யும் அதட்டல் அவர்களிடம் இல்லை.

நங்கைக்குப் பாட்டி சொன்ன ஆண்டாள் கதையின் மகிமை, அன்று இரவு தெரிந்தது, ‘அப்பா, என்னை ஒருவாட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டிட்டுப் போவீங்களா?’ என்றாள் கெஞ்சலாக.

நேற்றுவரை ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்ற வார்த்தையே அவளுக்குப் பரிச்சயமில்லை. ஆனால் இன்று, அந்த ஊருக்குப் போகவேண்டும் என்று நினைக்கத் தொடங்கிவிட்டாள், பாட்டி சொன்ன கதை அத்தனை ஆழமாக மனத்தில் பதிந்திருக்கிறது.

பாட்டிக் கதையின் இந்தச் சொகுசை, அன்னியோன்யத்தை அச்சில் கொண்டுவந்த ஒரு புத்தகம் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. ஜயா சந்திரசேகரன் எழுதிய ‘இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம்’. (’வரம்’ வெளியீடு – ஜூன் 2008 – 144 பக்கங்கள் – விலை ரூ 70/-).

‘ஜயாப் பாட்டி’ என்கிற செல்லப் பெயருடன் மகாபாரதக் கதையை அழகாக விளக்கிச் சொல்லியிருக்கிறார் ஜயா சந்திரசேகரன். வேகத்துக்கு வேகம், விவரணைக்கு விவரணை என எதிலும் குறை வைக்காத எழுத்து.
முக்கியமாக, ஜயாப் பாட்டியின் மொழி. நிஜமாகவே ஒரு பாட்டி நம் அருகே உட்கார்ந்து கதை சொல்வதுபோன்ற ஒரு நடை புத்தகம்முழுவதும் கையாளப்பட்டிருக்கிறது.

உதாரணமாக, மகாபாரதம் எப்படி, யாரால் எழுதப்பட்டது என்பதைச் சொல்லும் அத்தியாயத்திலிருந்து ஒரு பத்தி:

நாலு முகம் கொண்ட சாமியான பிரம்மா இருக்காரே – அவர்தான் நம்மை மாதிரி மனுஷங்களைப் பண்ணினார். அவர் மிக மிக உயர்ந்த மனிதர்களையும் உண்டு பண்ணினார். அவங்கதான் ரிஷிகள். நமக்கெல்லாம் எது நல்லது, எது கெட்டது, எப்படிச் சமத்தா இருந்தாக்க மகிழ்ச்சியா இருக்கலாம்ங்கறது எப்படிச் சொல்லித் தரதுன்னு பிரம்மா ரொம்ப திங்க் பண்ணினார். இதை யாராவது வயசுல பெரிய தாத்தா சொன்னா நல்லாயிருக்கும்னு ஐடியா பண்ணினார். வியாசர்னு ஒரு பெரீய்ய ரிஷி தாத்தா இருந்தார். அவர்கிட்டே பிரம்மா, வேதம்ங்கற புத்திமதியைக் கொடுத்தார். அதனால வியாசரை வேத வியாசர்ன்னும் சொல்லுவாங்க.

இப்படிப் புத்தகம்முழுவதும் எளிமையான பேச்சு வழக்கில் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்குப் புரியக்கூடிய வார்த்தைகளைமட்டுமே பயன்படுத்துகிறார். உதாரணமாக, ‘போர்’ என்று சொல்லாமல், ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ சண்டை என்கிறார், ‘அம்பிகா, அம்பாலிகா ரெண்டு பேரும் சமத்தா பீஷ்மர் சொன்னபடி விசித்திர வீர்யனை டும் டும் மேளம் கொட்டிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க’ என்கிறார்.

அதேசமயம், இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரை எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்த ஒரு சந்தேகம், இதன் வாசகர்கள் யார்?
என்னதான் குழந்தை மொழியில் எழுதப்பட்டாலும், அந்த வயதுப் பிள்ளைகள் 144 பக்கம் உட்கார்ந்து படிப்பார்களா? இவ்வளவு தூரம் படிக்கக்கூடிய வயதுக்காரர்களுக்கு, இந்த மொழி அலுப்பூட்ட ஆரம்பித்திருக்காதா?
ஒருவேளை, இந்தப் புத்தகம் பாட்டி, தாத்தாவுடன் வளராத குழந்தைகளின் அப்பா, அம்மாக்களுக்கு எழுதப்பட்டதாக இருக்கலாம். அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பிரித்துவைத்துக்கொண்டு அப்படியே ஒவ்வோர் அத்தியாயமாகப் படித்துக் காட்டிவிட்டால் போதும், குழந்தைகளுக்கு ஒரு பாட்டி கதை சொன்ன அதே உணர்வு கிடைக்கும்.

எப்படியாயினும், இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய குறை, ஓவியங்களுக்குச் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை.

இத்தனைக்கும், நூலாசிரியர் ஜயா சந்திரசேகரனே நல்ல அழகான கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார். ஆனால், அவை மிகச் சிறிய அளவில் புத்தகம் நெடுகிலும் அச்சிடப்பட்டிருக்கின்றன.

ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கு எழுதப்படுகிற புத்தகங்களை, வயதுக்கு ஏற்பப் பிரிக்கிறார்கள்.

குறைந்த வயதுக் குழந்தைகளுக்குப் படம் 80%, கதை 20%, அடுத்த நிலையில் படம் 60%, கதை 40%, பிறகு இரண்டும் சரி பாதி …

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கதை / Contentன் முக்கியத்துவத்தை அதிகரித்தாலும், எல்லாப் புத்தகங்களிலும் தெளிவான, தொடர்ந்து வாசிக்க, புரட்டத் தூண்டும் படங்கள் இருக்கும்.

லூயிஸ் கரோலின் புகழ் பெற்ற ’Alice In The Wonderland’ கதையை வால்ட் டிஸ்னி அனிமேஷன் படமாக உருவாக்கினார். 1951ம் ஆண்டு வெளியாகி ’சூப்பர் ஹிட்’டான அந்தப் படம் இன்றைக்கும் CD / DVD வடிவங்களில் பரபரப்பாக விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கிறது.

அந்தப் படத்தின் தொடக்கத்தில், நாயகி ஆலிஸ் சொல்வாள், ‘படங்கள் / ஓவியங்கள் இல்லாத புத்தகங்களை எனக்குப் பிடிக்காது’
இதற்கு ஆலிஸின் அக்கா சொல்லும் பதில், ‘ஆலிஸ், படங்களே இல்லாத நல்ல புத்தகங்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்கின்றன’
‘ம்ஹும், என்னுடைய உலகத்தில் புத்தகம் என்றாலே, வெறும் படங்கள்தான்’ என்பாள் ஆலிஸ்.

அப்படி முழுக்க முழுக்கப் படங்களாக இல்லாவிட்டாலும், குழந்தைகளுக்காக எழுதப்படுகிற புத்தகத்தில் சின்னஞ்சிறியதாக ஸ்டாம்ப் சைஸ் ஓவியங்களைப் பிரசுரிப்பதில் பலன் இல்லை என்று நினைக்கிறேன். கதையை அம்மாவோ, அப்பாவோ சொல்லக் கேட்டபிறகு, அந்தக் குழந்தையே புத்தகத்தைத் தானாகப் புரட்டிக் கதையைத் திரும்பச் சொல்லவேண்டும். அதற்குப் படங்கள்தான் சரியான வழி.

அதேசமயம், ஜயாப் பாட்டியையும் குறை சொல்வதற்கில்லை. நிஜப் பாட்டிகள் கதை சொல்லும்போது மல்ட்டிகலர் ஓவியங்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டா பேசுகிறார்கள்? :)

இன்னொரு முக்கியமான விஷயம், மகாபாரதக் கதை என்று பொதுவாகச் சொன்னாலும், பாண்டவர்கள், கௌரவர்கள் சரித்திரத்துடன் நிறுத்திவிடாமல் இடையிடையே ஏகப்பட்ட துணைக் கதைகளைச் (யயாதி, கச்ச தேவயானி, ஏகலைவன், இன்னும் பலர்) சொல்லிச் செல்கிறார் ஜயாப் பாட்டி. இவை ஒவ்வொன்றும் பிரதான கதையைவிடச் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
அதேசமயம், இவற்றால் பல இடங்களில் கதைத் தொடர்ச்சி திணறுகிறது. இருபது, இருபத்தைந்து பக்கங்களுக்கு முன்னால் சொன்ன ஒரு விஷயத்தை திடீரென்று இங்கே நினைவுபடுத்திக் கதையைத் தொடர்வது, ’பாட்டிக் கதை’ என்கிற அழகான நீரோடை நடைக்கு ஒத்துவரவில்லை.

ஓர் அச்சுப் புத்தகம் என்கிற அளவில், ‘இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம்’ நல்ல திருப்தி அளிக்கிறது. இன்னும் குழந்தை மனம் கொண்டவர்கள் (என்னைப்போல ;)) விறுவிறுவென்று அரை மணி நேரத்தில் வாசித்துவிடலாம்.
ஆனால், அச்சு வடிவத்தைவிட இந்தப் புத்தகம் ஒலி வடிவத்தில் வெளியானால் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்று தோன்றுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் பாட்டி குரலிலேயே இந்தக் கதையைக் கேட்டு ரசிக்கிற சந்தோஷம் அலாதியானதாக இருக்கும். கூடவே அனிமேஷனும் சேர்ந்துகொண்டால் இன்னும் ஜோர்!

ரொம்பப் பேராசைப்படுகிறேனோ? இப்போதைக்கு ஜயாப் பாட்டிக்கு நன்றி சொல்லி முடித்துக்கொள்கிறேன்!
***



என். சொக்கன் …
24 01 2009

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (5-Sep-15, 1:48 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : paatti paaratham
பார்வை : 248

மேலே