கவிஞர் இரா இரவியுடன் ஒரு நேர்காணல் கவிஞர் பொன்குமார் சேலம்
கவிஞர் இரா. இரவியுடன் ஒரு நேர்காணல் கவிஞர் பொன்.குமார் .சேலம்
கவிஞர் இரா. இரவி இலக்கிய உலகில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் ஹைக்கூவில் அதிக ஈடுபாடுடையவர். விமர்சனங்களையும் எழுதி வருகிறார். புதுக்கவிதைத் தொகுப்புகளையும் ஹைக்கூத் தொகுப்புகளையும் கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். பல்வேறு தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இணையத்திலும் இணைந்து இயங்கி வருகிறார். கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலகம் தொகுப்பிற்காக கவிஞர் இரா. இரவியுடன் ஒரு நேர்காணல்
- பொன். குமார்
பொன்.குமார்: வணக்கம். இரா. இரவி என்றாலே ஹைக்கூ தான் நினைவிற்கு வருகிறது. ஹைக்கூ எழுத வேண்டும் என்று எப்போது தோன்றியது? எதனால் தோன்றியது?
இரா. இரவி : மூன்று வரிகளில் உள்ள ஹைக்கூ வடிவம் பிடித்தது. முன்னோடிகள் ஈரோடு தமிழன்பன், பேராசிரியர் மித்ரா,
மு, முருகேஷ், பொன்.குமார், புதுமைத் தமிழ்நெஞ்சன், வசீகரன், போன்றோரின் படைப்புகளை வாசித்து அதன்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது, வாசகர்களும் வரவேற்றனர். ஆயிரம் ஹைக்கூ நூல் தமிழக நூலகத்திற்கு 1000 படிகளும் மொத்தம் 4 பதிப்புகளும் வந்து வெற்றி பெற்றது. அதனால் எனக்கு ஹைக்கூ மிகவும் பிடித்துப் போனது.
பொன்.குமார்: தாங்கள் முதன் முதலில் எழுதிய ஹைக்கூ எது? எந்த ஊடகம் வழியாக வெளியானது?
இரா. இரவி: மதுரை மணி என்னும் ஒரு நாளிதழ் மதுரையில் உள்ளது, இன்றும் வருகிறது, சனிக்கிழமை தோறும் மணிமலர் என்ற பகுதியில் கவிதைகள் பிரசுரம் ஆகும். தொடர்ந்து அனுப்பி வந்தேன். தவறாமல் பிரசுரம் ஆனது. பல சிற்றிதழ்களிலும் எழுதி வந்தேன். அவற்றைத் தொகுத்தே நூலாக்கினேன்.
முதல் ஹைக்கூ
அன்று நெறி
இன்று வெறி
மதங்கள்.
பொன்.குமார்:அருமை. தங்கள் ஹைக்கூவிற்கான வரவேற்பு எப்படி இருந்தது?
இரா. இரவி : பலரும் பாரட்டினார்கள். இயந்திரமயமான உலகில் நீண்ட நெடிய கவிதைகள் படிக்க வாசகர்களுக்கு நேரமில்லை. ஹைக்கூ - சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல், சுண்டக் காய்ச்சிய பால் என்பதால் ஆறிலிருந்து அறுபது வரை எல்லா வயதினரும் வாசித்தார்கள்.
பொன்.குமார்: ஜப்பானிய ஹைக்கூவிற்கும் தமிழக ஹைக்கூவிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
இரா. இரவி : ஜப்பானிய ஹைக்கூக்களில் பெரும்பாலும் இயற்கையை மட்டுமே பாடுவார்கள். தமிழக ஹைக்கூவிற்கு பிரச்சனைகளை, தீர்வுகளை பாடும் யுத்தி உண்டு. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று மூன்று வரிகளில் தமிழக ஹைக்கூ வருவதால் எளிதில் எல்லோருக்கும் புரியும். ஜப்பான் ஹைக்கூ சிலமுறை சிந்தித்தால் மட்டுமே புரியும்.
பொன்.குமார் : தங்களுடைய ஹைக்கூக்களில் ஜப்பானிய ஹைக்கூக்களின் பாதிப்பு இருப்பதில்லையே ஏன்?
இரா. இரவி :ஜப்பானியை ஹைக்கூ பாதிப்பு இல்லாமல் இல்லை. நானும் இயற்கையைப் பாடி உள்ளேன். ஊறுகாய் போல ஜப்பானிய ஹைக்கூவும் சோறு போல தமிழக ஹைக்கூவும் இருக்கும். ஜப்பானிய ஹைக்கூவைப் போல என் ஹைக்கூ அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. ஒருமுறை படித்தாலே வாசகர்களுக்கு எளிதில் புரிந்து விடும். அப்படி எழுதுவதே என் வழக்கம்.
பொன். குமார் :தமிழ் மண்ணுக்கு ஹைக்கூ ஒத்து வராது, ஹைக்கூ தேவையில்லை என்று ஒரு விமர்சனம் உள்ளதே.. அவ்விமர்சனத்திற்கு தங்களின் பதில் என்ன?
இரா. இரவி : ஹைக்கூ எழுத வராதவர்களின் வெற்றுக்கூச்சல். ஹைக்கூ இன்று பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளது. பொறியாளர் தொடங்கி சித்தாள் வரை அனைவரும் ஹைக்கூ படைப்பாளிகளாக உள்ளனர். பல்கி பெருகி விட்டனர். கல்லூரி பல்கலைக்கழகங்கள், உலகத்தமிழ்ச் சங்கம் வரை ஹைக்கூவிற்கு வரவேற்பு வழங்கி வருகின்றனர். வளர்ச்சி பொறுக்க இயலாதவர்களின் வயிற்று எரிச்சலை பொருட்படுத்தத் தேவை இல்லை. ஹைக்கூ பொய்க்கூ என்று சொன்னவர்களே இன்று வரவேற்று கட்டுரை வடிக்கிறார்கள். படிக்கும் வாசகனையும் வேறு கோணத்தில் எழுதத் தூண்டி படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு. அப்படித்தான் நான் உருவானேன்.
பொன். குமார் : தமிழ் ஹைக்கூ உலகில் தங்களைக் கவர்ந்த எழுத ஹைக்கூவாளர் யார்? ஏன்?
இரா. இரவி :ஈரோடு தமிழன்பன் ஐயா தான் இந்த வயதிலும் எழுதுகின்றார். தினமும் முகநூலிலும் எழுதுகின்றார். ஹைக்கூவை உச்சம் பெற வைத்தவர் அவர்தான். மூத்த மகாகவி எழுதுவதால் பலருக்கும் ஹைக்கூவின்பால் விருப்பம் வந்தது. எனக்கு அப்படித்தான் அவர் நூல்கள் பல படித்துள்ளேன். மதிப்புரையும் எழுதி இணையத்தில் பதித்து உள்ளேன்.
பொன். குமார் : தங்கள் ஹைக்கூக்கள் சிந்தனையின் வெளிப்பாடா? பாதிப்பின் வெளிப்பாடா?
இரா. இரவி : இரண்டும்தான். சில சிந்தனையின் வெளிப்பாடு, பல பாதிப்பின் வெளிப்பாடு. தனிப்பட்ட என் பாதிப்பு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட சதி மீது எனக்கு வெறுப்பு உண்டு. நான் கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியார் வழி வந்த பகுத்தறிவுவாதி என்பதால் பிறருக்காகவும் சிந்தித்து, பாதிக்கப்பட்டோர் வசம் நின்று படைப்புகள் வழங்கி உள்ளேன்.
பொன். குமார் : தாங்கள் அதிகம் ஹைக்கூ எழுதியதாகவே தெரிகிறது.. இதுவரை எத்தனை எழுதியிருப்பீர் தோராயமாக?
இரா. இரவி : ஆம். என் மீது பொறாமை கொண்ட சிலர் ஹைக்கூ அதிகம் எழுதுவதாக குற்றம் சுமத்துவதும் உண்டு. அதுபற்றி நான் கவலை கொள்வதில்லை பொருட்படுத்துவதில்லை. செவிடாக இருந்து விட்டு தொடர்ந்து படைத்து வருகிறேன். ஆயிரம் ஹைக்கூ நூல், ஹைக்கூ 500. இதுவே 1500. மற்ற நூல் ஹைக்கூக்களையும் சேர்த்தால் 5000ஐத் தாண்டலாம். குறித்து வைக்கவில்லை. நூலாக்காமல் இணைத்தில் எழுதி உள்ளேன்.
பொன். குமார் :இதங்கள் ஹைக்கூக்களுக்கு மக்களிடம் எதிர்பார்ப்பும் வரவேற்பும் எப்படி உள்ளது?
இரா. இரவி :என்னை பலர் ஹைக்கூ இரவி என்றே அழைப்பர். மேடையிலும் குறிப்பிடுவார்கள். ஹைக்கூ திலகம், குறும்பா வேந்தர் என்று பல பட்டங்களும் தந்துள்ளனர். தமிழ்ச் சம்மல் விருது பெற்றதற்கும் எனது ஹைக்கூ கவிதைகளும் ஒரு காரணம். மற்ற தமிழ் சார்ந்த செயல்பாடுகளும் காரணம். இனிய நண்பர் கொன்னையூர் மா. கணேஷ், ஜெயப்பிரியங்கா படம் ஆவணப்படுத்தி தந்தனர்.
பொன்.குமார் : தங்கள் தொகுப்புகள் குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறதா? தொய்வடையச் செய்கிறதா?
இரா. இரவி : தங்களைப் போன்றோர் விமர்சனம், நீதியரசர் கற்பக விநாயகம் விமர்சனம், முதுமுனைவர் வெ. இறையன்பு அணிந்துரைகள், இப்படி பிரபலங்கள் தொடங்கி வளர்ந்து வரும் ஹைக்கூ கவிஞர்களும் ஜெயப்பிரியங்கா, பேராசிரியர்கள் மித்ரா, ச.சந்திரா, தமிழ்த்தேனீ இரா.மோகன் அணிந்துரைகள், வாசகி மேலூர் வாசுகி என பலரின் விமர்சனம் தொடர்ந்து எழுதத் தூண்டி வருகின்றன. எப்போதும் நான் தொய்வு அடைவதில்லை.
பொன். குமார் : தொய்வடடையாமல் தொடருங்கள். தொகுப்புகள் மூலமும் ஹைககூக்களைக் கொண்டு
செல்கிறீர். இணையம் மூலமும் கொண்டு செல்கிறீர்.
எதன் மூலம் மக்களை சென்றடைந்துள்ளன?
இரா. இரவி : தொகுப்புகள் வாசிக்கும் வாசகர்கள் வேறு. இணையத்தில் வாசிப்பவர்கள் வேறு. எனவே எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனது நூல்களை வானதி பதிப்பகமே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. திரு. இராமனாதன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நூல்கள் நன்றாக விற்பனையாவதால் எனது படைப்புகளை எந்த மறுப்பும் இன்றி வெளியிட்டு உதவி வருகின்றனர். கவிமலர் டாட் காம் என்ற இணையத்தை கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். ஒவ்வொரு வருடம் அந்த இணையத்திற்கு வாடகை செலுத்த வேண்டும். வருடம் ஒன்றிற்கு ரூ.5000 என கடந்த 23 வருடங்களாக தொடர்ந்து வாடகை செலுத்தி வருகிறேன். அதில் முகநூல், இன்ஸ்டாகிராம் என அனைத்து இணைப்புகளும் உள்ளன. புகைப்படங்கள் உள்ளன. தமிழ், இந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் ஹைக்கூ கவிதைகள் உள்ளன. இதுவரை 5-1/2 இலட்சம் பேர் பார்த்து உள்ளனர். எந்த வெளிநாடும் சென்றதில்லை. வெளிநாட்டிலும் எனது வாசகர்கள் உண்டு. இணையம் மூலம் எனது படைப்புகள் உலகம் முழுவதும் பயணிக்கின்றன. நூல், இணையம் இரண்டு தளங்களிலும் வெற்றிகரமாக தொடர்ந்து பயணித்து வருகிறேன்.
பொன். குமார் : தொகுப்பு, இணையம் - இரண்டில் எந்த வழி சிறந்த வழி?
இரா. இரவி: இரண்டும் சிறந்த வழிதான். தொகுப்பை விட முகநூலில், வலைப்பூவில் அதிகம் எழுதலாம். செலவின்றி பயணிக்கலாம். தனி இணையத்திற்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். வலைப்பூ, முகநூல் இலவசம் தான். நான் இணையம், வலைப்பூ, முகநூல், இன்ஸ்டா, டுவிட்டர் என எல்லாவற்றிலும் எழுதி வருகிறேன். முகநூலில் 5000 நண்பர்கள். பின்தொடர்வோர் 25000 நபர்கள். முகநூல் RRAVIRAVI.
பொன். குமார் :தங்கள் ஹைக்கூக்கள் சில கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்வினை எப்படி உள்ளது?
இரா. இரவி : குடும்ப சூழ்நிலை காரணமாக நான் கல்லூரி சென்று படிக்க இயலவில்லை. +2 தேர்வில் 857 மதிப்பெண் எடுத்தேன், B.Com. படித்து தணிக்கையாளர் ஆக வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. அது நடக்கவில்லை. வேலைக்குச் சென்று, பின்னர் அஞ்சல்வழியில் B.Com. படித்தேன். தணிக்கையாளர் ஆகவில்லை. எனது கவிதைகள் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் வைத்துள்ளனர். குறிப்பாக எனது மூத்த மகன் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் B.C.A. படித்தபோது எனது 10 ஹைக்கூக்கள் பாடத்தில் வந்தது கண்டு மகிழ்ந்தேன். இது என் வெற்றி அல்ல. ஹைக்கூ வடிவத்தின் வெற்றி.
பொன். குமார் : தங்கள் ஹைக்கூக்களை பலர் ஆய்வு செய்திருக்கக் கூடும். ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?
இரா. இரவி : இருவர் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகின்றனர். நேர்முகம் கண்டுள்ளனர். இன்னும் ஆய்வேடு சமர்ப்பிக்கவில்லை. சிலர் M.Phil. ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி உள்ளனர், பாராட்டியே எழுதி உள்ளனர். சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி மத எதிர்ப்பு, பெண்ணடிமை ஒழிப்பு உள்ளதாக முடிவுரை எழுதி உள்ளனர்.
பொன். குமார் :ஹைக்கூவும் சென்ரியுவும் இரட்டைப் பிறவிகள் என்பர். அடையாளம்
காண்பது அரிது. தங்களுடையதில் இருக்கும் சென்ரியுக்களை தங்களுக்கு தெரிகிறதா?
இரா. இரவி : ஆம். ஹைக்கூ, சென்ரியு இரண்டும் கலந்தே எழுதி வருகிறேன். பிரித்துப் பார்க்கவில்லை. எள்ளல் சுவையுடன் இருப்பவை சென்ரியு. என்னுடைய படைப்புகளில் ஹைக்கூ அதிகம். சென்ரியு குறைவு,
பொன். குமார் : ஹைக்கூவின் மற்ற வடிவங்களான ஹைபுன், லிமரைக்கூ போன்ற வடிவங்களில் தாங்கள் ஏன் முயற்சிக்கவில்லை?
இரா. இரவி : ஹைபுன், லிமரைக்கூ எழுதி உள்ளேன். கவிச்சூரியன், மின்னிதழில் பிரசுரமானது, கன்னிக்கோவில் இராஜா, புதுவைத் தமிழ்நெஞ்சன் ஆகியோரின் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. அதிகம் எழுதவில்லை என்பதே உண்மை.
பொன். குமார் :பழமொழிகளை ஹைக்கூவாக்கும் கலை நன்றாக தங்களுக்கு வருகிறது. கவிஞர் ஈரோடு தமிழன்பனும் பழமொன்ரியு என்னும் ஒரு வகையை உருவாக்கியுள்ளார். தாங்கள் ஏன் ஒரு பழமொன்ரியு தொகுப்பைத் தரக் கூடாது?
இரா. இரவி: என்னுடைய ஹைக்கூ நூல்களில் பழமொன்ரியு உள்ளன. தனியாகப் பிரித்து நூலாக்கவில்லை என்பது உண்மை தான். பழமொழி நூல்களை வாசிப்பேன். அதிலிருந்து மாற்றி யோசித்து பழமொன்ரியு எழுதுவேன். நீங்கள் உள்பட பலரும் பாராட்டி உள்ளனர். பழமொழியை வெட்டியும் ஒட்டியும் எழுதுவதால் மிக எளிதாகச் சென்றடையும்.
பொன் குமார் : தங்கள் ஹைக்கூக்களை முனைவர் மரிய தெரசா ஹிந்தியில் மொழி பெயர்த்துள்ளார். ஹிந்தியில் வரவேற்பு எப்படி உள்ளது?
இரா. இரவி : பேராசிரியர் மரியதெரசா அவர்களும் ஹைக்கூ படைப்பாளி. இந்தி பண்டிட் என்பதால் மிக நுட்பமாக இந்தியில் மொழிபெயர்த்து இருந்தார். எனக்கு இந்தி தெரியாது. இந்தி தெரிந்தவர்களிடம் தந்த போது படித்து விட்டு பாராட்டினார்கள். இந்த பாராட்டில் பேராசிரிய மரிய தெரசா விற்கும் வெளியிட்ட வானதி பதிப்பகத்திற்கும் பங்கு உண்டு. சென்னை டில்லி சாகித்ய அகதெமி முகவரிக்கு நூல் அனுப்பி வைத்தேன். டில்லி சாகித்ய அகதெமியினர் பாராட்டி மடல் அனுப்பினார்கள். நல்ல முயற்சி என்றனர். நூலகத்தில் வைத்துள்ளோம் என்றனர்.
பொன். குமார் :ஹிந்தியைத் தவிர வேறு எந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?
இரா. இரவி : மலையாளத்திலும் மொழி பெயர்த்தனர். முகநூலில் பதிந்து உள்ளேன். நூலாக வரவில்லை. ஈஸ்வரன் என்ற பேராசிரியர் (கேரளா) ஆயிரம் ஹைக்கூ நூலை மலையாளத்தில் மொழி பெயர்த்து விட்டார். விரைவில் நூலாக வரும்.
பொன். குமார் :.வாழ்த்துகள் தங்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் முனைவர் இரா. மோகன். அவரைப் பற்றி தங்கள் கருத்து?
இரா. இரவி : தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் இறந்தது எனக்கு மிகப்பெரிய இழப்பு. வானதி பதிப்பகம் இராமனாதன் அவர்களை அறிமுகம் எனக்கு செய்து வைத்தவர் அவர்தான். மு.வ.வின் செல்லப்பிள்ளை இரா. மோகன். இரா.மோகனின் செலலப்பிள்ளை இரவி என்றால் மிகையன்று. என்னை எழுத்துத்துறைக்கும் பேச்சுத்துறைக்கும் அழைத்து வந்து பல பட்டிமன்றங்களில் பேச வைத்து அழகு பார்த்தவர். பொதிகை, தொலைக்காட்சி உள்பட பல தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் வாய்ப்பு வழங்கினார். தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களின் காதல் மனைவி தமிழ்ச்சுடர் பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களது அறக்கட்டளை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி 10,000 ரூபாய் பொற்கிழியும் வழங்கிப் பாராட்டினார்கள்.
பொன். குமார் :மகிழ்ச்சி. அலுவலக ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் தங்களுக்கு உறுதுணையாக இருந்தவர் எழுத்தாளர் இறையன்பு இ. ஆ. ப. அவர் குறித்து?
இரா. இரவி : உண்மைதான். அப்துல்கலாம் ஐயாவிற்கு அடுத்து நான் நேசிக்கும் மிகச்சிறந்த பண்பாளர் இறையன்பு ஐயா. அலுவலகம், சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலராக இருந்த போது உற்ற துணையாக இருந்தார்கள். இலக்கிய ரீதியாகவும் எனது பல நூல்களுக்கு பல்வேறு பணிகளுக்கிடையே தட்டாமல் அணிந்துரை வழங்கி உதவினார்கள். அவரது அணிந்துரைகளும் நூலிற்கு மகுடமாக விளங்கின. அவர் எனக்கு பல உதவிகள் செய்த போதும் எதையும் வெளியே சொல்ல மாட்டார். நான் அவருக்கு செய்த உதவிகளை மறக்காமல் பட்டியலிட்டு பாக்யா வார இதழில் எழுதி என்னைப் பாராட்டினார். தலைமைச் செயலாளர் ஆன போதும் இன்றும் தொடர்பில் உள்ளார். மதுரைக்கு அவர் வந்தால் உடன் சந்தித்து மகிழ்வேன். சென்னை சென்றால் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசி மகிழ்வேன். அவர் 165 நூல்களுக்கு மேல் எழுதி உள்ளார். அவரது நூல்களுக்கு நான் எழுதிய மதிப்புரைகளைத் தொகுத்த இறையன்பு கருவூலம் என்ற நூல் வந்தது. வானதி பதிப்பகம் தான் வெளியிட்டது. எனக்கு தமிழ்ச்செம்மல் விருது கிடைத்தது. அவரை சென்று சந்தித்தேன். பொன்னாடை போர்த்தி, திருவள்ளுவர் சிலை பரிசளித்து பாராட்டி மகிழ்வித்தார். மறக்க முடியாத மாண்புமிகு மனிதர். அறவழி நடப்பவர், நல்வழிப்படுத்தியவர், நெறிப்படுத்தியவர். அவரது ஒற்றை வரியை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி வருகிறேன். “இயங்கிக் கொண்டே இருங்கள்” என்பது தான் அது. சும்மா இருந்தால் இரும்பு கூட துருப்பிடித்து விடும். எனவே என்னுடைய தொடர் இயக்கத்திற்கு காரணம் அவரே. பெரிய மனிதர், பெரிய பதவி வகித்தவர் என்ற செருக்கு இல்லாமல் அன்பாகப் பழகிடும் இனியவர். நோய்வாய்ப்பட்ட போது சென்னையில் மருத்துவரிடம் அவரே அழைத்துச் சென்று உயிர் பிழைக்கக் காரணமாக இருந்தவர். இந்த நூல் வருவது குறித்த தகவலைச் சொன்னேன். சேலத்துக்காரர் என்பதால் தங்களை அவரும் நன்கு அறிவார். உடன் பாராட்டி வாழ்த்தினார். நல்ல முயற்சி நடக்கட்டும் என்றார்.
பொன் குமார் :நன்றி. ஹைக்கூ, கவிதை இரண்டையும் எழுதி வருகிறீர். இரண்டில் தங்களுக்கு பிடித்த வடிவம் எது?
இரா. இரவி : ஹைக்கூ, கவிதை – இரண்டு வடிவத்திலும் எழுதி வந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் ஹைக்கூ வடிவம்தான். அதனால் தான் எனது நூல்களில் பெரும்பாலானவை ஹைக்கூ நூல்கள்தான்.
பொன். குமார் :சமூக பிரச்சனைகளை பேசுவதற்கு ஏற்ற வடிவம் ஹைக்கூவா? கவிதையா?
இரா. இரவி: இரண்டிலும் பேசலாம். பேசி வருகிறேன். சுருங்கச் சொல்லி உணர்த்துவது ஹைக்கூ. நீட்டி முழக்குவது கவிதை. இரண்டும் தேவை தான். இரண்டுக்கும் இரண்டு வகை வாசகர்களும் உண்டு.
பொன். குமார் :படைப்புத் துறையில் இயங்கிய நீங்கள் விமர்சனத் துறைக்கு வந்தது ஏன்?
இரா. இரவி : மிகையில்லை. தாங்கள்தான், உண்மைதான். விரிவான தங்களின் விமர்சனத்தை படித்தேன். பல சிற்றிதழ்கள். நானும் முயற்சித்தேன். 25 ஹைக்கூ நூல் விமர்சனங்கள், ஹைக்கூ ஆற்றுப்படை நூலாக வந்தது. இனிய நண்பர் கவிஞர் வசீகரன் தான் பதிப்பித்தார். 50 நூல்கள் விமர்சனம் புத்தகம் போற்றுதும் நூலாக வந்தது. வானதி பதிப்பகம் வெளியிட்டது. இறையன்பு கருவூலம், இலக்கிய இணையர் படைப்புலகம். ஏர்வாடியார் கருவூலம் மூன்றும் விமர்சன நூல்களே. வானதி பதிப்பகமே வெளியிட்டது. 1000 நூல்களுக்கு மேல் விமர்சனம் எழுதி உள்ளேன். இணையத்தில் உள்ளது. அனைத்தையும் நூலாக்கவில்லை. எதிர்காலத்தில் நூலாக்கும் திட்டம் உள்ளது.
பொன். குமார் :விரைவில் நூலாக கொண்டு வர வாழ்த்துகள். விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டும்?
இரா. இரவி : எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எனது நூல்களுக்கு விமர்சனம் எழுதி உள்ளார். மயிலிறகு வருடல் போல இருக்க வேண்டும் என்பார். நான் பிரபலங்கள் மட்டுமல்ல, முதல் நூல் வெளியிட்ட படைப்பாளிகளுக்கும் பெரும்பாலும் நல்லவையை மட்டும் பாராட்டி விட்டு அல்லவை எழுதுவதில்லை. படைப்பாளியை காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அன்னப்பறவை குணம் என்று சொல்வார்களே. பாலை மட்டும் அருந்திவிட்டு நீரை விட்டு விடும் என்று. அதுபோல, நிறைகளை மட்டும் சொல்லிவிட்டு, குறைகளை விட்டு விடுவேன். சிலருக்கு அணிந்துரைகளும் தந்து உள்ளேன்.
பொன். குமார் :விமர்சனத்திற்கு படைப்பாளிகளிடமிருந்து எதிர்வினைகள் ஏதும் வந்ததுண்டா?
இரா. இரவி: பெரும்பாலும் பாராட்டியே எழுதுவதால் எல்லோரும் மகிழ்ந்து வருகின்றனர். உங்கள் விமர்சனம் மேலும் புதியவை படைக்கத் தூண்டுதலாகவும் ஊக்கமாகவும் உள்ளது என்றே சொல்வார்கள். எதிர்மறையாக யாரையும் எந்த நூலையும் விமர்சனம் செய்ததே இல்லை.
பொன். குமார் :தாங்கள் பணிபுரிந்த சுற்றுலாத்துறை தங்களின் இலக்கியப் பணிக்கு தடையாக இருந்ததா?
இரா. இரவி : சுற்றுலாத்துறையில் தடை ஏதுமில்லை. சிலருக்கு பொறாமை உண்டு. அதன் காரணமாக இடைஞ்சல் செய்வார்கள். அதனை பொருட்படுத்தாமல் கடமையில் கண்ணாக இருந்து விட்டு ஓய்வு நேரத்தில் இலக்கியத்திலும் கவனம் செலுத்தினேன்.
பொன். குமார்: :நல்ல செயல். இலக்கியத்துக்கு தங்கள் குடும்பத்தின் ஒத்துழைப்பு எப்படி?
இரா. இரவி: குடும்பத்தில் யாருக்கும் இலக்கிய ஈடுபாடு இல்லை. மனைவி ஜெயசித்ரா இல்லத்தரசி. அவர் ஆன்மிகவாதி. நான் நாத்திகன். என் வழியில் அவர் குறுக்கிடுவதில்லை. அவர்வழியில் நான் குறுக்கிடுவதில்லை. வேற்றுமையில் ஒற்றுமை என இந்தியா போல எங்கள் வாழ்க்கை செல்கிறது. ஆதரவு தராவிட்டாலும் எதிர்ப்பு சொல்வதில்லை. அதனால் தொடர்ந்து இயங்கி வருகிறேன். மகன்கள் பிரபாகரன், கௌதம். இன்றைய இளைய தலைமுறை. மூத்த மகன் பிரபாகரன் அம்மா வழியில் ஆத்திகன். இளைய மகன் கௌதம் என் வழியில் நாத்திகன். என் மகன்களுக்கும் இலக்கிய ஈடுபாடு இல்லை. என் அம்மா சரோஜினி மட்டும் பாராட்டி மகிழ்வார்.
பொன். குமார் :குடும்பத்தில் எவருக்கேனும் இலக்கியத்தில் ஈடுபாடு உண்டா?
இரா. இரவி: குடும்பத்தில் யாருக்கும் இலக்கிய ஈடுபாடு இல்லை.
பொன். குமார் :தாங்கள் பல விருதுகளைப் பெற்றுள்ளீர். வாழ்த்துகள். தாங்கள் பெற விரும்பும் விருது எது?
இரா. இரவி : தமிழ்ச்செம்மல் விருது பெற்றது போதும். இனி எந்த விருதையும் நான் எதிர்பார்க்கவில்லை.
பொன். குமார் :நல்ல முடிவு. இதற்கே ஒரு விருது தர வேண்டும். தங்களின் இலட்சியம் என்ன? அடுத்த கட்ட முயற்சி என்ன?
இரா. இரவி : ஏற்றத்தாழ்வற்ற, சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும். அதற்கு என் படைப்புகள் உதவ வேண்டும். எனது படைப்புகள் மட்டும் உள்ள கவிமலர் டாட் காம் இணையம் போல மற்றொரு இணையம் தொடங்கி பலரின் படைப்புகளை இணையத்தில் ஏற்றிடும் திட்டம் உள்ளது. விரைவில் நிறைவேறும்.
பொன். குமார் :வரவேற்புக்குரியது. வாழ்த்துகள். நிறைவாக பொதுவாக தாங்கள் வாசகர்களுக்கு கூற விரும்புவதைக் கூறுங்கள்?
இரா. இரவி: சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். சாதி, மத வேறுபாடு கூடாது. மனிதநேயம் வேண்டும். திருக்குறள் வழி நடக்க வேண்டும். அறவாழ்வே அழகான வாழ்வு. நன்றி. வணக்கம், எனது நூல்களுக்கு விமர்சனம் நல்கிய நேர்முகம் கண்ட உங்களுக்கு நன்றி. தமிழ்த்தேனீ இரா.மோகன் எனது நூல்களுக்கு தந்த அணிந்துரைகளைத் தொகுத்து இரா.இரவி படைப்புலகம் என்ற நூல் வந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகமும் கலைஞன் பதிப்பகமும் இணைந்து வெளியிட்ட உதவிப் பேராசிரியர் முனைவர் சங்கீத் ராதா எழுதிய கவிஞர் இரா.இரவி என்ற நூல் வந்தது. அந்த நூல் அவருக்கு தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி கிடைக்க காரணமாக அமைந்தது, இனிய நண்பர் சேலம் பொன்.குமார் எழுதிய எனது ஹைக்கூ நூல்களின் விமர்சனங்கள் இரா.இரவியின் ஹைக்கூ உலகம் என நூல் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த நூலையும் வானதி பதிப்பகமே வெளியிடுகிறது. தங்களுக்கும் வானதி பதிப்பகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரு படைப்பாளிக்கு இதுதான் அங்கீகாரம் மேலும் விருதும் ஆகும். கவிதை உறவு, புதுகைத் தென்றல், மனித நேயம், ஏழைதாசன் போன்ற சிற்றிதழ்களும் கவிச்சூரியன், தமிழ்நாடு இ.பேப்பர்.காம் போன்ற இணைய இதழ்களும் எனது நூல்களுக்கு மதிப்புரை வெளியிட்டன. அவர்களுக்கும் நன்றி. ஆயிரம் ஹைக்கூ நூலை வடிவமைத்த கவிஞர் கன்னிக்கோவில் ராஜா அவர்களுக்கும் நன்றி.
பொன். குமார் :மிக்க மகிழ்ச்சி. மிகச் செறிவாக, மிகச் சிறப்பாக, தெளிவான, நேர்மையான பதில் அளித்ததற்கு நன்றி. ஹைக்கூ பணி தொடர வாழ்த்துகள்.
***