பாசம்
இரவின் நடுவில்..
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
குடிசைகள்..சில கல் வீடுகள்..
மண் வீதியின் முடிவில்
வயலுக்கு இறங்கி செல்ல
கற்தூண்கள் நட்டு வைத்த நுழைவாயில்..
ஆல மரத்தின் அடியில் கயிற்றுக் கட்டிலில்
படுத்துக் கிடந்த என் காலடியில் தூங்காமல்
விழித்துக் கிடந்த நன்றி மிக்க நாய்..
பகல் முழுதும்
பொடி சுடும் மணல் கொண்ட வீதி
இரவில் குளிர்ந்து ..என்னை எழுப்பிய நேரம்
மடை திறக்க மின்சாரம் வரும் சமயம் ..
ஏதோ சிறு வயிற்று வலிதான் ..எனக்கு
முன்னிரவில்..
ஏழு மணியளவில்..
எல்லா குடிசைகளும் ..வீடுகளும்..
பதறின..என்னருகே எத்தனை பேர்..
"ஏண்டா..மொரட்டு பயலே..
என்னடா பண்ணுது... "
கஷாயம் கொண்டு வந்த கைகள்..
தலையை வருடிய கைகள்..
முதுகை தட்டிய கைகள்..
பின் நிம்மதியாக
கலைந்து போன மனிதர்கள்..
இவை எதுவும் இல்லாத
தம்பி..நகரத்தில்..
அடுக்கு மாடி கட்டிடத்தில்..
தொகுப்பு வீடு ஒன்றில் ..வாழ்பவன்..
போன வாரம் வந்த போது கேட்டான்..
"அண்ணே ..நெலத்தை வித்துட்டு
வந்துடுன்னே..நா இருக்கற எடத்துல
ஒரு பெட்டிக் கடை வச்சாக் கூட
போதும் .."
பாசத்தால்தான் சொல்கிறான்..
..

