நண்பர்களைப் போற்று

2011 ல் புதுக் கவிதை

மனதாலும், சொல்லாலும்
பிறரைத் துன்புறச் செய்வதும்,
பலன் தரும் நிழல் தரும்
மரத்தைச் சாய்ப்பதுவும் ஒன்றே!

பிறரிடம் இன்சொல் பேசுவதும்,
இன்முகம் காட்டி உதவுவதும்,
காய்க்கும் பலன் தரும் மரத்திற்கு
நீர் ஊற்றுவதும் ஒன்றே!

இன்னாச்சொல் தவிர்த்து,
இனிய சொல் கூட்டி,
இன்முகம் காட்டி நட்பெனும்
செடியை வளர்!

கனிதரும் மரம் போன்ற
நட்பைப் போற்று!
நண்பர்களைப் போற்று!
என்றென்றும் போற்று!

2015 ல் மரபுக் கவிதை

வாய்க்கும் வரமே உனக்கு! - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

மனதாலும், சொல்லாலும் மற்றோரைத் துன்பம்
நனிமிகச் செய்வதும்; என்றும் - இனிதாம்
பலன்தரும் நன்நிழல் தங்கும் மரத்தை
வலுவிழக்கச் சாய்ப்பதுவும் ஒன்று! 1

பிறரிடம் இன்சொற்கள் பேசுவதும், நட்பின்
உறவோடு இன்முகம் காட்டி – அறம்செய்து
காய்க்கும் மரத்திற்கு நீர்ஊற்றிக் காப்பாற்றல்
வாய்க்கும் வரமே உனக்கு! 2

இன்னாச்சொல் நீக்கி, இனியசொல் கூட்டியே
இன்முகம் காட்டியும் நட்பென்னும் - மன்னுபுகழ்
முட்களற்ற பூச்செடியை, வண்ணமுறச் செம்மரமாம்
நட்பையும் போற்றிடுவாய் நன்கு! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-15, 3:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 120

மேலே