காதல் மழையோடு ஒரு கவிப்பயணம்

அங்காங்கே தொடாதே
புல்லரித்து போகின்றதே உடல்
சில்லென்ற உன் தழுவலில் .

உச்சி முதல் பாதம் வரை
உரசாதே .
உஷ்ணத்தின் பாஷைகள்
உறங்கி விடுகின்றது
நொடிப்பொழுதில் .

மோசக்காரனடா நீ .!
மொத்த முத்தம் உனக்கே
வேண்டும் என்று
கார்முகிலாகி இதழ்களை
சுவைக்கின்றாயே .!

துளி துளியாய் துள்ளி வந்து
சீண்டுகின்றாயா என்னை -இரு நானும் தூய்மையாகிகொள்கின்றேன் உன் தீண்டலில் .

தடுத்திட தடுத்திட மனம் நினைக்க
தனைமறந்த கரங்கள் மட்டும்
ஏந்திக்கொள்வது உன்னை -தன்
ஏக்கம் தவிர்பதற்கோ .

சிலர் உன்னை வஞ்சிக்கின்றனர்
நாசகாரன் என்று .
பலர் உன்னை வரவேற்கின்றனர்
கொடைவள்ளல் நீ
என்று.
நான் உன்னை கொஞ்சிக்கொண்டிருக்கின்றேன்
என் கள்வன் மழை என்று.

அதிகாலையில் வந்து இம்சிக்காதே
அந்தரங்க நேரமாம் அந்திப்பொழுதில்
வந்துவிடு -உன்னை
ஆரத்தழுவி அணைத்துகொள்கின்றேன் என்னோடு .....!!!

எழுதியவர் : கயல்விழி (11-Sep-15, 9:34 am)
பார்வை : 969

மேலே