கொஞ்சம் குழப்பம், நிறைய கோழைத்தனம்
சென்ற சனிக்கிழமை ஒரு முக்கியமான வேலையாக எம். ஜி. ரோடு பழைய புத்தகக் கடைகளுக்கு திக்விஜயம். மூன்று பைகளில் புத்தகங்களை நிறைத்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன்.
வழக்கமாக நான் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் ஏதாவது ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டுவிடுவேன். பெங்களூரில் சைக்கிள்முதல் லாரிவரை சகல வாகனங்களும் டிராஃபிக் நெரிசலில் நின்று நின்று ஊர்வதுதான் வழக்கம் என்பதால், ஒரு மணி நேரப் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 20 முதல் 30 பக்கங்கள்வரை படித்து முடித்துவிடலாம்.
அன்றைக்கு, ஆட்டோ ஒரு சிக்னலில் நின்றிருந்தபோது எதேச்சையாக மீட்டரைப் பார்த்தேன், ‘38 ரூபாய்’ என்று காட்டியது.
சில விநாடிகள் கழித்து, பச்சை விளக்கு விழுந்தது, ஆட்டோ புறப்பட்டது, சட்டென்று மீட்டரில் இருந்த தொகை முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது.
நான் திகைத்துப்போனேன். ஆட்டோ மீட்டரில் சூடு வைப்பார்கள், தெரியும், ஆனால் அதுகூட ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று படிப்படியாகதானே ஏறும்? இப்படி திடுதிப்பென்று பத்து ரூபாய் எகிறுவதாகக் கேள்விப்பட்டதில்லையே!
அடுத்த குழப்பம், இப்போது நான் என்ன செய்யவேண்டும்? என்னை ஏமாற்றப்பார்க்கிற இந்த ஆட்டோ டிரைவருடைய சட்டையைப் பிடிக்கவேண்டுமா? ‘அன்னியன்’போல அவர்மீது பாய்ந்து பிராண்டவேண்டுமா?
என்னுடைய கன்னடம், மிக எளிய வார்த்தைகள், வாக்கியங்களால் ஆனது, அதில் இரண்டு வார்த்தைகளுக்கு மூன்று இலக்கணப் பிழைகளாவது இருக்கும், ஆங்காங்கே ஆங்கிலம், ஹிந்தி, சில சமயம் தெலுங்கு வார்த்தைகளைக்கூடச் சேர்த்துக் கலப்படம் செய்ய நான் வெட்கப்படுவதில்லை.
இந்த ஓட்டைக் கன்னடத்தை வைத்துக்கொண்டு, யாரிடமும் சுமுகமாகப் பேசலாம், ஆனால் சண்டை போடமுடியாது.
வேண்டுமானால், ஆட்டோ டிரைவரிடம் தமிழில் கண்டபடி கத்தலாம், கெட்ட வார்த்தையில் திட்டலாம், அதெல்லாம் அந்த டிரைவருக்குச் சுத்தமாகப் புரியப்போவதில்லை, ஒருவேளை புரிந்தாலும், நிச்சயமாக அதை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்.
தவிர, நிஜமாகவே அந்த மீட்டர் முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது என்பதை நான் எப்படி நிரூபிப்பேன்? இப்போது மீட்டர் சரியாகதானே ஓடிக்கொண்டிருக்கிறது?
சில நிமிடங்களுக்குமுன்னால் அப்படி ஓர் ஊழல் நடந்தது என்பதற்கு என்ன சாட்சி? இந்த டிரைவரோ, போலீஸோ, நீதிமன்றமோ என்னை எப்படி நம்பும்? இதற்காக ஒவ்வொருமுறை ஆட்டோ ஏறும்போதும் அதன் மீட்டரை வீடியோ படம் எடுத்துவைக்கவா முடியும்?
இத்தனை அவஸ்தைகளோடு ஒப்பிட்டால், பத்து ரூபாய் என்பது சாதாரணத் தொகை. பேசாமல் நான் என்னுடைய புத்தகத்தைப் படிக்கத் திரும்பிவிட்டேன்.
***
என். சொக்கன் …
31 08 2009