ட்டூ மினிட்ஸ்

ஒரு மாதம் முன்பாக, அவர் என்னைத் தேடி வந்திருந்தார்.

அவர் பெயர் ஸ்ரீமதி. ஆறு மாதங்களுக்குமுன்புவரை எங்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். சில தனிப்பட்ட காரணங்களால் பணியிலிருந்து விலகிவிட்டார்.

இப்போது, அவருக்கு இன்னோர் இடத்தில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. இங்கே அவர் வாங்கிக்கொண்டிருந்ததைப்போல் இருமடங்குக்குமேல் சம்பளம், வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள், இன்னபிற சவுகர்யங்கள்.

ஆனால், நான்கு சுற்று நேர்முகத்தேர்வுகளுக்குப்பிறகும், அந்த நிறுவனம் ஸ்ரீமதியின் வேலை நியமனத்தை இன்னும் உறுதி செய்யவில்லை. அதற்குமுன்னால், அவருடைய முந்தைய பணியிடத்தில் உள்ள சிலரின் Reference (இதற்கு என்ன தமிழ் வார்த்தை?) கேட்டிருக்கிறார்கள்.

‘ரெஃபரன்ஸ்க்காக நான் உங்க பேர், நம்பரை அவங்களுக்குக் கொடுக்கலாமா சார்?’

‘ஓ, தாராளமா’

அவருடைய ‘தேங்க் யூ’வில் உண்மையான நன்றி தெரிந்தது. அதன்பிறகு சிறிது நேரம் வேறு ஏதோ பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு அவர் விடை பெற்றுச் சென்றார்.

இரண்டு நாள் கழித்து, நான் ஒரு சூப்பர் மார்க்கெட் க்யூவில் நின்றுகொண்டிருந்தபோது என் செல்பேசி ஒலித்தது, ‘ஹலோ, நாங்க ____ கம்பெனியிலிருந்து பேசறோம், உங்களோட வொர்க் பண்ண மிஸ். ஸ்ரீமதி எங்க கம்பெனியில வேலைக்கு விண்ணப்பம் செஞ்சிருக்காங்க, அவங்களைப்பத்திக் கொஞ்சம் உங்ககிட்ட பேசமுடியுமா?’

நான் பதில் சொல்வதற்குள், எனக்குமுன்னே வரிசையில் நின்றிருந்தவர்கள் இருவரும் பணம் செலுத்திவிட்டுப் போய்விட்டார்கள். அடுத்து, என் முறை.

இந்த நேரத்தில் நான் செல்பேசியில் விலாவரியாகப் பேசிக்கொண்டிருந்தால், கவுன்டரில் இருக்கிற கன்னிகை மனத்துக்குள் திட்டுவாள், பின்னால் காத்திருப்பவர்கள் வெளிப்படையாகவே திட்டுவார்கள், எல்லோருடைய நேரமும் வீணாகும், தேவையா?

ஆகவே, மறுமுனையில் இருந்தவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன், ‘ஒரு ட்டூ மினிட்ஸ் கழிச்சுக் கூப்பிடமுடியுமா?’

’நோ ப்ராப்ளம்’ என்றபடி அவர் இணைப்பைத் துண்டித்தார்.

நான் நிம்மதியாகப் பணத்தைச் செலுத்திவிட்டு வெளியே வந்தேன், மறுசுழற்சி பிளாஸ்டிக் பையினுள் தேடி, பார்லே குழுமத்திலிருந்து சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் டக்கரான ‘LMN‘ எலுமிச்சை பானத்தைத் திறந்து குடித்தேன், செல்ஃபோனில் இளையராஜாவின் லேட்டஸ்ட் கன்னடப் பாடல் ‘ரங்கு ரங்கு’வை ஒலிக்கவிட்டபடி சாலையைக் கடந்து நடந்தேன்.

இதற்குள், நிச்சயமாகப் பத்து நிமிடமாவது கடந்திருக்கும். ஆனால் ‘ட்டூ மினிட்ஸ்’ல் திரும்ப அழைப்பதாகச் சொன்ன அவர்கள் என்னைக் கூப்பிடவில்லை.

அப்போதுமட்டுமில்லை, அன்று முழுக்க, அடுத்த ஒரு வாரத்துக்கு அந்த நிறுவனத்திலிருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. தேவைப்பட்டால் கூப்பிடுவார்கள் என்று நானும் சும்மா இருந்துவிட்டேன்.

நேற்று காலை, ஸ்ரீமதி என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘சார், நான் சொன்னேனே, அந்தக் கம்பெனியிலிருந்து உங்களுக்கு யாராவது ஃபோன் பண்ணாங்களா?’

‘ஆமாம் ஸ்ரீமதி, ஒரு ஃபோன் வந்தது’

‘நீங்க என்ன சொன்னீங்க?’

‘நான் அப்போ கொஞ்சம் பிஸியா இருந்தேன், அதனால ட்டூ மினிட்ஸ் கழிச்சுக் கால் பண்ணச் சொன்னேன், ஆனா அவங்க அதுக்கப்புறம் என்னைக் கூப்பிடவே இல்லை’

மறுமுனையில் நிசப்தம். சில விநாடிகளுக்குப்பிறகு, ‘கூப்பிடவே இல்லையா?’ என்று அதிர்ச்சியாகக் கேட்டார் அவர்.

‘இல்லைங்க ஸ்ரீமதி’ நான் என் குற்றவுணர்ச்சியைக் குறைத்துக்கொள்வதற்காகத் தொடர்ந்து பேசினேன், ‘அவங்க மறுபடி கூப்பிட்டிருந்தா நான் உங்களைப்பத்தி நல்லவிதமா சொல்லியிருப்பேன், பட் ஏனோ அவங்க கால் பண்ணவே இல்லை’

ஸ்ரீமதி என்னை நம்பினாரா, இல்லையா, தெரியவில்லை, ‘சரி சார், நான் கொஞ்சம் விசாரிச்சுட்டு, அப்புறமாக் கூப்பிடறேன்’ என்று ஃபோனை வைத்துவிட்டார்.

இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு வந்தது, ‘சார், அவங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க’

‘எ-என்னாச்சு ஸ்ரீமதி’

‘ஆமா சார், நீங்க பிஸியா இருக்கீங்கன்னதும் அவங்க உங்க கம்பெனியிலயே இன்னொருத்தரைக் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க, அவர் என்னைப்பத்தி ரொம்ப நெகட்டிவ்வா சொல்லியிருக்கார்போல, அதனால எனக்குக் கொடுக்கறதா இருந்த அந்த Offer-ஐ இன்னொருத்தருக்குக் கொடுத்துட்டாங்களாம்’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது, இப்படியெல்லாமா செய்வார்கள்?

இப்போது, அவர் அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்திருந்தார், ‘உங்க கம்பெனியில ஒன்னரை வருஷம் சின்ஸியரா வேலை பார்த்தேன் சார், என்னைப்பத்தி நல்லவிதமா எதுவும் சொல்லவேணாம், உதவி செய்யவேணாம், இப்படி எனக்குக் கிடைச்ச நல்ல சான்ஸையும் அழிக்காம இருக்கலாம்ல? இப்ப நான் என்ன செய்வேன் சார்?’

அவர் திட்டுவது என்னையா? அல்லது, அவரைப்பற்றித் தவறாகக் கருத்துச் சொன்ன அந்த இன்னொருவரையா? எனக்குச் சரியாகப் புரியவில்லை.

ஆனால், அழுகிறவர்களுக்கு உடனடியாகச் சமாதானம் சொல்வதைவிட, அவர்களை அழ விடுவதுதான் உத்தமமான விஷயம். ஆகவே, செல்பேசியின் சத்த அளவைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, அடுத்த சில நிமிடங்கள் அவருடைய அழுகையை, புலம்பலைப் பொறுமையாகக் கேட்டு ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தேன்.

அவருக்கு என்னால் என்ன ஆறுதல் சொல்லமுடியும்? அவர் வேலைக்குச் சேர்வதாக இருந்த நிறுவனம், மிக மிகப் பெரியது. அங்கே அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைத்திருக்கவேண்டும். ஆனால், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிற இன்னொருவரால், அந்த அபூர்வமான வாய்ப்பு பறிபோயிருக்கிறது.

அதுமட்டுமில்லை, இனி அவர் எங்கே விண்ணப்பம் செய்தாலும், நிச்சயமாக முந்தைய நிறுவனத்திலிருந்து Reference கேட்பார்கள். எதை நம்பி, யாருடைய பெயரைக் கொடுப்பார் அவர்?

அப்போதுதான் எனக்கு இன்னொரு திகிலான கற்பனை தோன்றியது. ஒருவேளை, நான்தான் ஸ்ரீமதியைப்பற்றி எதிர்மறையான விமர்சனம் சொல்லி அவருடைய வேலைவாய்ப்பைக் கெடுத்துவிட்டதாக அவர் நினைக்கிறாரோ? நிஜமாகவே நான் அவர்களிடம் எதுவும் பேசவில்லை என்பதை எப்படி அவருக்கு நிரூபிப்பேன்?

இப்படி நினைக்க ஆரம்பித்ததும், என்னுடைய குற்றவுணர்ச்சி அதிகமாகிவிட்டது. சாதாரண சூப்பர் மார்க்கெட் க்யூ, அது ரொம்ப முக்கியமா? இரண்டு நிமிடம் அவரைப்பற்றி நல்லவிதமாகப் பேசிவிட்டு, அதன்பிறகு பில் போட்டிருந்தால் நான் என்ன குறைந்துபோயிருப்பேனா? ‘எல்லாம் ட்டூ மினிட்ஸ் கழிச்சுப் பேசிக்கலாம்’ என்று நான் அலட்சியம் காட்டியதால்தானே அவர்கள் இன்னொருவரை அழைத்தார்கள்? அதனால்தானே இந்தப் பெண்ணின் வேலைவாய்ப்பு கெட்டுப்போச்சு?

யார் கண்டது? ஒருவேளை நான் அந்த அழைப்பைத் துண்டிக்காமல் தொடர்ந்து பேசியிருந்தால், இப்போது ஸ்ரீமதி தொலைபேசியில் அழுகிற அவசியம் ஏற்பட்டிருக்காதோ என்னவோ.

ஸ்ரீமதி சிறிது நேரம் அழுதார், நிறைய நேரம் புலம்பினார், அதன்பிறகு அவரே ஏதோ ஒருவிதத்தில் சமாதானம் அடைந்தார், ‘சரி சார், உங்க உதவிக்கு நன்றி’ என்று வஞ்சப் புகழ்ச்சி அணியில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

இனிமேல், ஸ்ரீமதி இழந்த அந்த வேலையைத் திரும்ப வாங்கித்தருவதற்கு என்னால் எதுவும் செய்யமுடியாது. ஆனால் அடுத்தமுறை ‘ட்டூ மினிட்ஸ்’ என்று என் சவுகர்யத்துக்காக ஒரு விஷயத்தைத் தள்ளிப்போடுவதற்குமுன்னால், கொஞ்சமாவது யோசிப்பேன்.

***

என். சொக்கன் …

10 08 2009

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (18-Sep-15, 11:06 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 109

மேலே