ஒன்பதாம் வகுப்புக் கதை

"ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்" என்ற வரியுடன் ஒரு கதை எழுத வேண்டும் என்ற வேட்கை சமீப காலமாக என்னை ஆட்கொண்டிருந்தது. தொடக்கம் அப்படி இருக்க வேண்டும் என்று தான் விரும்பினேனே தவிர ராஜா கதை சொல்ல வேண்டும் என்ற வேகமோ அல்லது ராஜாக்களைப் பற்றிய அறிவோ எனக்கு இருந்ததில்லை.

பிறகு எதற்காக இவனுக்கு கதை எழுதும் வேலை என்று உங்களுக்குக்த் தோன்றலாம். வேறு ஒன்றும் இல்லை. போன வாரம் தமிழ் அய்யா சந்தியாவை அவள் எழுதிய கதைக்காகப் பாராட்டினார். அது எனக்குப் பொறுக்க முடியவில்லை.

சந்தியா எல்லாவற்றிலும் என்னை விட மட்டம் தான். இங்கிலீஷ் டியூசனில் ஒரு சென்டன்ஸ் சொல்லு என்று சார் கேட்கும் போது "Rama is a good buy" என்று நான் சொன்னால் உடனே "Sita is a good girl" என்பாள். அடுத்த தடவை "I shall reply to the letter you sent last week" என்று சொன்னால் விழிப்பாள்.

பள்ளி விழாவில் எந்தப் போட்டியாக இருந்தாலும் நான் தான் முதலிடம் வாங்குவேன். அப்படிப் பட்ட நானே இது வரை ஒரு கதை கூட எழுதியதில்லை. இவளால் எப்படிச் செய்ய முடிந்தது? இதற்கு ஏதாவது நிவாரணம் தேடியே தீர வேண்டும்.

பஞ்ச தந்திரக் கதை எதையாவது உல்டா செய்து விடலாமா? அல்லது மெகா சீரியல் கதையில் ஒரு பகுதியைச் சுட்டு விடலாமா? சேச்சே...வேண்டாம் பள்ளிக் கூடத்தில் அடல்ஸ் ஒன்லி கதையை அனுமதிக்க மாட்டார்கள். கதைக்கான கரு கிடைக்காததால் அந்த சிந்தனையைக் கொஞ்ச நாள் ஒத்தி வைத்தேன். இருந்தாலும் வன்மம் உள்ளூற இருந்தே வந்தது.

'உனக்குத் தலைகீழாக நின்றாலும் கணக்கு வராது' என்று கணக்கு வாத்தியார் ஓரிரு நாட்களில் சந்தியாவைத் திட்டினார். அவள் தலை கீழாக நின்றால் எப்படி இருக்கும் என்ற கீழ்த்தரமான கற்பனைகள் உதித்தது. இதற்கெல்லாம் குறைச்சல் இல்லை. ஆனால் கதை மட்டும் தான் வர மாட்டேன் என்கிறது.

அந்தப் பள்ளியில் மாணவர்களும், மாணவிகளும் பேசிக் கொள்வதே அபூர்வமான நிகழ்ச்சி. அப்படியே பேசினாலும் அது அனைவருக்கும் தெரிந்து விடும். இருந்தாலும் ஒரு நாள் டியூசன் முடிந்து சைக்கிளை எடுக்கும் போது, "எங்கம்மா உன்னைய வீட்டுக்கு வரச் சொன்னாங்க. என்னைக்கு வாரே?" என்று கேட்டாள். நாக்கு வறண்டு, கை கால் எல்லாம் வெடவெடத்து விட்டது. இன்னொரு நாள் வருவதாகச் சொல்லி தப்பித்து வந்தேன்.

நல்ல வேளை பசங்க யாரும் அதைப் பார்க்கவில்லை. 'பசங்க' என்றால் ஏதோ ஐம்பது பேர் என நினைத்துக் கொள்ள வேண்டாம். என் வகுப்பில் இருக்கும் 17 பையன்களில் நானும், பழனிச்சாமியும் மட்டுமே
டியூசனுக்க்குப் பெயர் கொடுத்திருந்தோம்.

மற்றவர்கள் எல்லாம் பெண்கள் தான். இந்தக் கண்ணாடிக் கந்தசாமி வாத்தியார் சிறப்பு வகுப்பில் ஏற்றும் அறிவு தீபத்திற்காகவோ அல்லது புள்ளைகளை சைட் அடிக்கவோ தான் நாங்கள் இருவரும் வருகிறோம் என்று நினைத்தால் அது தவறாகும். சனி, ஞாயிறு எல்லாம் டியூசன் இருப்பதாகச் சொல்லி சினிமாவுக்குப் போவதற்கே இந்த ஏற்பாடு. இதில் பழனிச்சாமி வார நாட்களில் வரவே மாட்டான். வாத்தியார் கேட்டால் 'தோட்டத்துல வேலை இருந்துதுங்க சார்' என்று கூறி விடுவான்.

வியர்வை படிந்த கிராமங்களில் மக்கள் இளைப்பாறுவதற்கும், சொந்த பந்தங்களோடு கூடி மகிழ்வதற்கும் நடத்தப்படும் திருவிழாக்களில் மாவிளக்கு எடுப்பார்கள். சந்தியாவின் கிராமத்தில் நடக்கும் கோவில் விசேசத்தை வேடிக்கை பார்க்கப் போகலாமென்று பழனிச்சாமி ஐடியா கொடுத்தான்.

இருவரும் போனோம். மாவிளக்கு எடுத்து வரும் பெண்களில் சந்தியாவும் ஒருத்தி. தாவணியில் அப்போது தான் பார்க்கிறேன். பார்ப்பதற்கே படபடப்பாக இருந்தது. மிக அழகாகத் தெரிந்தாள்.

அதன் பிறகு ஏனோ கதை எழுத வேண்டும் என்ற நினைப்பே வரவில்லை. கவிதை தான் வருகிறது.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - குப்புச (20-Sep-15, 6:07 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 462

மேலே