சாரதை - பேயடித்த கதை

...........................................................................................................................................................................................
“ ச்சீ, என்னடா இது? இன்னிக்குமா? தூ.. சட்டையெல்லாம் மல்லிப்பூ ஒட்டியிருக்கு.. தட்டிட்டு வெளிய வாடா..!” முகம் சுளிக்க அபிநந்தனை அழைத்தான் மனோகரன்.
“ ஏய்.. ஏய்.. ஏய்..! கூல்..! இப்ப என்னாச்சின்னு கத்தறே? ஃபாரின்ல இதெல்லாம் சர்வ சாதாரணம்டா..! ”
“ காதல் க்ரைமும் ஃபாரின்ல சாதாரணம்..! தெரியுமில்ல? நம்மால எதுக்கு கலாச்சார சீரழிவு?”
உடையை ஒழுங்கு படுத்திக்கொண்டு தலை வாரி முகம் கழுவி வெளியில் வந்தான் அபிநந்தன்.
இருவரும் மென்பொருள் வல்லுநர்கள். அபிநந்தனின் அப்பா பணக்காரர். அபிநந்தனும் கை நிறைய சம்பாதிப்பவன். சம்பாதித்த சொத்தை பல தரப்பட்ட பெண்களை வலை வீசிக் கவிழ்ப்பதில் செலவிட்டு அழித்து வந்தான்.
“ இன்னிக்கு யாரு தெரியுமா? மாம்பழம்..! ”
“ ஐயையோ, அல்போன்சாவா? டேய், பாவன்டா அந்த நர்சூ..! ”
“ எத்தனை நாள் காத்திருந்தேன் தெரியுமா? கவர்ன்மெண்ட்டுல வேலை வாங்கித் தரேன்னு சொல்லிக் கவுத்தேன்..! ”
மனோகரன் தலையிலடித்துக் கொண்டான். இருவரும் ராப்பகலாக ஒரே ப்ராஜக்ட்டை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். அந்தத் தொழில் பந்தம் அவர்களை ஒன்று சேர்த்தது. மற்றபடி வேறெந்த பிணைப்பும் இல்லை.
அபிநந்தனின் பொழுதுபோக்கு பெண்களை வேட்டையாடுவது. அதனால் பிரசினை எழுந்தால் பணத்தால் அடிப்பான். இவனால் மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளம்.. ஊரை விட்டுப் போனவர்களும் உண்டு; உலகை விட்டுப் போனவர்களும் இல்லாமலில்லை. போன முறை இப்படித்தான்.. என்ன பண்ணி தொலைத்தானோ, பெண்ணின் கழுத்து கட்டிலைத் தாண்டி போய் விட்டது. கழுத்துக்குக் கீழ் இவன் பாரம் முழுதும் அழுந்தி எழுந்தபோது பெண்ணின் கைகால்கள் செயலிழந்து விட்டன...!
இவன் பெரும்பாலும் கல்யாணமான பெண்களையே வேட்டையாடுவான். கல்யாணமாகாத பெண்ணுக்கு ஒரே கவலை- கல்யாணமாகவில்லை என்பது மட்டுமே.. ஆன பெண்ணுக்கு ஆயிரத்தெட்டு கவலைகள்.. அதில்தான் தூண்டில் விழும். குடும்ப கௌரவம் கருதி வெளியே சொல்ல மாட்டார்கள் என்பான்.. போலிஸ் பயமில்லை.. அவனால் கருவுற நேர்ந்தாலும்.. சரி, சரி.. ஒழுக்கமற்ற காமுகனிடம் விளக்கத்துக்கா பஞ்சம்?
இவன் அட்டகாசம் பொறுக்காமல் மனோகரன் ஒரு முடிவெடுத்தான். இவன் குறி வைத்துள்ள பெண்ணை எச்சரிப்பது...! இருவருக்கும் இது ஒரு போட்டியாகவே ஆகியிருந்தது. அபிநந்தனுக்கு இது சுவாரஸ்யத்தைக் கூட்டியது. இயல்பாகவே பெண்கள் மீதுள்ள ஆர்வத்தை விட மனோகரனின் எச்சரிக்கையை மீற வைத்து பெண்ணைக் கவரும் போட்டியில் வெற்றி பெறுவதில் வெறி அதிகமானது.. என்ன கலிகாலமோ, இது வரை நடந்த போட்டிகளில் அபிநந்தனே ஜெயித்தும் வந்தான்...
இப்போது அவன் குறி சாரதை..!
சாரதை....
காலெடுத்து நடந்து வருகிற போது ஓடிச் சென்று காலைத் தாங்கலாமா என்று நினைக்க வைக்கும் தோற்றம்..! அழகிய ரோஜாத் தோட்டத்தை பனி மறைத்தது போல புரியாத ஒரு அழகு..! உடல் வாகு கேரளத்தை நினைவுபடுத்தியது. கூந்தலை கூந்தலால் முடித்திருந்தாள்..! முன்புறம் விழுந்த கூந்தல் கற்றை.... குனிந்த தலை கூச்சத்தை உணர்த்தவில்லை. இது என் உலகமில்லை என்பது போன்ற பாவனை...! எளிய வாயில் புடவையில் செதுக்கி வைத்த சிலையாக இரவு ஒன்பது மணியளவில் அபிநந்தனின் பங்களாவைக் கடந்து விட்டில் லில்லி மருத்துவமனைக்குச் செல்வாள். அடுத்த நாள் காலை ஆறேழு மணியளவில் அதே தார்ச்சாலையில் அவளைப் பார்க்கலாம்.
“ கோயில் பூசாரிய விசாரிச்சேன்.. சாரதையோட புருசனுக்கு ஏதோ ஆக்சிடெண்ட். ரெண்டு வயசில குழந்தையிருக்கு..! மாமனார், மாமியார் வீட்டோட இருக்காங்க..! ஆளைப் பார்த்தாலே தெரியும்.. பணமில்லாம கஷ்டப்படுறான்னு.. உன் புருசனோட மருத்துவச் செலவை நான் பார்த்துக்கறேன், நீ ஒரு ராத்திரி ஒத்துழைன்னு அடிமேல் அடி அடிச்சா வராமலா இருப்பா? ”
அபிநந்தன் தன் திட்டத்தை வெளிப்படையாகவே விவரித்தான்.
“ அதோ... அவதான் சாரதை. அவ சந்துக்குள்ள திரும்புறதுக்குள்ள சீக்கிரம் பாரு.. ”
அந்த அமாவாசை இரவில் டியூப் லைட் வெளிச்சம் சிதறியிருந்த தார்ச்சாலையில் அபிநந்தன் கைந் நீட்டினான். மனோகரன் அந்த திசையைப் பார்த்தபோது அங்கு....
ஒருவருமில்லை..!
சில நாள் கண்காணிப்புக்குப் பின் அன்றிரவு சாரதை அந்த குறுக்குத் தெருவில் மறைந்து போகுமுன் அபிநந்தன் நெருங்கினான்.
“ ஹாய் மேடம்.. நான் அபிநந்தன்... ”
சாரதை அப்படியே நின்றாள்.. அவள் சாம்பல் நிறப் புடவையின் தலைப்பு மேலே பறந்தது. அவள் நின்ற கோணத்தில் கட்டடங்கள் இல்லை. நீளமான பொட்டல் வெளியில் தூரத்தில் குப்பை கூட்டி தீ வைத்திருந்தனர். தீயின் புகைச்சுருளில் அவளும் ஒரு புகைச்சுருளாகத் தெரிந்தாள்....
“ மேடம் நீங்க கல்யாணமானவங்க.. எனக்குத் தெரியும்.. பட் ஐ லௌ யு. உங்க கிட்ட பிச்சை கேக்கிறேன், என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றீங்க..! ஒரு வாட்டி.. ஒரே வாட்டி.. அப்புறம் என் வழியில நான்.. உங்க ஆஸ்பத்திரி செலவை முழுசும் நான் பார்த்துக்கறேன்..! ப்ளீஸ்..! ”
சாரதை கொஞ்சம் கொஞ்சமாக கழுத்தை திருப்பி அவனைப் பார்த்தாள். கூந்தல் கற்றை முகத்தை மூடி மூடி வெளிப்படுத்தியது. விட்டால் கழுத்து முழுக்க திரும்பி விடுமோ? ஊடுருவும் பார்வை..! அபிநந்தன் பயந்தான். அவள் ஒன்றும் பேசாமல் கடந்தாள்..!
அபிநந்தன் முதன் முறையாகக் குழம்பினான். அவளிடம் ஒரு கோபம், ஆத்திரம், அழுகை? பயம்? எதுவும் இல்லை..! இதை சம்மதம் என்று எடுத்துக் கொள்வதா? நாளை யாரையாவது துணையாகக் கூட்டி வந்தால் சம்மதமில்லை என்று அர்த்தம்..!
அடுத்த இரவும் அதே போல் அவள் வந்தாள் - தனியாக....! அபிநந்தன் துணிந்தான். “ என்ன, நாளைக்கு இந்நேரம் ஓகேயா, காருக்குள்ளேயே வச்சுக்கலாம்..? சீக்கிரமாவே அனுப்பிடறேன்.. ” என்றான்.
இன்றைக்கு ரத்த சிவப்பு நிறப்புடவை..! அவள் முகம் விகாரமடைந்து வாய் நான்கு கோணலாகியது. “ அப்..! ச்..!.ட்..! சாவ்...! சா....வு....உ...உ ! ! ! ” போய்விட்டாள்.
அந்த வார்த்தையும் தொனியும் அழகாயில்லை..!
மனோகரனுக்கு சாரதையை யாரென்று தெரியவில்லை.. இத்தனைக்கும் இரண்டு முறை அபிநந்தன் அவளைச் சுட்டிக் காட்டியிருக்கிறான். இவள் என்ன அபிநந்தன் கண்ணுக்கு மட்டும் தெரிகிறாளா? ஆளைத் தெரியாமல் எப்படி எச்சரிப்பது? மருத்துவமனையில் விசாரிக்கலாம் என்றால் ஒரு நாளைக்கு ஒன்பது ஆக்ஸிடெண்ட் கேஸ்கள் அட்மிட் ஆகும் இடத்தில் சாரதையின் கணவன் பெயர் தெரியாமல் எப்படி கேட்பது? சாரதைக்கு அபிநந்தனின் தந்திரத்தை கோடி காட்ட வேண்டும்.. “ மேடம், உங்களுக்குப் பணம் தேவைப்பட்டா வாட்ஸ்-அப்பில படம் போட்டு உதவி கேட்கலாம்..! நல்ல மனசுள்ளவங்க இல்லாம போயிடல. அவன் வலையில விழுந்துடாதீங்க..! ”
ஆனால் எப்படி?
ஹோட்டல் பாம்குரோவை விட்டு வெளியே வந்த அபிநந்தன் காரைக் கிளப்பினான். வழியில்தான் லிட்டில் லில்லி மருத்துவமனை.... .
இன்று மருத்துவமனை ரிசப்ஷனில் அவனுக்குத் தெரிந்த பெண்தான்.
“இங்க சாரதைன்னு.. ” இழுத்தான்.
“சாரதை? அவங்க புருசன் இங்கதான் அட்மிட் ஆகியிருந்தார் - ஒரு மாசமா..! ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அவர் செத்துப் போயிட்டார்.. புருசன் போன அதிர்ச்சியில அன்னைக்கே அவங்களும் இறந்துட்டாங்களே? ”
வீல்ல்ல்ல்ல..!!!!!
அலறல்.. யாரோ நோயாளியின் அலறல்..!
“இல்ல..! ” கத்தினான் அபிநந்தன். “ ரெண்டு வாரமா என் தெரு வழியா அவங்க போறதைப் பாத்திருக்கேன்..! ”
“ஆவியாவா? ”
அந்தப் பெண்ணின் கருவிழி மேலேறி இறங்கியது. குரல் கனத்துக் கேட்ட மாதிரி இருந்தது.. கைகள் எலும்புக்கூடாய்த் தெரிந்தன. திடீரென குளிரில் உடம்பு விறைத்தது. “ செத்துப் போனா உடம்பு சில்லுன்னுதானே இருக்கும்? ” யாரோ யாரிடமோ சொன்னது காதில் விழுந்தது. அபிநந்தன் கண்ணைக் கசக்கிக் கொண்டான். இப்போது எல்லாம் முன்பிருந்ததைப் போலவே மாறின..! அந்தப் பெண் சாரதையின் வீட்டு விலாசத்தை கொடுத்தாள்..
சாரதையின் வீட்டுப் பக்கவாட்டில் காரை நிறுத்தி உள்ளே பார்த்த அபிநந்தனுக்கு..
சாரதையும் அவள் கணவனும் மஞ்சள் குங்குமம் மாலையோடு படமாகச் சிரித்தனர்....! ! !
பீதி குப்பென்று பரவி உடலையும் மனசையும் முழுதும் ஆக்கிரமிக்க, தறி கெட்டு காரை ஓட்டி வந்தவன் எதிரே ......
சா...சா..சாரதை..! ! ! !
ஆக்சிலேட்டருக்கு பதிலாக பிரேக்கை அழுத்தினான். பிரேக்கையே திரும்பத் திரும்ப அழுத்தினான். சுதாரித்து காரைத் திருப்பி வேகமாக ஓட்ட, கார் மரத்தின் மீது மோதி, பள்ளத்தில் சக்கரம் மாட்டியது.
காரிலிருந்து இறங்கி நின்றான். திரும்பி ஓடத் தொடங்கினான்..
சாரதை துரத்தினாள்..
“ வேண்டாம்.. வேண்டாம்.. திரும்பிப் போ... ”
சாரதை வருகிறாள்..! இருவருக்குமுள்ள இடைவெளி குறைகிறது..! பத்தடி.... ஐந்தடி.. மூன்றடி.. ஓரடி.. பத்து சென்டிமீட்டர்.. இரண்டு செ..செ..
ஹ் ஹ் ஹ் ! ! !
சாரதை அவன் உடலுக்குள் புகுந்தாள்.
அவன் உடம்பை அப்படியே முறுக்கினான்...! கையோடு கையும் காலோடு காலுமாய் அப்படியே பிணைந்தன....! தலைமுடி குத்திட்டு நாக்கு வெளித் தள்ளியது....!
ஓடினான்..
ஆளில்லாத ரயில்வே கேட்..
தடக்..தடக்... தடக்.. தடக்...
ரயில் சமீபித்தது.
பின் குறிப்பு:
சாரதையை எச்சரிக்க, விசாரித்துக் கொண்டு அவள் வீட்டுக்கே போனான் மனோகரன். வீட்டில் சாரதையின் மாமியார் மாமனாரோடு அவர்களின் குழந்தையும் இருந்தது. சாரதையும் அவள் கணவனும் படமாகச் சிரித்தனர். குழப்பத்தோடு திரும்பியபோது படத்திலிருந்த சாரதையைப் போலவே அங்கு வந்த பெண்ணை சாரதையின் தங்கை புவனி என்று அறிமுகப்படுத்தினார் சாரதையின் மாமியார். அக்கா மாமாவின் சாவுக்கு, ஊரிலிருந்து வந்த புவனி காதும் வாயும் செயல்படாத மாற்றுத்திறனாளி என்றும் லிட்டில் லில்லி மருத்துவமனையில் தினமும் சிகிச்சை பெறுகிறாள் என்றும் விளக்கம் கிடைத்தது. தன்னைப் பார்த்து ஒருவன் மிகவும் பயந்து போய் பித்துப் பிடித்தாற் போல் ஓடியதாகவும், தானும் அவன் பின்னால் கொஞ்ச தூரம் ஓடியதாகவும் அவன் ரயில் முன் பாய்ந்து விட்டதாகவும் சைகையில் தெரிவித்தாள் புவனி..
நீதி:
பேய் பிசாசை வெல்வதற்கு ஒரு வழி இருக்கிறது - நேர்மையான எண்ணமும், செய்கையும்..!
முற்றும்..
............................................................................................................................................................................................