கவி என்றேன் - கலங்கினாள்

*****
(கவி -- கவிஞனையும் குறிக்கும் அதற்கு இன்னொருபொருள் உண்டு அதை வைத்து நகைச்சுவைக்காக.. எழுதப்பட்டது
**************
******************
பூவிரியும்பொற்காலை புதுவெயிலும் கீழ்க்கரையில்
கோவரிந்த படையணியின் கொடுங்குணத்தை கொண்டுமெழ
சாவரிந்து கொள்ளெனவே சாற்ற இருள் ஓடியெங்கும்
ஓவிரிந்த பேரண்டம் உள்ளே தொலைந்து விட

மாவரித்த மங்கையின்கை மச்சவிழி மூடும்வகை
போயுரித்த தாய்கதிரின் புகழ்மறைத்து முகில்நகர
தீஎரித்த வீறுகொண்டு திங்கள் முகம் கடுகடுக்க
பாவரிக்குள் சந்தமெனப் பழகுநடை கொண்டசைந்தாள்

ஆவிரித்த கூந்தல்தனும் அஞ்சும்மழை மேகமொத்த
தோசரித்து தோள்விழுத்தி தொங்கும்மணி மாலைமின்ன
காடெரித்த தீ பரந்து கானகத்தை மூடுவதாய்
ஊடெரித்த உணர்வுதகித் துள்ளம் பதைபதைத்தேன்

மானுரித்த மென்மைநடை மகிழ்வெடுத்த நெஞ்சமதை
ஏனுரித்துக் காயவைக்கும் இன்னல்தனைத் தந்திடுமோ
தானுரித்துப் பார்க்கவொரு சூனியம்வெங் காயமதில்
காணுரித்த பாட்டில் என் கனவுகளும் ஆவதுவோ

ஊனரித்தும் உணர்வெரிய உள்ளக் குறுகுறுப்பில்
நீசிரித்த போதிலெல்லாம் நெஞ்சு தடுமாறி நின்றேன்
மாகரித்த நிறமெடுத்தேன் மஞ்சள்வெயில் மேனியளை
வாஹரிக்கு திருமகளாய் வாழ்ந்திடுவோம் என்றழைக்க

நாபரிந்து நல்லாளே நறுந்தேனே நங்கையுனைத்
தேவரிந்த பூவுலகின் தெய்வமகள் என்றுரைப்பர்
வாதெரிந்த வகையிலொன்றி வாழ்ந்திடுவோம் என்றவனைப்
பாவரியும் கவி இவனாம் பாரடிநீ என்றழைக்க

மூவரிந்த மேதினியில் முயன்றே வளர்த்த தமிழ்
தோலுரிந்த முக்கனிகள் தொட்டசுவை யின்குரலால்
வாளரிந்த வகையுடலை வருத்திக் கிழிப்பதெனத்
தேன் சொரிந்த பூஅனலைத் தீசொரிந்த தாய் பகன்றாய்

(அவள்:)

நீபுரிந்ததேது சொலாய் நெடுமரத்தின் கொப்பிழக்கா
போயிருந்து தாவும் கலை பூவையிவள் பயிலவென
வாதெரிந்து கொள்ளென்றே வஞ்சியெனைக் கேட்டனையோ
தோகைவிரி மயிலாடத் துணைகவியோ போவென்றாள்

எழுதியவர் : கிரிகாசன் (24-Sep-15, 10:46 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 167

மேலே