இன்பம் 1
கானம் பாடும் குயிலோசை
காலைச் செவ்வண் ணடிவானம்
வானத் தூடே விரைபட்சி
வந்தே போகும் தென்றலுடன்
கூனற்பிறையும் கொட்டருவி
கொள்ளும் ஓசை குளிர்காற்]று
ஆனந்தத்தை அள்ளித் தரும்
ஆகா இன்பம் இன்பமன்றோ
வண்ணக்கலவை வரை கரமும்
விந்தை தீட்டும் ஓவியங்கள்
எண்ணத் தோற்றும் உருவங்கள்
ஏற்றோர் கல்லில் சிலையாக்கம்
கண்ணின் காட்சி காவியங்கள்
கவிதை ஊற்று காண் தமிழும்
உண்ணத் திகட்டா தேனமுதம்
உள்ளோர் இன்பம் இன்பமன்றோ
சேனை, படைகொள் சிற்றரசன்
சிந்தனை வல்லோர் அறிவூட்டல்
மானை யொத்த மங்கையரின்
மஞ்சம் தூங்க பஞ்சணைகள்
தேனை யொத்த பேச்சினிமை
தேங்கிக் காணும் பொற்குவியல்
வானை யொத்த புகழாரம்
வாய்த்தால் இன்பம் இன்பமன்றோ
(வேறு)
இயற்கை வனமும் இறைகோவில்
ஏகாந்தம் நல் நீரோடை
தயங்கிப் பாயும் அலையோசை
தாமரைக் குளமும் ஆச்சிரமம்
மயக்கும் சூழல் மரக்கூட்டம்
மாமர நிழலும் பட்சியினம்
அயர்வே அற்ற தேடல்கள்
அறியும் ஞானம் இன்பமதே
மழலைக் கூட்டம் மாதர்கள்
மனதில் இச்சை மகிழ்வாட்டம்
குழலின் ஓசை குளிர்த் தென்றல்
குறுகும் துயரம் கும்மாளம்
பழகும் நட்பு பாசவலை
. பந்தியில் உணவு பரபரப்பு
வழங்கிடும் பரிசு வேடிக்கை
. வாழ்வே இதுதான் இன்பமன்றோ