உங்க அப்பா ரொம்ப நல்லவரு
உங்க அப்பா ரொம்ப... நல்லவரு
பணி மாற்றம் காரணமாக பள்ளியில் ஜீன் மாதமே குழந்தைகளை சேர்க்க முடியவில்லை அவனால். செப்டம்பர் மாதத்தில் தான் எந்த ஊர் என்பதே முடிவானது. அந்த ஊரிற்கு வந்து வீடு பார்த்து, சிறிது சிறிதாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது...
ஊரில் புது பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த பெரிய மகளுக்கு ஒரு வாரத்திற்குள் காலாண்டுத்தேர்வு ஆரம்பமானது...
முதல் நாள் பரிட்சைக்கு பின் மகிழ்ச்சியாக காணப்பட்ட மகள், அடுத்த நாள் பரிட்சைக்குப்பின் வீட்டிற்கு வந்ததிலிருந்தே தேம்பிக்கொண்டிருந்ததை பார்த்த அவன்,
"என்ன ஆயிற்று? பரிட்சை சரியாக எழுதவில்லையா?", எனக் கேட்க,
அழுதவாறே,
"இல்லை... இல்லை..... நல்லாத்தான் எழுதினேன்..."
"அப்பறம் என்ன பிரச்சனை?"
"அது வந்து ஒன்னுமில்லை..."
"ஒன்னுமில்லேனா ஏன் அழுற...."
"ம்... அது வந்து..... என் கிளாஸ்ல சண்முகப்பிரியானு ஒரு பொண்ணுப்பா...
நேத்து நான் பரிட்சைக்கு போனப்பவே.. என்னோட அட்டையை புடிங்கிக்கிட்டா... அவளோட வளஞ்சு போன அட்டையை எங்கிட்ட கொடுத்திட்டா... சரியாவே எழுத முடியலை தெரியுமா..? சரி ஒரு நாளைக்குத்தானேனு பார்த்தா.. இன்னிக்கும் சரியா பரிட்சை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வந்து, மறுபடியும் என்னோட அட்டைய புடுங்கிக்கிட்டா..."
"ஏன் புடுங்கவிட்ட..."
"இல்லப்பா... கத்திக்கூட பார்த்தேன்.... உங்க வீட்ல புது அட்டை வாங்கித்தரச் சொல்ல வேண்டியது தானேனு சொன்னேன்.... அவ சொல்றா...எங்க அப்பால்லாம் வாங்கித்தர மாட்டார்னு..."
"சரி அந்தப் பொண்ணு புடுங்கிக்கிச்சு.. இப்ப எதுக்கு அழுகுற?... நாளைக்கு நாங்க வேணா உங்க ஸ்கூலுக்கு வந்து உங்க டீச்சர்கிட்ட சொல்லவா?"
"வேணாம்.. வேணாம்...."
அப்பறம் ஏன் அழுகுற...? ஒன்னு புடுங்க விட்டுருக்க கூடாது... இல்லேனா நீயாவது உங்க டீச்சர்கிட்ட சொல்லியிருக்கணும்... இல்லேனா.... நாங்க வந்து உங்க டீச்சர பார்க்கறோம்னா... அதுக்காவது அனுமதிக்கனும்.. இப்படி ஒன்னுமே செய்யாம அழுதுக்கிட்டிருந்தா எப்படி?....
......சரி சரி.. அழுகாத", என்று கூறிய படியே அவன் வெளியே கிளம்பினான்....
அடுத்த நாள் பரிட்சைக்கு சென்று வந்த பெண் வீட்டில் சிரித்துக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவனுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது...
"உன் தோழி சண்முகப்பிரியா இன்னைக்கு என்ன சொன்னா?", எனக்கேட்டான்...
"உங்க அப்பா ரொம்ப... நல்லவருன்னு ( வடிவேலு ஸ்டைலில் படிக்கவும் ) சொன்னாப்பா....."
இது எப்படி? இடையில் நடந்தது என்ன?
.
.
.
.
.
.
.
.
.
.
அன்று வெளியே கிளம்பிய அவன், தன் மகளிடம் இருந்த அதே போன்றொரு புதிய அட்டை ஒன்றை வாங்கி வந்தான்....
"நாளைக்கு போய் இத உன் ப்ரண்டுக்கிட்ட கொடு.... திருப்பிக்கொடுக்க வந்தா இது உனக்குத்தானு சொல்லிடு" என்றான்....
இப்படியும் ஒரு வழி உள்ளது தானே?
இனியும் சண்முகப்பிரியா இது போல் மற்றவர்களிடம் நடப்பது தடுக்கப்படலாம். அப்படித்தானே?!!!....

