எழுத்துரு வாதம், பிரதிவாதம் – ஒரு விவாதம்

புதிய கருத்து ஒன்றை ஒருவர் முன்வைக்கும் பொழுது யார் கருத்து கூறுகிறார் என்று பார்ப்பதை விட (கருத்துக் குருடு) அவர் சொல்ல வருவதை நாம் புலன்கடந்து தர்க்கத்தின் மூலம் பாராபட்சமில்லாமல் ஆராய்வது மெய்மை முறைமை. இது தர்க்கம் மூலம் பொய்மையை தகர்த்து பின்னர் அதனை களைந்து தர்க்கத்தை முன்னெடுத்துச் சென்று மெய்மையை வந்தடையும் ஒரு கிரேக்க உக்தி. இது சாக்ரட்டிய உரையாடல்களில் ப்ளேட்டோ பயன்படுத்தியது. இதை ஆங்கிலத்தில் டையலெக்டிக்ஸ் (1) முறை என்று கூறுகிறார்கள்.

இதை திருவள்ளுவர் சற்றே வேறு விதமாக எளிமையாக

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய் பொருள் காண்பதறிவு”

என்று கூறுகிறார்.

அறிவியல், அறிவியல் முறைகள் போன்ற கருவிகள் உதவாத தருணங்களில் இந்த மெய்மை முறை உதவிக்கு வருகிறது. (அறிவியல் பரவலாக உபயோகத்தில் இல்லாத காலங்களில் இது ஒரு முக்கிய ஆய்வு முறையாக இருந்ததை நாம் கிரேக்க சித்தாந்தங்களில் காணலாம்). சில சமயங்களில் நம் அகத்திற்குள்ளேயே நாம் இதை செலுத்தி பல நல்ல முடிவுகளை வந்தடைந்திருப்பது நம் சிந்தனை அனுபவத்தின் மூலம் உணரலாம். தர்க்கத்திற்கும், சிந்தனைக்கும் உகந்து வரும் வரை இந்த அறிதல் முறை புறக் கருத்துக்களை நிராகரித்து உயர் மற்றும் மெய் அல்லது அகக் கருத்துக்களை மேலெழுப்புகிறது. உருவகமாக கிரியாஉக்கி மூலம் ரசாயணத்தின் அகங்களை கொப்பளிக்க வைக்கும் அறிவியல் முறையை சொல்லலாம். இங்கே அந்த கிரியாஉக்கி ஒருநோக்கு படைத்த மெய்மையை வந்தடையும் இலக்கை கொண்ட சிந்தனையாளர்களின் தர்க்கமே. இந்த பகுத்தறிதலால் இதர நலிந்தக் கருத்துக்கள் நிராகரிக்கப்படுகின்றன. இது தான் இந்த முறையின் இயல்பு. அப்படி மெலிந்த தன் கருத்துக்களை நிராகரிக்கப்பட்டு தர்க்கம் ஒருவரை கடந்து செல்ல முற்படும் பொழுது அவர் இதை தனிப்பட்ட தோல்வியாகவோ, அவமானமாகவோ, தாக்குதலாக எடுத்துக் கொள்வது, அதனால் பிறர் மீது தனிப்பட்ட முறை தாக்குதல் நடத்தி அவரையும் நிலைகுலையச் செய்து தர்க்கத்திற்கே பங்கம் விளைவிப்பது, போன்றவை இந்த அறிதல் முறையின் மிகப் பெரிய கவனச் சிதறல். சில மாதங்களுக்கு முன் எழுந்த எழுத்துரு விவாதம் தமிழகத்தின் சிந்தனைத் தளங்களில் தன் அருவருப்பான முகத்தை வெளிக்காட்டியது.

ஒருவர் விவாத்தத்திற்கு முன் வைக்கும் கருத்தைப் பற்றி சிந்திக்க மறுத்து துரிதமாக வினையாற்ற வேண்டுமே (ரியாக்‌ஷன்) என்ற ஒற்றை உணர்ச்சியின் உந்துதலில் மட்டுமே எதிர் கருத்து கூறுவது நம்மிடம் இருந்துக் கொண்டேயிருக்கும் ஒரு சராசரி அடிப்படை சிந்தனைச்சாரா இயல்பு. சராசரி பன்மைக் முகங்களான

1. நம்மைப் பற்றி நாம் உயர்வாக கருதிக் கொள்வது.
2. நாமும் கருத்துக் கூறி வாசகர்களின் அபிமானத்துக்குறியவர் ஆகும் முயற்ச்சி
3. முதலில் கருத்துக் கூறியவரிடம் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி, பொறாமை
4. தொழில் முறைப் போட்டி, முன்பகை
5. சுயமறுப்பு (Self Denial)
6. அறியாமை மற்றும் அசட்டுத்தனம்.
7. இதற்கெல்லாம் மூல காரணமான் அகங்காரம்.

போன்றவைகளே இதன் காரணிகள். நம் செயல் வெளிப்பாடுகள் இரண்டு விதமான காரணங்களால் அமைந்தது. ஒன்று இயற்கை மற்றொன்று செயற்கை. இவை இரண்டுமே மேம்பாட்டிற்கு தேவைபடுகின்றன. இயற்கை அடிப்படை உணர்ச்சிகளின் வெளிப்பாடு. செயற்கை தருவிக்கப்பட்ட (acquired) முயற்ச்சியின் வெளிப்பாடு. இயற்க்கை செயல்பாட்டில் பிழை இருக்குமென்றால் செயற்கை செயல்பாடு கொண்டு பிழை திருத்தலாம். எட்வர்ட் டி பானோ செயற்கை முயற்ச்சிகள் காலப்போக்கில் இயற்கை அடிப்படை உணர்ச்சிகளாகிவிடும்(2) என்கிறார். நாம் இன்றிருக்கும் பழக்கத்தை முயன்று மாற்றினாலொழிய ஒரு நல்ல விவாதம் சமூகத்தில் தோன்றவே வாய்ப்பில்லை. நம் அந்த விவாதச் சுதந்திரம் இல்லாத ஒரு சமுதாயமாக இன்று இருக்கிறோம். இதனால் நமக்கு தான் இழப்பு. ஏனென்றால் நம்மால் மேற்கூறிய கவனச்சிதறல்களால் நல்ல சித்தாந்தங்களை வந்தடைய முடியாது.

ஜெயமோகனின் ”எழுத்துரு”(3) கட்டுரைக்கு வந்த பிரதிவாதங்களை பார்க்கும் பொழுது மிக மன வேதனையடையச் செய்வது தமிழ் அறிவுலகமும் மேற்கூறிய அனைத்து பொதிகளையும் சுமக்கிறதே என்பதே. எங்குமே ஆழமான சிந்தனையுடன் எழுதப்பட்ட பதில் வினைகள் இல்லை அல்லது கண்ணில் படவில்லை.

ஜெயமோகன் தமிழின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் என்பதை சராசரி மனிதர்களில் தொடங்கி அரசாங்கம் மற்றும் பரிசுத் துறைகள் வரை தீவிரமான சுய மறுப்பிலிருக்கிறார்கள். இழப்பு அவருக்கல்ல. தொழில் மற்றும் அரசியல் காரணங்களுக்காகவும், பிற காரணங்களுக்காகவும் அவர் மீது சேற்றைதான் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறோம் தமிழர்களாகிய நாம். சாதியம், பிராந்தியம் போன்ற அற்பக் காரணங்களை முன் வைத்து அவர் தமிழை அழிக்கக் கிளம்பியுள்ளார் என்றும் கூறுவோமானால் “தமிழ் இனி மெல்லச் சாகும்” என்ற ”தீர்க்கதரிசனத்தை”யும் அதைச் கூறியவரையும் என்னவென்பது? பாரதியானாலும் சரி ஜெயமோகன் ஆனாலும் சரி அகண்ட பிரபஞ்ச திட்டத்தின் காலவெளியில் காணாமல் போகக்கூடியவர்களே. இவர்களே இப்படியென்றால் இவர்களை பற்றி நாம் வைக்கும் சுய விமர்சனங்கள் அர்த்தமற்றவை ஆகிவிடுகின்றன. பிரபஞ்ச மெய்மை என்பது அடைய முடியாத ஒரு முடிவிலி என்பதை அறிந்தும் மனிதன் அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் அடைக்க அளவற்ற ஆவல் கொண்டுள்ளான். விஞ்ஞானிகளும் அறிஞர்களும் சிந்தனையாளர்களும் மனிதகுலத்தின் அந்த மாபெறும் குறிக்கோளின் பிரதிநிதிகள். மெய்மை நோக்கே அவர்களின் இலட்சியம். கருத்து ஒன்று மெய்மையை நோக்கி செலுத்தப்படாவிட்டால் அதை நிராகரித்து விட்டு முனகர்வதே அந்தக் கருத்துக்கு உரிய தண்டனை. அது மட்டுமே அதற்கு தண்டனை. அதல்லாமல் சில்லரை சச்சரவுகளில் ஈடுபடுபவர்கள் கால விரயம் செய்கிறார்கள். மெய்மையை அடையும் வாயிலையும் அடைத்து கொண்டு நிற்கிறார்கள்.

ஜெயமோகன் முன் வைக்கும் கருத்தில் உள்ள நிறைகள் மற்றும் குறைகளை சுருக்கமாக பகுத்தறிவோம். தமிழ் வார்த்தைகளை ஆங்கில எழுத்துருவில் எழுத முயலலாம் என்கிறார் ஜெயமோகன். அதாவது ‘அம்மா இங்கே வா வா’ என்று இருப்பதை ‘Ammaa ingay vaa vaa’ என்று எழுதினால் பலருக்கு உதவியாக இருக்கும் என்கிறார்.

தமிழ் கற்க முயல்வோர் தமிழ் எழுத்துக்கள் அறிந்திருக்காவிட்டால் இப்படி வார்த்தைகளை கற்றுக் கொள்ளலாம். தமிழ் அறிமுகத்திற்கும் பேச தொடங்குவதற்கும் இது உதவியாக இருக்கும். தமிழ் குழந்தைகள் ஆங்கில வழி கல்வி பயில்வதால் தமிழ் அறியாமல் வளர்கிறார்கள். புதிய பொருளாதார காலவெளியில் இலக்கிய தமிழின் பங்களிப்பு மற்றும் தமிழ் வழி கல்விகள் ஏன் தமிழ் மொழியே யதார்த்த வாழ்வில் சரிந்து வழுக்கிக் கொண்டிருக்கிற சமுதாயச் சூழல் என்பது எவரும் எளிதில் மறுக்கக் கூடிய கூற்றல்ல. இந்தச் சூழலில் எந்தக் கருவியினாலும் பயன்தான்.

மனவலிமையே இல்லாமல் வாழ்ந்து வரும் சமூகமாக நாம் உருவாகிக் கொண்டிருக்கிறோம். நம் அடிமை மனநிலை இன்னும் சுமந்துக் கொண்டிருக்கும், இனிமேலும் சுமந்துக் கொண்டிருக்கும், ஏன், என்றுமே சுமந்துக் கொண்டிருக்குமோ என்று தோன்றும் எஜமான்களில் ஒன்று ஆங்கிலம். ஆங்கில மொழியில் குற்றம் ஒன்றுமில்லை. ஆங்கில மொழியில் நாம் பெருமையையும் போலி கௌரவத்தையும் தேடுவதே குற்றம். ஆங்கிலம் தெரிந்தால் தன்னை எஜமானாக கருதிக் கொளளும் சில்லரை மனப்பான்மையையும் தெரியாவிட்டால் அச்சமடைந்து தன்னை ஏவலாளி போல் கருதிக் கொள்ளும் தாழ்வு மனப்பன்மையையும் பரவலாக சமூகத்தின் பல தளங்களில் நாம் பார்க்கிறோம். இந்த ஆங்கில “அறிவு” நடத்தும் கபட நாடங்களில் நம் சமுதாயம் மிக ஆழமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது வேதனைக்குறியதே. நம் புறக்கண்கள் முன் இப்படி நாடகம் ஆடிக்கொண்டிருக்கும் ”போலி” ஆங்கில மொழி உரையாடல்கள் மீதுள்ள ”மரியாதை”யால் நம் அகக் கண்களை பாதிக்க விடுகிறோம். இப்படியெல்லாம் சிறுமையில் ஈடுபடும் நாம், ஆங்கில எழுத்துருவை தமிழ் மொழிக் கல்வியின் உதவிக்கு அழைப்பது பெரும் ”சிறுமை” என்று கருதுகிறோம். தமிழறிஞர்கள், தமிழின் காவலர்கள் என்றுக் கூறிகொள்பவர்களே தமிழ் தொடர்பான பல சிறுமைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால் சராசரி வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் எப்படி தமிழை பெருமையடையச் செய்யும் செயல்களை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கமுடியும்? சிறுமைகளின் சங்கமத்தில் மற்றொரு ”சிறுமை”யாகத்தான் பிறமொழி எழுத்துரு இருந்துவிட்டுப் போகட்டுமே!

தமிழ் இன்று பேச்சு வழக்கிற்கு மட்டுமே மனமுவந்து பிரயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் தமிழ் மொழியைத் தவிர வேறு மொழி அறியாத இல்லங்களில்தான் அவ்வாறு பிரயோகத்தில் இருக்கிறது. தமிழறிந்த ஆங்கிலம் தெரிந்த இல்லங்களில் ஆங்கிலத்தில் உரையாடுவது சகஜமாகி வருகிறது. தமிழறிந்த ஆங்கில விழிப்புணர்வு மட்டுமே உள்ள குடும்பங்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டோமோ என்ற ஒரு ஏக்கத்தில் தவிப்பதும் சகஜமாக இருக்கிறது. (மம்மி டாடி என்ற வரை ஆங்கிலத்தில் பேசி அந்த ஏக்கத்தை ஓரளவு தணித்துக் கொள்கிறோம்). இப்படி நடைமுறை ஆங்கில எதிர்பார்ப்புகள் இருக்கும் சூழலில் ஆங்கில எழுத்துரு மட்டும் பெரிய இடைஞ்சலா? மொழிப் பாதகக் கருவியா?

இல்லை ஆங்கில எழுத்துருவை எதிர்ப்பதால் மட்டும் அதை மக்கள் தவிர்க்கப் போகிறார்களா? தான் சொல்ல வருவதை ஆங்கில எழுத்துருவில் எழுதி வைத்து வணிகம் பேசும் கார்ப்பரேட் மேலாண்மை உறுப்பினர்கள் இருக்கின்றனர். சௌகார்பேட்டை, கேரளம் மற்றும் வட இந்திய வணிகர்கள் இருக்கின்றனர். திரைப் பட பாடல்களை ஆங்கில எழுத்துருவில் எழுதி வைத்துக் கொண்டே பின்னிசை பாடுபவர் இருக்கின்றனர். பல திரைப்பட தொழிலாளிகள் அவ்வாறே வசனம் பேசுகிறார்கள். ஏன், இன்று செல் தொலைப்பேசியில் எஸ்எம்எஸ் அனுப்புகிறோமே, அது ஆங்கில எழுத்துருவை வைத்துதானே? (கவனிக்கவும்: ’SMS’ என்பது போன்ற பல ஆங்கில ”அக்ரானிம்ஸ்” மற்றும் ”வோர்ட்ஸ்”ஐ நாம் தமிழ் எழுத்துருவில் எழுதும் பொழுது எந்த ஆங்கில மொழி காப்பாளர்களும் கொடி தூக்குவதில்லை.)

ஒரு கால கட்டத்தில் வட்டெழுத்தின் குறைகளை கிரந்த எழுத்தொலிகள் மூலம் கடந்து வந்தோம். கிரந்த எழுத்துக்களை ஆங்கில எழுத்துரு மூலம் தமிழை விட எளிதாக உச்சரித்து விடலாம். கிரந்த எழுத்துக்களை தமிழ் எழுத்தாக கருதியது காலத்தின் கட்டாயம். அது போல் ஆங்கில எழுத்துக்களும் புழக்கத்தில் வருவது இந்தக் காலத்தின் கட்டாயமே. (கிரந்த எழுத்துகளை தமிழல்ல என்று மறுக்ககூடிய பிரிவினரை நாம் இந்த விவாத்தத்தில் அங்கத்தினராக ஏற்றுக் கொள்ள முடியாது). இன்றைய வணிக யுகத்தில் ஆங்கில எழுத்துரு யார் தடுத்தாலும் மீறி வரும் ஒரு விசை. அதை ஆரவாரமில்லாமல் அரவணைப்பது தேவையில்லாத ஒரு புதுப் போலி கௌரவத்தை தவிர்க்கும்.

அதே சமயம் பல இடங்களில் ஜெயமோகனின் இந்த பரிந்துரை உதவாது. ‘Ammaa ingay vaa vaa’ என்பது ‘அம்மா இங்கே வா வா’ என்று தெரிந்ததால் மட்டுமே நாம் சுலபமாக இதை பிரயோகப்படுத்துவது போன்ற மாயை உருவாகிறது. தமிழறியாத ஒருவரிடம் கொடுத்தால் ‘ஏம்மே ஐங்கை வே வே’ என்று வாசிக்கும் அபாயம் உருவாகும். அப்பொழுத்தான் தமிழ் உண்மையில் கொலை செய்யப்படும். இது மேலே கூறியது போன்ற அனைத்து துறை மக்களும் தமிழை தவறாக பிரயோகப்படுத்த வாய்ப்புள்ளது. சில சமயங்களில் சொல்ல வருவதை நாகரிகமாகவும் தெளிவாகவும் சொல்லமுடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. “Nesamony Ponniah” என்பது “நேசமணி பொன்னையா” வாகவும் வரலாம், “நாசமானிபோனியா” என்றும் வரலாம். ஆங்கிலம் ஒரு phonetic மொழி அல்ல. அதாவது உச்சரிப்பை தொடரும் எழுத்துரு கொண்டதல்ல. ஆங்கில எழுத்துருவை மட்டுமே நம்பியிருந்தால் பிரிட்டிஷ் காலத்தில் அரசு ஆணைகளில் ஆங்கில எழுத்துருவில் இருந்த தமிழ் வார்த்தைகளுக்கு நடந்தது போன்ற அபாயங்களேயே நாம் மீண்டும் சந்திக்க நேரும்.

ஆங்கில எழுத்துரு இன்றைய சூழலில் தமிழுக்கு உதவிக்கு வரலாமே தவிர முற்றாக தமிழ் எழுத்துருவை ஈடுசெய்ய முடியாது.

___________________________________________________________________________
நன்றி: அநிருத்த ப்ரஹ்மராயர் On March 10, 2014

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொல்வனம (4-Oct-15, 1:38 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 194

சிறந்த கட்டுரைகள்

மேலே