எவ்வளவு திறன்மிக்கது நம் தொழில் களம்
அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தின் நடுநாயகமாக நிலைபெற்றுள்ள தகவல் தொழில் நுட்பக் கேந்திரமான சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றது பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பிடித் திருக்கிறது. 1982-க்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் அமெரிக்காவின் இப்பகுதிக்குச் சென்றிருப்பது இப்போதுதான்.
அங்கு கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ள, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெக் உள்ளிட்டவர்களையெல்லாம் சந்தித்திருக்கிறார் மோடி. மார்க் சக்கர் பெக்கை டவுன் ஹாலில் சந்தித்த மோடி, அவருடைய கேள்விகளுக்குப் பதில் அளித்தது நேரலையாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதற்கு முன் அப்படிப்பட்ட ஒரேயொரு சந்திப்பில் பேசியவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மட்டுமே.
தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கியத்துவத்தையும் பொருளா தாரத்தில் அது உருவாக்கும் பாய்ச்சலையும் இந்திய அரசு எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. ஒரு தேர்ந்த விற்பனையாளரைப் போலப் பேசி, அனைவரையும் கவர்ந்து இந்தியாவில் தான் நிகழ்த்த விரும்பும் பொருளாதார மாற்றங்களுக்கு உற்ற வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறார். மோடியுடன் கலந்துரையாடிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் உடனடியாக ஏதும் பெரிய அளவிலான அறிவிப்புகளை வெளியிடாவிட்டாலும், ஆக்கபூர்வமான சமிக்ஞைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகளுக்காக நம்முடைய பிரதமர் ஒவ்வொரு தேசமாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், நம்முடைய இளந்தலைமுறையை எந்த அளவுக்குத் தொழில் திறனுடன் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதைச் சமீபத்திய ஆய்வறிக்கைகள் பல தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவில் 10% பேருக்குத்தான் ஏதாவது ஒரு தொழிலைச் செய்து பழக்கம் இருக்கிறது. அவர்களிலும் மிகச் சிலர்தான் பள்ளிக்கூடங்களிலோ, பல்தொழில் தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகளிலோ பயின்றவர்கள்.
நாட்டுமக்களில் வெறும் 2.2% தான் முறையாகத் தொழில்பயிற்சி முடித்தவர்கள். ‘பிரிக்ஸ்’ என்ற அமைப்பில் உள்ள நாடுகளிலேயே இந்தியாவில்தான் பயிற்சிபெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. இது சாதாரணத் தொழில் பயிற்சி பற்றியது. அதாவது டர்னர், வெல்டர், ஃபிட்டர், மோல்டர், வயர்மேன், பிளம்பர் போன்ற தொழில்களுக்கானது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை ஆகிய பாடப்பிரிவுகளில் தொழில் பயிற்சி முடித்தவர்கள் கல்லூரிகளில் அதைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்கள். அவர்களுடைய எண்ணிக்கையும் நாட்டின் மொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது மிகமிகக் குறைவு.
இந்தப் பிரச்சினையின் தீவிரம் நம் ஆட்சியாளர்களுக்குத் தெரியாதது அல்ல. ‘ஸ்கில் இந்தியா’ என்ற புதிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தை ஜூலையில் அறிவித்தார் பிரதமர் மோடி. 2022-க்குள் நாட்டின் 40 கோடி மக்களுக்குத் தொழில் திறன் அளிக்கும் பயிற்சித் திட்டம் இது. புதிய துறையும்கூட ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன் மன்மோகன் சிங் அரசிலும் இது குறித்துப் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பேசிக்கொண்டே இருப்பதால் என்ன பயன் என்று புரியவில்லை.
இப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாம் நம்முடைய கல்வித் துறையின் ஆரம்ப, அடித்தளக் கட்டமைப்புகளிலிருந்து தொடங்கப்பட வேண்டும். பள்ளிக்கூடங் களில் படிக்கும் மாணவர்கள் பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றுவரும் போது திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும் முடித்துவரும் வகையில் பாடத்திட்டங்களை உடனடியாகத் திருத்தினால்தான் இது கைகூடும்!