இளைஞனே - 3

எந்த மாற்றமும் ஏமாற்றம் தான்
ஏன் மாற்றம் என்பதை புரிந்து கொள்ளாதவரை
நடமாட்டம் என்பது தடுமாற்றம் தான்.
தொந்தரவை தொந்தரவு செய்யாதே
தொந்தரவு உன்னை தொந்தரவு செய்யும் வரை.
தங்கம் கூட புடம் போடப்படும் போதுதான் தரம் அறிய முடியும்
தேன்கூட்டை கலைக்காது தேன் எடுக்க முடியுமா?
பால் தானாக கிடைக்காது கறக்கத்தான் வேண்டும்!
வெயில் சுடுவதும் வேதனை வருவதும் அன்றாட நிகழ்வு,
வலி தருவது மனமா, உடலா என்பதே
தெரியாது வாழ்வது தான் பிரச்சினை
விசும்பலும் புலம்பலும் வேதனை தருவது தெரிந்தே
முடிவை காணவே ஒவ்வொரு தொடக்கத்திலும் விழைகிறாய்
விடைகள் மட்டுமே திருப்தி தர வினாடி வினா அல்ல வாழ்க்கை,
விடைகளை தொடும் பயணமும் அனுபவமுமே வாழ்க்கை
திடீர் சம்பவங்கள் தான் தினந்தோறும் அதற்காக
திடீர் பணக்காரனாக நினைப்பதெல்லாம் கனவில் மட்டுமே
கருவிலே நடக்கும் நல்லது தான் உருவில் தெரியும்
விதையே விழாமல் இங்கே எதுவும் விளைவதில்லை.