ஒருமை விளிப்பால் உறவுகள் சிதையும்
சகோதரத்துவ உறவுமுறை விளிப்புகள், உடன் பணியாற்றுவோருக் கிடையில் ஓரளவுக்கு நெருக்கத்தையும் இணக்கத்தையும் உருவாக்கும். இத்தகைய நெருக்கமும் இணக்கமும் களப்பணிகளில் தீவிரத்தையும் வேகத்தையும் முடுக்கிவிடும்; காழ்ப்புணர்வுகள், கடுஞ்சொற்கள் போன்றவை மேலோங்குவதற்கு இடமளிக்காது; வயது, கல்வி, பதவி, பொருள் போன்றவற்றுக்கான உரிய மதிப்பைச் சிதைக்கும் வகையில் ஒருமையில் விளிக்கும் ஆணவத்தை ஒப்புக்கொள்ளாது; எளியோராயினும் வலியோராயினும் ஒருமை விளிப்பை ஏற்பதில்லை! ‘அவன் - இவன், அவள் - இவள்’ என்னும் ஒருமை விளிப்பானது, அமைப்பாக்க நடவடிக்கைக்கு முற்றிலும் எதிரானதாகும்.
சகோதரத்துவ உறவுமுறை விளிப்பில் ஒருமை விளிப்பினால் எழுவதைப் போன்ற கசப்புக்கோ, முகச்சுளிப்புக்கோ இடமிருக்காது. அத்தகைய சகோதரத்துவ உறவுமுறைகளைப் பின்பற்றும் போது, ஒவ்வொருவருக்குமான உரிய மதிப்பு அளிக்கப்படுவதால், நெருக்கமும் இணக்கமும் மேம்படுவதால், களப்பணியாளர்களுக்கிடையில் எழும் முரண்பாடுகள் பெரும்பாலும் தீவிரமடைவதில்லை! கூர்மை யடைவதில்லை! சகோதரத்துவத்திற்கு அத்தகைய மகத்துவமுண்டு என்பதை நடைமுறையில் காணலாம். சகோதரத்துவ உறவுமுறை விளிப்புகளால் நிகழும் நல்லிணக்கமானது, உயர்வு - தாழ்வு, மேல் - கீழ் போன்ற அகந்தைப் போக்குகளைத் தகர்த்து, சமத்துவத்தை நோக்கி இட்டுச் செல்லும்.
சமத்துவம் என்பது அனைவருக்கும் சமமான சொத்து, சமமான பதவி, சமமான ஆற்றல், சமமான ஆயுள் என்று பொருளாகாது. வலியோர், எளியோர் என்றில்லாமல் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் கருத்துக்களையும் மதிப்பதில் சமமான அணுகுமுறையைக் கையாளுவதே ஆகும். இத்தகைய அணுகுமுறைகள் சகோதரத்துவ உறவுமுறைகளிலிருந்தே தொடங்கிட இயலும். எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மாறுபாடுகள் இருந்தாலும் தன்னைப்போல் பிறரும் மனிதர்களே என்கிற ஏற்பும் உரிய மதிப்பும்தான் சமத்துவத்திற்கான அடிப்படையாகும். இத்தகைய ஏற்புக்கும் உரிய மதிப்பு அளிப்புக்கும் சகோதரத்துவ அணுகுமுறையே வழிவகுக்கும். சகோதரத்துவ உறவுமுறையிலும்கூட வயது அடிப்படையில் மூத்தோர் - இளையோர் என்கிற வேறுபாட்டினை அறிய முடியும். இவ்வேறுபாட்டினால் உரிய மதிப்பு அளிப்பதிலும் மேல்-கீழ் என்கிற நிலையைக் காண முடியும்.
இவ்வாறான வேறுபாடுகளுக்கும் இடம்கொடுக்காத உறவுமுறை விளிப்பு ஒன்று இன்றைய பொதுவாழ்வுக் களத்தில் கையாளப்படுகிறது. அதுதான் ‘தோழர்’ என்னும் உறவுமுறையாகும். இது வயது வேறுபாடுகளையும் துடைத்து ஒரு சமத்துவ உறவை வெளிப்படுத்துகிறது. அமைப்பாக்க நடவடிக்கையில், இவ்வாறு சகோதரத்துவ, சமத்துவ உறவுமுறைகளை வளர்ப்பதும் அவற்றைச் செழுமைப்படுத்துவதும் இன்றியமையாத தேவையாகும்.
ஒருமை விளிப்பால் உறவுகள் சிதையும்! - அளிக்கும்
உரிய மதிப்பால் உயர்நட்பு விளையும்!