முகநூலிலாவது முகம் காட்டுவாயா

எங்கே இருக்கிறாய்...?
எப்படி இருக்கிறாய்..?
எதுவும் தெரியவில்லை...

காதலித்தோம்
கனவு கண்டோம்...
வாழ்க்கை நிர்ப்பந்தம்
நினைவுகளைச் சுமந்து
பிரிந்து சென்றோம்...

வாழ்க்கை உன்னை
மறக்கச் செய்தது
என்றால் அது பொய்...
உணர்வுகளை மட்டும்
மரிக்கச் செய்தது...

மரித்த உணர்வுக்குள்
எப்போதாவது சிலிர்த்து
மல்லுக்கட்டுவாய்...
ஏனோ சில தினங்களாய்
அடிக்கடி உணர்வில்
பூத்து இம்சிக்கிறாய்...

நீ... நான்...
நாமாக
நடந்த...
சிரித்த...
வாழ்ந்த...
கதை பேசிய...
கட்டி அணைத்த...
நினைவுகள் எல்லாம்
எழுந்து எழுந்து
இம்சிக்கிறது...

முகநூலில் அலசினேன்...
முகம் தெரியாதவர்கள்
எல்லாம் கிடைக்கிறார்கள்
உன்னைத் தவிர...

உன் பெயர்...
என் பெயர்...
நம் பெயர்...
பெயருக்குப்
பின்னே முன்னே
உன் தந்தை...
என எல்லாம்
கொடுத்துப் பார்த்தும்
கிடைக்கவில்லை
நீ எனக்கு...

ட்விட்டர்...
முகநூல்...
இன்னும் சில
நட்பு இணையத்திலும்
அலசிவிட்டேன்...
எதிலும் நீயில்லை...

உன்னைக் காண
வேண்டுமென...
உணர்வுகள் மீண்டும்
துளிர்க்குது..
உள்ளமோ ஏங்கித்
தவிக்குது...

எங்கு இருக்கிறாய்....?
எப்படி இருக்கிறாய்...?
எதுவும் தெரியாமல்
தினமும் தேடுகிறேன்
இணைய வெளியில்...

என் வாழ்வின்
முடிவுரை எழுதும் முன்
முகநூலிலாவது
முகம் காட்டுவாயா?
-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (12-Oct-15, 11:36 pm)
பார்வை : 111

மேலே