தெய்வீக உணர்வு - கவியரசு கண்ணதாசன்

என் அளவுக்குப் பட்டினத்தாரும், அருணகிரிநாதரும் கூட அனுபவித்திருக்க மாட்டார்கள்.

ஒரு யோகியின் பரிபூரண நிலையை எய்த எல்லோராலும் முடியாது.

இறைவனே மனது வைத்து, வில்லங்கங்களில் இருந்து விடுதலை செய்யும் போது, அதையே பெரிய வரமாகக் கருத வேண்டும்.

மரணம் தவிர்க்க முடியாதது. எல்லோருடைய வாழ்விலும் என்றோ ஒரு நாள் அது நிகழப் போகிறது.

பழைய உடல் நிலை இருந்தால், இன்று நான் ஒரு இருதய வியாதிக்காரனாக இருப்பேன்.

ஒருவேளை மரணம் கூடச் சம்பவித்திருக்கலாம்.

அப்போதெல்லாம் நான்கு படி ஏறினால் மூச்சு வாங்கும்; கால்கள் சுரந்து, வீங்கிப் போய்க் கிடக்கும். அது ஒரு நல்ல சகுனமல்ல.

இன்றைய நிலையில் ஓரளவாவது உணவு உண்ண இறைவன் என்னை அனுமதித்தால் போதும்; வேறு எந்த அபிலாஷைகளும் எனக்கில்லை.

உற்சாகமாக நடமாடும் சக்தி ஒன்று மட்டும் இருந்தால் போதும்.

கையில் இருக்கிற பேனா நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

குழந்தை குட்டிகள், பாசம் என்ற வில்லங்கங்கள் இல்லாதிருக்குமானால், இப்போது நான் நேசிக்கக் கூடியது, ரிஷிகேச யாத்திரையே!

இடுப்பளவு கங்கை நீரில் உட்கார்ந்து கொண்டு யோகம் புரிவது போல் சுகம் வேறு என்ன இருக்கிறது?

இறைவனைப் பற்றிய சிந்தனையை விட, வேறு சிந்தனைக்கு அங்கு வேலை என்ன?

பரலோக வாழ்க்கைக்கும், இகலோக வாழ்க்கைக்கும் இடையேயுள்ள தாரதம்மியங்களைக் குறிப்பிட்டு, உலகத்திற்குச் சொல்லி விட்டால், என் கடைசிக் காலம் பெருமைக்குரியதாக ஆகிவிடாதா?

ஆன்மாவைப் பற்றிய ஆராய்ச்சியில் நான் முழுமை பெற்று விட்டால், பகவானை அகக் கண்களால் தரிசித்து விட மாட்டேனா?

வைராக்கிய ஞானிகள் இன்றுவரை நின்று நிலைத்திருப்பது போல், நானும் நிலைத்திருக்க மாட்டேனா?

ஒருவேளை அந்த ஞானிகளின் அளவுக்கு நானும் வாழ மாட்டேனா?

பரபரப்பான நகர நாகரிகத்திலிருந்து கட்டுப்பாடுகளற்ற தனிமையை எட்டும்போது, குறுக்கீடுகள் இல்லாத அந்தத் தனிமையில் எவ்வளவு சிந்தனைகள் வரும்?

அந்த யோகத்தில் நோய்கள் இல்லை; நோய்களுக்கு மருந்துகளும் இல்லை.

அது வேண்டும், இது வேண்டும் என்ற ஆசை இல்லை; ஆரவாரமில்லை.

நிம்மதி; அதுதான் தேவனின் சந்நிதி.

இரண்டு கைகளையும் நீட்டிப் பிச்சை வாங்கி, உண்டு குளிர்ந்த மர நிழலில் துண்டை விரித்துத் தூங்குவதில் உள்ள சுகம், நகரத்து ஏர் கண்டிஷன் அறையில் கிடைக்காது.

உலகம் சுற்றிலும் செயற்கையாகத் தோன்றுகிறது.

நவீன நாகரிகத்தின் போலித்தனம் விளங்குகிறது.

`எல்லா ஆட்டங்களுமே முடியக் கூடியவையே’ என்ற சிந்தனை, அடிக்கடி வருகிறது.

பணம் சேர்ப்பதும், பங்களா வாங்குவதும் மறந்தே போய்விட்டது.

அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமே பணம்; வெயில் மழைக்கு ஒதுங்கவே வீடு.

தேவைகள் குறைந்தபட்ச நிலையை எட்டுகின்றன.

இருபது வயதில் அதிகபட்ச நிலைக்குப் போன மனது, ஐம்பதிலேயே குறைந்தபட்ச நிலைக்கு வந்து விட்டது.

பிறப்பின் நோக்கங்கள் முடிந்தனவோ இல்லையோ, ஒரு பிறப்பு முடிவை நோக்கிப் பயணம் செய்கிறது.

இளம் வாலிபர்களைக் காணும் போதெல்லாம், இவர்கள் ஆடி ஆடி ஓய வேண்டியவர்கள் என்று தோன்றுகிறது.

`மனிதனுடைய இலட்சிய எல்லை ஈஸ்வர ஐக்கியமே’ என்று எண்ணும்போது, பகவத்கீதையின் சுலோகங்கள் பளிச்சிடுகின்றன.

ஒரு இளைஞன் பகவத்கீதை படித்தால், அது புரிவது கடினம்.

வாழ்ந்து பார்த்தவன் வாழ்க்கையைப் பார்ப்பது போல, அனுபவித்து அறிந்தவன் அதைப் படித்தால் புரியும்.

மனத்தின் சபலத்தைப் பற்றி அர்ஜுனன் கேட்கிறான்; `அதை யோகத்தால் அடக்க முடியும்’ என்று பகவான் சொல்லுகிறான்.

இன்றைய கல்லூரி மாணவனிடம் போய் யோகத்தைப் பற்றிப் பேசினால், அவன் சிரிப்பான்.

காமக் களியாட்ட நடனங்களையும், திரைப்படங்களையும் விரும்பும் அவனுக்கு அது புரியாது.

ஆனால் எனக்குப் புரிகிறது.

மனம்-

அதன் கோலங்கள் தான் எத்தனை?

தான் போடுகின்ற கோலங்கள் அனைத்துமே ஓவியங்கள் என்று எண்ணுவது மனம்.

குழந்தைப் பருவத்தில் அது குருத்து விட்ட போது, உலகத்தின் பசுமையே அதன் கண்ணுக்குத் தெரிந்தது.

சேலை அழகாக இருந்தால் கூடச் சேயிழையாள் அழகு என்று எண்ணிற்று.

எதிலும் ரசனை, எதிலும் சுகம்.

யாராவது ஒருவர் அன்பாகப் பேசிவிட்டால், அவரையே சுற்றி வட்டமிடும்.

எவளாவது ஒருத்தி காதலிப்பது போல் நடித்துவிட்டால், அவளுக்காகவே ஏங்கும்.

அமெரிக்காவைப் பற்றிப் படித்து விட்டால், அங்கு போக மாட்டோமா என்று அலறும்.

ஆனால், வயது ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் போதுதான், எதன் மீதும் ஒரு கேலிச் சிரிப்பு எழும். `எவ்வளவோ பார்த்தாகி விட்டது’ என்று சொல்லத் தோன்றும்.

எதைப் பற்றிப் பேசினாலும், `அந்த நாளிலே…’ என்று ஆரம்பிக்கும்.

வாசற்படி, தான் மலையின் ஒரு பகுதியாக இருந்ததை எண்ணிப் பார்த்தால் வருத்தப்படத்தான் செய்யும்.

ஆனால், வாசற்படியாகச் செய்யும் சேவையை மலையாக இருந்தபோது, தான் செய்யவில்லை என்று எண்ணிப் பார்த்தால், அது மகிழ்ச்சியடையும்.

செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்து முடித்தால், யோக காலத்தில் அவை திரண்டு நிற்கும்.

நான் எழுதியதை விட, எழுதாமல் விட்டது அதிகம்.

ஆனால், எழுதியதே அதிகம் என்று பல பேருக்குத் தோன்றுகிறது.

அப்போது நான் பகவத்கீதையை மொழி பெயர்க்கவில்லை.

படித்திருந்தால், எனது சொற்பொழிவு நிலையே திசை மாறி இருக்கும்.

மற்றவர்களும், காலம் கடந்ததற்குப் பின்பு இதைச் சிந்திக்கக் கூடாதே என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன்.

இன்னும் எனக்கொரு நம்பிக்கை இருக்கிறது.

இறைவன் சற்று ஒத்துழைப்பானானால், இதற்கு முன் யாரும் சொல்லாத சில விஷயங்களை, நான் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

சிறு வயதின் போகானுபவங்களும், ரோகானுபவங்களும் சிந்தனையைக் கொஞ்சம் தடை செய்கின்றன.

உலக விஞ்ஞானத்திற்கும், பூலோகத்திற்கும், தெய்விக உணர்விற்கும் இந்து மதமே அடிப்படை என்று எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. அது பற்றி ஆராய உடல் வலிமை இன்னும் சற்று அதிமாகத் தேவைப்படுகிறது.

மூச்சை அடக்கிக் கடலுக்குள்ளே முத்தெடுப்பவனைப் போலதான், இப்போது நான் சில சாதாரண முத்துகளை எடுத்து வருகிறேன்.

இந்து மதத்தில், சுமார் 112 உபநிஷத்துகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவற்றில் கடோபநிஷத்தில் சில பக்கங்கள் மட்டும்தான் நான் படித்திருக்கிறேன்.

பார்க்கப் போனால், உபநிஷத்துகளைப் படித்து ஆராயவே ஒரு பிறவி எடுக்க வேண்டும் போல் தோன்றுகிறது.

சிறு வயதில் இருந்த சிறிய ஆசைகள் போய், பெரிய வயதில் பெரிய ஆசைகள் முளைத்திருக்கின்றன.

இவை ஒரு யோகியின் ஆசைகளே!

`இன்னும் என்ன? இன்னும் என்ன?’ என்ற கேள்வியை இப்போது மனது கேட்கிறது.

உடம்பு நன்றாக இருக்கும்போது மனத்தில் யோக நிலை இல்லை.

இரண்டும் ஒன்றாகக் கைவரப் பெற்றவர்களே உன்னத யோகிகள்.

`அங்கே ஒரு சுவாமி அப்படிச் செய்தார்; இங்கே ஒரு சுவாமி இப்படிச் செய்தார்’ என்று நாம் செய்திகள் கேள்விப்படுகிறோம்.

அவையெல்லாம் என்ன?

ஏதோ ஒரு யோகம் அவர்களுக்குக் கைவந்த கலையாகி விட்டது.

`ஒருவரைப் பார்த்தவுடனேயே வரலாற்றைச் சொல்லி விடுகிறார்’ என்றும், `நீங்கள் வீட்டுக்குப் போங்கள். ஒரு செய்தி காத்திருக்கிறது’ என்றார் என்றும், சில அதிசயங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

திருமுருகன் பூண்டியில் ஒரு சுவாமி, திருவண்ணாமலையில் ஒரு சுவாமி, பெங்களூருக்கு அருகில் ஒரு சுவாமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு சுவாமி – பலரைப் பற்றி பலவிதமாகக் கூறப்படுகிறது.

அவர்கள் விளையாடுவது சித்து என்று நானும் கூறியிருக்கிறேன். ஆனால், அதுவும் ஒரு வகை யோகமே.

என்னாலும் உன்னாலும் எது முடியாதோ, அதை இன்னொருவன் செய்யும்போது அவனது திறமையை ஒப்புக் கொண்டுதான் அடுத்ததைப் பேச வேண்டும்.

இந்த சித்துக்களுக்கு அப்பாற்பட்ட யோகிகள் சிலர் உண்டு.

காஞ்சிப் பெரியவர்கள், அவர்களில் முக்கியமானவர்கள்.

காஞ்சிப் பெரியவர்கள் செய்வதை `ஹடயோகம்’ என்றே கூறலாம்.

அவர் ஆணியை விழுங்குவதில்லை.

சமாதியில் முப்பதுநாள் இருந்து மீண்டும் வருவதில்லை.

ஆனால், இவற்றை எல்லாம் விட ஒரு தெய்விக நிலையை அவர் எட்டியவர்.

ராமானுஜர் காலத்தில் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் பற்றிய சர்ச்சை எழுந்தது. இன்று இரண்டு மார்க்கத்துக்குமே பாலமாக விளங்குபவர் காஞ்சிப் பெரியவர்.

எல்லா யோகிகளிடமும் மேதைத் தன்மையை எதிர்பார்க்க முடியாது.

காஞ்சிப் பெரியவர்களிடம் அதுவும் இருக்கிறது.

உண்மையான மேதைக்கு வேண்டிய அடக்கமும் இருக்கிறது.

பற்றற்ற ஞானமும், பரமார்த்திக நிலையும் இருக்கின்றன.

`எல்லோராலும் முடியாது’ என்று சொல்லக்கூடிய வாழ்க்கை நிலை இருக்கிறது.

லெளகீக வாழ்க்கையை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கும் தெளிந்த உணர்விருக்கிறது.

கடலிலேயே கருங்கடல், அரபிக்கடல் என்றிருப்பதைப் போல, இந்தக் கடலும் ஞானக் கடல், பக்திக் கடல், யோகக் கடல்.

கைப்பிடி அவலிலும், ஆழாக்குப் பாலிலும் ஒரு ஜீவன் காதகாதங்கள், நடந்தே போக முடிகிறதென்றால், அது அவலின் சக்தியல்ல; ஆன்மாவின் சக்தி.

வைட்டமின் மாத்திரையால் உடம்பு சூடாகிறது என்று கருதி, இரண்டு மாத காலம் வைட்டமின் மாத்திரைகளை நான் நிறுத்தினேன். இத்தனைக்கும் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஆனாலும் என்னால் எழுந்து நடமாட முடியவில்லை.

எழுதுவேன், படுப்பேன், எழுவேன்; காலைப் பலகாரம் சாப்பிடுவதற்குக் கூட உட்கார முடியவில்லை.

அவரோ, ஆன்ம சக்தியைத் துணையாகக் கொண்டு நடக்கிறார்; பேசுகிறார்; ஆன்மாவைப் புடம் போட்டு எடுத்து விட்டால், நன்றாகப் பாடம் பண்ணிவிட்டால், உடம்பு அதற்குக் கட்டுப்பட்டு விடுகிறது.

ஆன்மாவைப் பாடம் பண்ணுவதென்றால் என்ன?

`எதையும் சமமாகப் பாவிப்பது’ என்கிறது பகவத்கீதை.

இன்பம், துன்பம், இருட்டு, வெளிச்சம் எல்லாமே சமமாகிவிட்டால் யோகம் கைகூடி வரும்.

சாவுக்கு அழாமலும், வரவுக்குச் சிரிக்காமலும், சம உணர்வு எய்தும் தன்மை சுலபத்தில் வந்து விடாது.

நான் காதலில் கருகிப் போகிறேன்; பாசத்தில் வெந்து போகிறேன்; வேண்டியவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் சாதாரண மனிதனை விட மோசமாக அழுகிறேன்.

ஆன்மாவின் பலவீனம் முழுமையாக செம்மைப்படவில்லை.

நாள் ஆக ஆக இந்தப் பலவீனம் குறைவதும் தெரிகிறது.

என் சகோதரரின் மறைவு என்னை அதிர்ச்சி அடைய வைத்தது உண்மையே.

அந்த அதிர்ச்சி எல்லாம், `நல்ல வாழ்க்கை அமையாமல் அவர் மாண்டு விட்டாரே’ என்பதால் ஏற்பட்டது.

ஆனால், எனது நான்கு சகோதரிகள் இறந்த போது, அழுத அழுகையை விட, இப்போது அழுதது குறைவு.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சகோதரி காலமானார். அப்போது எனக்குப் பதினேழு வயது.

தொடர்ச்சியாக ஏழு நாட்கள் அழுதேன்.

பல வருஷங்கள் அந்த மரணத்தை மறக்க முடியவில்லை.

இப்போது ஒன்றை மறப்பது என்பது கடினமாகத் தோன்றவில்லை.

`நாமும் சாக வேண்டியவர்களே’ என்ற எண்ணம் அழுத்தமாக எழுவது இந்த வயதில்தான்.

இன்னும் நாலைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மரணத்தைக் கண்டு சிரிக்கும் நிலையே எனக்கு ஏற்பட்டு விடக் கூடும்.

பரிபக்குவ நிலை, பரிமாணத்தின் மூலமே வருகிறது. அது எய்துகின்றவனுடைய அறிவைப் பொறுத்தது. அது சீக்கிரம் வந்துவிடக் கூடும்.

நான் குருகுலத்தில் படித்தவன். ஐந்தாண்டு காலம் வெளி உலகை அறியாது வாழ்ந்தவன்.

அதை விட்டு வெளியே வந்து உலகைப் புரிந்து, உள்ளங்களைப் புரிந்து பக்குவநிலை எய்துவதற்கு எனக்கு இவ்வளவு காலமாயிற்று.

இதுவும் முழுப் பக்குவமல்ல.

முழுப் பக்குவம் என்பது, விரும்புவது கிடைக்காவிட்டாலும், விரக்தியடையாமல் இருப்பது.

மீண்டும் கீதையைச் சொன்னால், எதையும் சமமாகப் பாவிப்பது.

காஞ்சிப் பெரியவர்களைத் தவிர, வேறு ஒருவரிடமும் அந்தப் பக்குவ நிலையை நான் காணவில்லை என்று சொன்னால், மற்றவர்கள் வருத்தப்படக்கூடாது.

பெரும்பாலானவர்களிடம் கோபமாவது மிஞ்சி இருக்கிறது; பெரியவர்களிடம் அதுவும் கிடையாது.

இந்த யோகம், பயிற்சி, படிப்பு, அனுபவம் ஆகிய அனைத்தும் சேர்ந்த பின்னாலே வரும்.

உடம்பிலே திமிரில்லாத இளைஞர்கள் மட்டுமே இதைப் பயில முடியும்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது - செந (24-Oct-15, 7:17 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 124

சிறந்த கட்டுரைகள்

மேலே