சேர்த்தலும் பிரித்தலும்

மதியம் சாப்பிடச் செல்லும்போது வழக்கமான ராஜா கலெக்ஷனைக் காதில் ஓடவிட்டிருந்தேன். அதில் ஒரு பாட்டு, தர்மதுரை படத்திலிருந்து ‘சந்தைக்கு வந்த கிளி’.

இதுவரை இந்தப் பாடலைக் குறைந்தபட்சம் நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால் இந்தமுறை அனுபல்லவியில் வரும் ‘குத்தாலத்து மானே, கொத்துப் பூ வாடிடும் தேனே’ என்ற வரி கொஞ்சம் உறுத்தியது.

அதென்ன ‘பூ வாடிடும் தேனே’? பூ வாடினால் அதில் ஏது தேன்?

அநேகமாக அந்த வரி ‘பூ ஆடிடும் தேனே’ என்றுதான் இருந்திருக்கவேண்டும். பூவில் ஊறுகிற தேன் என்ற பொருளில். புணர்ச்சி விதிப்படி அது ‘பூவாடிடும் தேனே’ என்ற மாறியிருக்கும், ட்யூனிலும் அழகாக உட்கார்ந்திருக்கும். அதனால் அர்த்தம் கொஞ்சம் மாறுவதைப் பாடியவரோ அவருக்கு உதவியவரோ கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.

இதேமாதிரி இன்னோர் உதாரணம், ’ராஜகுமாரன்’ படத்தில் வருகிற ‘என்னவென்று சொல்வதம்மா’ என்ற பாடலில் உண்டு. அந்த வரி:

அந்தி மஞ்சள் நிறத்தவளை,

என் நெஞ்சில் நிலைத்தவளை

’மாலை நேர வானத்தின் மஞ்சள் நிறம் கொண்டவள், என் மனத்தில் நிலைத்தவள்’ என்கிற நல்ல அர்த்தத்தில் எழுதப்பட்ட இந்த வரிகள் மெட்டில் உட்காரும்போது ‘நிறத் தவளை’, ‘நிலைத் தவளை’ என்று ஒரு சின்ன pause உடன் விழுந்திருக்கும். பாடகரும் அப்படியே அட்சரசுத்தமாகப் பாடிவைத்திருப்பார். இதனால் சம்பந்தப்பட்ட கதாநாயகி மஞ்சள் கலர் தவளை, நெஞ்சில் உட்கார்ந்திருக்கும் தவளை என்று ஒரு விபரீத அர்த்தம் வந்துவிடுகிறது.

’இதையெல்லாம் யாரு உன்னை வேலை மெனக்கெட்டுக் கவனிக்கச் சொன்னாங்க?’ என்கிறீர்களா? அதானே!

***

என். சொக்கன் …

08 09 2011

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (25-Oct-15, 12:54 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 68

மேலே