கல்லாத்தான் நிப்பீங்களா

கல்லாத்தான் நிப்பீங்களா?
நீதியில்லையா? நியாயமில்லையா?
அய்யோ இதை கேப்பாரில்லையா?
இது நாட்டுக்குவந்த கேடா ! - எங்க
வீட்டுக்கு வந்த கேடா ! - அய்யய்யோ
தருமம் செத்துப் போச்சா? - எங்களுக்கு
கருமம் செய்யப் போச்சா?
அய்யோ எங்க மண்ணும்
உசுரும் போகப் போகுதே!
அய்யோ எங்க மாடும்
ஆடும் சாகப் போகுதே!
அவசரமா சட்டம் போட்டு
எங்க வயித்தில அடிக்கிறாங்களே!
எங்களைக் கூட கேக்காம
எங்க நெலத்தை பறிக்கிறாங்களே!
நெல்ல வெளச்சி ஊருக்கெல்லாம்
அரிசி தந்த எங்களுக்குத்தான்
ஊரக்கூட்டி வாய்க்கரிசி போடுறாங்களே!
பட்டாபோட்டு வாங்கப்போகுதே சர்க்காரு
பரிஞ்சிபேச எங்களுக்காரு இருக்காரு?
ஏழைபாழை கூலி வெவசாயிங்க - இனி
எங்கபோயி கையேந்தி நிப்போமுங்க?
ஓட்டு வாங்கி மேட்டுக்குவந்து
எங்களை ஓட்டாண்டி ஆக்குறாங்களே!
பணக்காரன் நோட்டவாங்கி போட்டுக்கிட்டு
எங்க பாசனத்தை மாய்க்கிறாங்களே!
காருலபோகும் ஆட்சிமன்ற மக்கமாரே - குரலு
காதுலத்தான் ஏறலையா மக்கமாரே?
கண்ணத்தொறந்து பாப்பீங்களா நீதிமாரே - அவங்க
கையக்கட்டி போடுவீங்களா நீதிமாரே?
இன்றுகொல்லும் அரசனத்தான் தெய்வங்களே
நின்றுத்தான் கொல்வீர்களா தெய்வங்களே!
சொல்லத்தான் கேப்பீங்களா தெய்வங்களே -இல்ல
கல்லாத்தான் நிப்பீங்களா தெய்வங்களே?
- ருக்மணி