அழகு நிலாக்காரி
அழகு நிலாக்காரி !!!!
மொட்டை மாடியில் - ஓர்நாள்
மெல்ல நடந்திரிந்தேன்
வட்டநிலா ஒளியில் - அழகு
வானம் நனைந்ததுவே!
என்ன தேடுகின்றாய் - வானில்
என்றது எனதுள்ளம்!
பலராலும் சொன்னகதை - கிழவி
பலகாரம் செய்திடுவாள்!
குறுக்கிலும் நெடுக்கிலுமாய் - பல
கணக்குகள் போட்டுபார்த்தேன்
இணைக்க முடியவில்லை - மீன்களை
இறைத்தது யார்சொல்வீர்!
மூன்றுகோடு போட்டேன் - பின்பு
முக்கோணமும் முயன்றேன்
நேர்க்கோடாய் இணைத்தேன் - அதுவோ
நேரத்தை விழுங்கியதே!
அறிவியலை புறந்தள்ளி - நானோ
அழகுக்குள் நுழைந்துவிட்டேன்
எனைமீட்க யாருமில்லை - விட்டு
இறங்கிவர மனமுமில்லை!
நிலவிற்கும் எனக்குமோர் - சிரியதொரு
சினேகம் வளர்ந்ததுகாண்
கேள்விகள் கேட்கலானேன் - அவளோ
கேலிசெய்து சிரித்தாள்!
நடுவினில் மேகங்கள் - கூட்டமாய்
நாட்டியமாடக் கண்டேன்!
போகட்டும் என்றிருந்தேன் - மீண்டும்
புதுப்பொலிவுடன் வந்தாள்!
என்னழகில் மயங்குகிறீர்
இன்பத்தேன் பருகுகிறீர்!
முப்பதில் ஒர்நாள்தான்
முழுமையாய் நான்வருவேன்!
இத்தனை அழகுனக்கு
அளித்தது யாரென்றேன்!
வெடுக்கென்று மேகத்தால்
நாணத்தால் முகமறைத்தாள்!
நீலஉடை அணிந்தவளே
நிலாக்காரி உனதூர்தான்
எதுவோ என்றேன்; அதுவோ
அந்தரங்கம் என்றாளவள்!
எனைப்பற்றி பாடாதோர்
உண்டோ என்றாள்; நானோ
இல்லையென்று உளறிவைத்தேன்
இறுமாப்பை தள்ளிவைத்தேன்
பார்த்திபன்.ப
25/07/2015