கலை தேடும் அலைகள் எங்கள் ஊராம் -முஹம்மத் ஸர்பான் -போட்டிக் கவிதை
மழைக் காதலன்
வருகை தாமதிக்க
விருட்சங்களும்
முகம் மாறி சோகத்தில்
உறைந்திருக்கும்.
நீலக்கடலின் இரைச்சல்
சத்தம் அடங்கி ஆடு,புலி
ஆட்டம் பாட்டம் முரசு
போல் முழங்கிக் கொண்டிருக்கும்.
மென் பூக்கள் சுவாசம்
தொட்டு தென்னையின்
இளநீரும் கள்ளாய் மாறும்.
பனையிலும் பதநீர் தோன்றும்.
தீவு போல் அடைக்கப்பட்ட தோப்புக்குள்
வாழைக்குழைகள் நிலத்தை
முத்தமிட்டிருக்கும்.அமுதம் சுரக்கும்
கனிகளை கள்ளத்தனமாய்
உண்ணும் பறவைக் கூட்டம்
கரையோர சோலையழகில்
ஆனந்தமாய் அணிநடை
வகுக்கும் சிற்றெறுப்புக் கூட்டம்.
வானம் மஞ்சள் பூசி
குங்குமப் பொட்டு வெச்சி
இருளோடு உறவாட
விண்மீன்கள் விளக்குகளால்
கானகம் செழித்திருக்க.....,
காட்டு மூங்கில் காரனின்
இசைக்கச்சேரி
தென்றலோடு கலந்திருக்கும்...,
வழிப்போக்கன் செவிவழியே
நெஞ்சை பிழிந்து இன்னிசை
மயக்கம் இமைகளை களவாடும்.
முறுக்கு மீசைக்காரன்
கட்ட பொம்மனின் நாடகம்
இங்கே தினந்தினம் பிறக்கும்.
களியான் கூத்தும் கிராமிய
மண் வாசனையுடன் சொந்தமாகும்.
குளத்தில் துள்ளும்
வரால் மீன்கள்
செந்தாமரைக்கு குமிழிகளால்
காதல் மடல் தீட்டும்.
வேம்பு மரத்தோடு
உறவு கொள்ளும் காக்கை போல்
தாவணிப் பெண்ணுக்கு அரும்பு
மீசைக்காரன் மனதை கொடுக்கும்
விடையில்லா விடுகதைகள்.
மேகம் தொடப்பறக்கும்
காற்றாடிகள்
விண்மீன் ரசிக்கும்
காக்கை கூட்டின் மின்மினிகள்
தூத்துக்குடி என்கின்ற
வானவில்லின் ஒவ்வொரு
வர்ண கிராமமும்
இயற்கையின் முத்தங்கள்
நதி தேடும் கிளை போல
அழகு சேரும் திசைகள்
எங்க ஊராம்.