இசைபட ஈதல்
நேற்றைக்கு ஓசூர் சென்றிருந்தேன். தனியார் நிறுவனமொன்றில் மேலதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் என்ற நண்பரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சுவாரஸ்யமான அரட்டை.
இளங்கோவன் திருக்குறள் பிரியர். ’இந்தப் புத்தகத்தில்மட்டும்தான் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும்’ என்பார்.
உதாரணமாக, அவர் குறிப்பிட்ட ஒரு குறள்:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு
இந்தக் குறளுக்குப் பொதுவாகத் தரப்படும் விளக்கம் என்ன?
ஈதல் = வேண்டியவர்களுக்கு ஒரு பொருளைத் தருதல்
இசைபட வாழ்தல் = அதனால் புகழ் உண்டாகும்படி வாழ்தல்
இந்த இரண்டும் இல்லாவிட்டால், மனித வாழ்க்கைக்குப் பயன் எதுவும் இல்லை
இங்கே இசை = புகழ் என்ற பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை இந்த அர்த்தத்தில் நாம் சகஜமாகத் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவதில்லை. இசை = Music என்பதுதான் பெரும்பாலானோர் அறிந்திருக்கிற பொருள்.
ஆனால் கொஞ்சம் மறைமுகமாக, இசை = புகழ் என்ற பொருளும் நமக்கு ஓரளவு பரிச்சயமானதுதான். ’எசகேடாப் பேசாதே’ என்று சொல்கிறோம் அல்லவா? அது ‘இசை கேடாகப் பேசாதே’ என்பதன் கொச்சை. அதாவது, ‘அவசரப்பட்டு உன்னுடைய புகழ் கெடும்படி ஏதாவது பேசிவைக்காதே’ என்று அர்த்தம்.
இன்னும் நம்பிக்கை இல்லையா? கம்பன் சொன்னால் நம்புவீர்களா?
கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. ராத்திரி நேரத்து நிலாவைப் பார்க்கும் ராமன் ‘நீள் நிலாவின் இசை’ என்கிறான்.
ஒருவேளை ராமன் ‘வண்டின் இசை’ என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை, ‘நிலாவின் இசை’ என்கிறான், நிலாவுக்கு ஒளிதான் உண்டு. இசை / சத்தம் கிடையாது. ஆகவே, இங்கே ‘நிலாவின் இசை’ என்பது, நிலவின் புகழைதான் குறிக்கிறது.
ஆக, திருவள்ளுவரும் ‘இசை பட வாழ்தல்’ என்று சொல்வதன் அர்த்தம் ‘புகழ் சேர்ந்து வாழ்வது’ என்பதாகதான் இருக்கவேண்டும். பரிமேலழகர், மணக்குடவர் தொடங்கிக் கலைஞர், சுஜாதாவரை எல்லாரும் இப்படிதான் விளக்கம் தந்திருக்கிறார்கள்.
‘அந்த விளக்கங்களில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அதேசமயம் இதைக் கொஞ்சம் மாற்றிப் படித்தால் இந்தக் குறளுக்கு வேறோர் அருமையான அர்த்தம் புரியும்’ என்றார் இளங்கோவன்.
‘எப்படி மாற்றணும்?’ என்றேன் ஆவலுடன்.
’ஈதல், அப்புறம் இசைபட வாழ்தல்ன்னு பிரிக்காம, இசைபட ஈதல் வாழ்தல்ன்னு பிரிச்சுப் பாருங்க.’
‘இசை பட ஈதலா? நாம கொடுக்கறதை ஊருக்கெல்லாம் சொல்லிப் புகழ் தேடிக்கணும்ங்கறீங்களா? அது தப்பாச்சே!’
‘அப்படியில்லைங்க, இங்கே இசை-க்கு அர்த்தம் புகழ் இல்லை’ என்றார் இளங்கோவன், ‘இசைந்திருத்தல், அதாவது In Harmony.’
’ம்ஹூம், சுத்தமாப் புரியலைங்க.’
அவர் ஓர் எளிய உதாரணத்துடன் விளக்கினார். ’இப்போ ஒரு குடிகாரன் இருக்கான், அவனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா அது ஈதல்தான், ஆனா தப்பான ஈதல், Not in harmony. அந்த ஆயிரம் ரூபாய்ல அவன் இன்னும் குடிச்சுட்டுப் புறளுவான்.’
‘அதுக்குப் பதிலா, அவனோட குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா, அவங்க அரிசி, பருப்பு வாங்குவாங்க, ஒரு மாசம் வயிறாரச் சாப்பிடுவாங்க. அந்த ஈதல், In Harmony.’
‘அதாவது, நாம பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடணும், நாம யாருக்கு உதவறோமோ அவங்களுக்கு நன்மை தரக்கூடியமாதிரி பொருத்தமான உதவிகளைமட்டும்தான் செய்யணும், அதுதான் இசை பட ஈதல், அதாவது பொருத்தமான, இசைவான ஈதல், அதைச் செஞ்சு வாழ்தல், அதுதான் உயிருக்கு ஊதியம், நாம வாழறதுக்கு அர்த்தம். என்ன சொல்றீங்க?’
***
என். சொக்கன் …
20 05 2012