மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்

நம் தேச தந்தையிடம், நான் வியந்த விஷயங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று, கோட்சே இவரை சுட்டதும், இவர், ‘ஹே ராம்… ஹே ராம்…’ என்று, உயிர் போகிற அவதியில் கூட, உச்சரித்த வார்த்தைகள்.

ஓர் எறும்பு, சுள்ௌன்று கடித்தால் கூட, ‘சே… சனியன்…’ என்று, உடனே, அதைப் பிடித்து, நசுக்கி கொன்று, உரு தெரியாமல் ஆக்கி, தரையில் தேய்க்கும் மனித இனத்தின் மத்தியில், உயிர்போகும் வலியிலும், இப்படி ஒருவரால் பிரதிபலிக்க முடியும் என்றால், அவரது பண்பு நலன்களில், குறையே இருக்க முடியாது அல்லவா?

‘மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம், மாணிக்க கோயிலடா…’ என்று பாடினார், ஒரு திரை கவிஞர்.

‘பழிக்குப் பழி’ என்று ஒரு பழமொழி உண்டு. தாக்கம் ஒன்றை தனக்கு ஏற்படுத்தினால் பதிலுக்கு, ‘சும்மா விட மாட்டேன் உன்னை!’ என்று மென்மையாகவும், ‘பழிக்குப் பழி; குத்திற்கு குத்து; வெட்டிற்கு வெட்டு’ என்று கடுமையாகவும் இதற்கு பொருள் கொள்ளலாம்.

‘சாரி… மன்னிக்கவும்’ என்று பிறரிடம் கூறினால், முன்பெல்லாம் வந்த பிரதிபலிப்பு வேறு. இப்போது வரும் பதில் வேறு. ‘அப்படி சொல்லாதீர்கள்…’ என்று முன்பு கூறியவர்கள், இப்போது என்ன சொல்கின்றனர் தெரியுமா? ‘சரி, பரவாயில்லை…’ என்கின்றனர்.

இதனால், மனித மனங்களின் உள்ளே ஊறி வந்த ஈரம், இப்போது மெல்ல காய்ந்து வருகிறதோ என்று கூட, எண்ணத் தோன்றுகிறது.

திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும், ‘உனக்கு கெடுதல் செய்தவனை சும்மா விடாதே…’ என்கிற பண்பாட்டையே(?) அதிகம் போதிப்பதாக நான் உணருகிறேன். இதன் காரணமாக, ‘மன்னிப்பாவது கின்னிப்பாவது…’ என்கிற மனநிலை, மனித மனங்களின் நடுவே விதைக்கப்பட்டு வருகிறதோ என்று ஐயப்பட வேண்டியிருக்கிறது.

ஒரு மேடையில், முதலில் பேசிய ஒருவர், தனக்கு பின்னால் பேச இருந்த ஒரு பேச்சாளரை, தேவையில்லாமல் வம்பிற்கு இழுத்ததோடு, வீண் விமர்சனமும் செய்தார்.

‘போச்சு! அடுத்த பேச்சாளர் பேசும்போது, இது பெரிய மேடை சண்டையாக வர போகிறது…’ என்று விழா ஏற்பாட்டாளர்கள் பயந்து விட, ‘பார்வையாளர்கள் ஒரு சுவையான வாக்கு வாதத்திற்கு நாம் தயாராக வேண்டியது தான்…’ என்று காதுகளை தீட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். நடந்ததோ வேறு…

‘என் மீது கொண்ட அக்கறையின் காரணமாக, சகோதரர் பல விஷயங்களை பேசினார். அவற்றில் எது உண்மையோ அதை திருத்திக் கொள்கிறேன்…’ என்று பேசி, அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட பண்பாளராகி விட்டார். இதை, ஒரு நாகரிக மன்னிப்பாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.

‘எத்தகைய தவறையும், மன்னிக்கும் மிக உயர்ந்த நீதிமன்றம், தாயின் உள்ளம் தான்…’ என்று எங்கோ படித்தது, நினைவிற்கு வருகிறது. ஆனால், இந்த உயர்ந்த கோவில் கூட, இன்று சிதிலமடைந்து வருவதை செய்தித்தாள்களில் காண்கிறோம்.

தண்டித்து இன்புறுகிறவர்களின் மகிழ்ச்சியை, இறுதியான மகிழ்ச்சி என்று கூறிவிட முடியவில்லை. காரணம், இந்த செயலுக்கு மட்டும் மறு விளைவு உண்டு. ‘வெட்டினவனை வெட்டு…’ என்று சட்டத்தை, காவல் துறையை நம்பாத கூட்டங்கள் கொக்கரிக்க, இந்த பின்னணியே காரணம். ஆனால், மன்னிப்பு என்பது, கோப்பை கட்டி பரணில் போட்டு விடுகிற, ரியாக் ஷனற்ற ஆக் ஷன்.

பழி வாங்குவதிலும், தண்டிப்பதிலும் சுகம் காணும் மனிதர்கள், ‘மன்னிப்பதில் தான், அதிக சுகம் இருக்கிறது…’ என்பதை அறியாதவர்கள் என்றே, கூற வேண்டும். ஒரு சில முறை முயன்று பார்க்கட்டும், இவர்கள் சுகம் கண்டு விடுவர்.

நமக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களை, இரண்டாக பிரித்து கொள்ள வேண்டும். முதலாமவர்கள் வேண்டுமென்றே நம்மை பாதிக்க செய்தவர்கள்; இவர்கள் உள் நோக்கம் உடையவர்கள்.

இரண்டாமவர்கள், எவ்வித உள்நோக்கமும் இல்லாதவர்கள்; வேறு வகையில் கூறினால், வேண்டுமென்றே தவறு செய்யாதவர்கள். இப்பிரிவினர் அவசியம் மன்னிக்கப்பட வேண்டியவர்கள்.

முதலாமவர்களை, மன்னிப்பது கடினம் தான். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கே நம்பிக்கை இராது, நாம் மன்னிப்போம் என்று! இவர்களுக்கு நாம் இனிய அதிர்ச்சி கொடுக்கலாம். இதுவும் ஒரு வகையில் தண்டனை தான்.

மாறாக, அவர்களும் பாதிப்பு அடைய வேண்டும் என, நாம் நடந்து கொண்டால், அது, பழிவாங்கும் கணக்கிற்கல்லவா மாற்றப்பட்டு விடும்!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது - செந (5-Nov-15, 9:43 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 132

மேலே