ஊக்க மது கைவிடேல்

தெள்ளு தமிழிசையில் நெகிழ்ந்து நிலைமறந்த
உள்ளந் தன்னிலே வீரமும் காதலும்
முள்ளும் மலருமாய் ஒன்றிவந்த திருநாட்டில்
கள்ளுக் கடையெல்லாம் அரசுடமை ஆனதுவோ
உள்ளுர கொதித்தாலும் தன்னிலை சொல்லவோ ??
சொல்லொன்று சொன்னாலும் துரோகம் அல்லவோ!!

கெட்டது குடியென்று குடும்பம் கிடந்துவாட
கெட்டது குடியென்று அரசு கடைபோட
அறுபட்டு போனது தமிழரின் நாகரிகம்
நெறிகெட்டு வாடுது இன்றைய அதிகாரம்!!

தவறியது தானென்று தான்நினைத்த காரணத்தால்
அவையோர்கள் மத்தியிலே கைஅறுத்த தென்னவனே!!
தவறிசெய்த தவறுக்கு பிள்ளையை ஈடுவைத்து
பசுவுக்கு வழங்கினாய் மனுநீதி சோழனே!!
பெண்ணொருத்தி துயர்கொள்ள காரணம் நீயென்றா
கண்மூடி போனாய் மதிகெட்ட பாண்டியனே!!

விளங்காத விந்தைகள் விண்முட்டும் கலையோடு
அளவற்ற சாகசங்கள் அரவமற்று செய்துவிட்டு
களம்நோக்கி சென்றங்கே முன்னின்று உயிர்விட்டு
நிலமுள்ள வரைகொண்ட புகழ்விட்டு சென்றீரே !!

உலகுள்ள வேகத்தில் இன்றைய காலத்தில்
குலமுள்ள கோலத்தை நான்சொல்லி காட்டவோ !!

போர்முடித்து களைத்து உறங்கவரும் வீரருக்கும்
போரடித்து அலுத்து நெல்குவிக்கும் பேருக்கும்
சொல்லிலே மறைத்தாலும் உடல்கொண்ட துயர்மாற்ற
கள்ளுண்டு உறங்கென்று யார்கண்டு சொன்னீரோ??

போரையும் மறந்தோம் குலச்சீரையும் மறந்தோம்
பீரையும் சரக்கையும் அமுதென்று அறிந்தோம் !!
ஊரார் சிரிப்பரென்று சொல்லவொரு வழியில்லை
ஊரே குடிப்பதற்கு ஒன்றுகூடி செல்வதால்!!

கட்டுகோப்பாய் வாழ்ந்தகுலக் காளையரின் வீரமெலாம்
கற்றுவந்த பண்போடு கலைந்துபோன கோலம் !!
விற்றுவந்த சரக்குக்கும் மீதமுள்ள இருப்புக்கும்
கற்றவர்கள் அரசுக்கு கணக்குசொல்லும் காலம்!!

உழுதிட்டு விளைத்து உதிர்ப்பவன் ஒருவன்
அதைவாரி அறைகூவி விற்பவன் மற்றொருவன்
உணவிலே தரகுண்டு அதைநாம் சகித்தோம்
கனவிலும் கண்டதில்லை நீருக்கும் விலையென்றோம்
இத்தனை இழிவையும் தாங்கித்தான் வாழ்கிறோம்
இதற்கும் காரணம் மதுவின் மேன்மையோ!!

ஒழுக்கமெனில் யாதென்று எவரேனும் கேட்டால்
ஒருகாலம் எங்களை பீடித்த சனியென்போம்!!

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (7-Nov-15, 10:53 pm)
பார்வை : 147

மேலே