உரிமைகள் பறிக்கப்படும்

வாய்ப்பு ஒரு முறை தான்
உன்னை பரீட்சித்து பார்க்கலாம்
வற்புறுத்தி பணிய வைக்கலாம்
நிர்பந்தப்படுத்தி ஏற்கச் செய்யலாம்
நீ அதிகாரத்திற்கு பணியாமல்
எதிர்க்கலாம்
உனது சுதந்திரத்தை
விலை கொடுத்து வாங்கலாம்
உனக்கு வழங்கப்பட்ட விருதை
தட்டிப் பறிக்கலாம்
உனக்கு சாதகமாக வழங்கப்பட்ட
தீர்ப்பை ரத்து செய்யலாம்
அக்கம்பக்கத்தினர் உன்னைத்
தெரியாதது போல் நடிக்கலாம்
எங்கிருந்து அம்பு பாய்கிறது
எனத் தெரியாமல் தவிக்கலாம்
எனக்கு இதில் சம்பந்தமில்லை என
நீதிபதியிடம் கெஞ்சலாம்
காவலர்கள் கவனிப்பால்
உடம்பு முழுவதும்
லத்தியின் தடம் பதியலாம்
பரோலில் வந்து
தப்பியோட முயலலாம்
இதற்கு மேலும்
சாத்தியப்படாது என
எதிரியிடம் சரணடையலாம்
இல்லையேல்
என்னை ஏன் கைவிட்டீர் என
வானம் பார்த்து
கூக்குரல் எழுப்பலாம்
மரணித்த பின்பு மூன்றாம் நாள்
எல்லோருடைய கண்களிலும்
தென்படலாம்
இறைமகன் என்ற பெயர்
பல நூற்றாண்டுகள் நிலை பெறலாம்
ஓய்வு நாளென்று காரியம்
சாதிக்க முயலலாம்
வீட்டுச் சிறையில்
வாழ்நாளெல்லாம் கழியலாம்
காட்டிக் கொடுத்துவிட்டு
யூதாஸைப் போல்
தூக்கிட்டுக் கொள்ளலாம்.

எழுதியவர் : ப.மதியழகன் (15-Nov-15, 5:39 pm)
பார்வை : 151

மேலே