மகிழ்ச்சியின் முயற்சி

வந்த காரணம் அறியாது என்ன ஏதென்று தெரியாது
கை கால்கள் அசையாது தலை கீழாக விழுந்தேன்
முயற்சி பண்ணுன்னு செவிலி சொன்னாள்

மண்டியிட்டு மண்ணை தொட்டேன்
குறும்புக்காரன் என குட்டு பட்டேன்
எம்பி எழுந்து நடந்து பார்த்தேன்
ஏழாவது அடியில் எகிறி விழுந்தேன்
முயற்சி பண்ணுன்னு அம்மா சொன்னாள்

கல்வி கருவென பள்ளி சேர்ந்தேன்
புத்தகம் படித்தே புழுவாகிப் போனேன்
தானாக தேர்வில் சிந்தித்து எழுதினேன்
ஆறாம் வகுப்பு மூன்றுமுறை படித்தேன்
முயற்சி பண்ணுன்னு வாத்தியார் சொன்னார்

அரும்பு மீசையை தினமும் வழித்தேன்
கன்னத்துப் பருக்களில் களிம்பு பூசினேன்
பக்கத்து கல்லூரி பாடம் படித்தேன்
முகத்தில் உமிழ்ந்த எச்சில் துடைத்தேன்
முயற்சி பண்ணுன்னு காதலி சொன்னாள்

பட்டம் சுமந்த பரதேசி ஆனேன்
காகிதங்களை கையில் ஏந்தி யாசகம் கேட்டேன்
நேர்முகத் தேர்வில் முகம் வியர்த்தேன்
பதற்றத்தை பற்றி பத்து நிமிடம் பேசி முடித்தேன்
முயற்சி பண்ணுன்னு முதலாளி சொன்னான்

திருமணம் செய்தாவது திருந்த நினைத்தேன்
வறுமையில் வயிறு வற்றி இளைத்தேன்
திட்டிக் விட்டு கட்டி வைத்த சோறு உண்டேன்
மனம் நொந்து மண்ணில் விழுந்தேன்
முயற்சி பண்ணுன்னு மனைவி சொன்னாள்

உழைத்துக் களைத்து தேய்ந்தே போனேன்
அழுது சளித்த கண்கள் மூடினேன்
பட்டினி கிடந்தும் வயிறு பெருத்தேன்
அயர்ந்த கைகளை மெதுவாக நீட்டினேன்
முயற்சி பண்ணுன்னு மருத்துவர் சொன்னார்

நடக்க இயலவில்லை பழையபடி நகர்ந்தேன்
விழுங்க முடியவில்லை எச்சில் பருகினேன்
உறக்கம் வரவேயில்லை படுத்தே பழகினேன்
தனிமை பிடிக்கவில்லை காலனை அழைத்தேன்
முயற்சி பண்ணுன்னு பேரன் சொன்னான்

பேச முடியாமல் மழழையாயினேன்
கடைசி கரண்டி பாலையும் துப்பினேன்
இதயம் நிற்க மூச்சை விட்டேன்
கணத்த உடலை பிரியத் துடித்தேன்
முயற்சி பண்ணுன்னு எமனே சொன்னான்

மேற்கொண்ட பயிற்சிகளும் மேற்சொன்ன முயற்சிகளும்
வாழ்வுக்கு வெறுமை மட்டுமே சேர்த்தது
சளித்த வாழ்வின் அர்த்தம் எதுவாயினும் - நாம்
தொலைத்த வார்த்தை இதுதானோ?

மகிழ்ச்சிக்கு முயற்சி செய்யவே மூன்று ஜென்மம்
பிடித்துவிடும் போலும்...எனவே
முயலாதே நண்பா "மகிழ்"

எழுதியவர் : (17-Nov-15, 11:44 pm)
பார்வை : 98

மேலே