மீண்டும் மீண்டும்
கரு உருவாகாமல் இருக்க
கடவுளிடம் வேண்டினாய்
மீண்டு விட்டேன்
உருவான கருவை
கலைக்கச் சொன்னாய்
மீண்டு விட்டேன்
சிசுக் கொலையில்
சிதைக்கச் சொன்னாய்
மீண்டு விட்டேன்
கல்விக்கான கண்ணை
மூடச் சொன்னாய்
மீண்டு விட்டேன்
பருவ வயதை காரணம் காட்டி
கதவுகளை அடைத்தாய்
மீண்டு விட்டேன்
அலுவலக அறிவுக்கு
அப்பாற்பட்டவள் என்றாய்
மீண்டு விட்டேன்
பலவீனப் பாலினம்
பட்டம் தந்தாய்
மீண்டு விட்டேன்
மதங்களின் பெயரால்
மண்டியிட வைத்தாய்
மீண்டு விட்டேன்
சமையலறைக்குள் சிறை
வைக்க நினைத்தாய்
மீண்டு விட்டேன்
பாலியல் வன்முறைக்கு
இரவில் இரையாக்க நினைத்தாய்
மீண்டு விட்டேன்
பெண் என்பதற்காகவே
நீ கொடுக்கும் அத்தனைத்
தடைகளையும் தாண்டி
மீண்டு வருவேன்
மீண்டும் மீண்டும்
மீண்டும் வருவேன்