வஞ்சி மன்னன் - சரித்திரத் தொடர்- பாகம் 8 நடுவிலிருந்து போகும் கதை

........................................................................................................................................................................

அதிகாலை வேளையில் அரசவை கூடியிருந்தது. ஒரு மேடையில் அமர்ந்த நிலையில் தளர்ந்து காணப்பட்டாள் மகாராணி.. தொண்டையில் பாய்ந்த வாளோடு தளபதியின் சடலம் சந்தனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.

மந்திரி பிரதானிகள் அமர்ந்திருந்தனர். மக்களும் திரண்டிருந்தனர்..! அத்தனை பேர் முகத்திலும் ஆச்சரியம், கேள்விக்குறி..!

தம் சீடர்கள் பல்லக்கு சுமந்து வர, பாணிணி முனிவர் வருகை தந்தார். ஆசனத்தில் அமராமல் அங்கிருந்த திண்டில் கால் நீட்டி ஒருக்களித்து சயனித்தார். அவரிடம் மட்டும் குழப்பமில்லாத அமைதி தவழ்ந்தது. கந்தவேளின் உடை தரித்த நிலையில் அணிமா காணப்பட்டாள். அவளிடம் ஆயாசம் இருந்தது..!

வேந்தன் சேரலாதன் பெரியவர்களிடம் ஆசி பெற்றபின் பேசலானான்.

முதலில் சபையை விளித்தான்..

“ நானறிந்த ஒரு சதியை ஊரறிய அம்பலப்படுத்த வேண்டியது என் கடமையாகிறது..! ஒரு தர்ம பத்தினியின் பெயருக்கு களங்கம் விளைவித்த சதியது..! அதற்காகவே இந்த சபை கூட்டப்படுகிறது..! இதில் யாருக்கேனும் சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்..! ”

அரண்மனை வைத்தியர் சற்றுத் தாமதமாக உள்ளே நுழைந்தார்.. “ மன்னா, மகாராணிக்கு என்ன? ” என்று பதறினார்..!

“ நீங்கள் பக்கத்தில் வந்து பாருங்கள் வைத்தியரே..! ” என்றார் மன்னர்.

பக்கத்தில் வந்தவர் அரைகுறை மயக்கத்திலிருந்த மகாராணியின் உள்ளங்கையைப் பிரித்தார்.!

நிமிர்ந்தார்..!

“ மன்னவா ! இவள் மகாராணியே அல்ல ! மகாராணியின் உள்ளங்கை புத்தி ரேகை மேல் நோக்கிச் சென்றிருக்கும்..! இவள் ரேகை பின்னிப் பிணைந்து போகிறது..! தன் புத்தியை அழிவு வேலைக்குப் பயன்படுத்தும் இவள் யார்? ”

கூட்டம் “ஆ” என்று பிரமித்தது..

“ நீங்கள் சரியாகத்தான் சொன்னீர் வைத்தியரே.. இதே சந்தேகம்தான் ராஜ காளியம்மன் பூசாரிக்கும் ஏற்பட்டது..! அவர் உடனே எங்கள் ஜாதகங்களை ஆராய்ந்தார்.. மகாராணி உயிருடன் இல்லை என்பதை கண்டுகொண்டார்..! மகாராணி இடத்தில் சதிகாரி என்பதை அறிந்து பாணிணி முனிவருக்கு சங்கேதச் செய்தி அனுப்பி விட்டார்.. மகாராணியின் மரணத்தால் கோயில் கும்பாபிஷேகம் தள்ளிப்போனது..! ”

“ தலை கிறுகிறுக்கிறது மன்னவா.. ” என்றார் வைத்தியர். “எங்கள் செவி கேட்பது உண்மைதானா? தளபதியார் தங்கள் தந்தை உயிரை பலமுறை காத்தவர்.. இவர் இந்நிலைக்கு ஆளானது எப்படி?? ”

“அந்தப் பெண்ணை பேசச் சொல் மன்னா ” என்றார் பாணிணி முனிவர்.!

மன்னர் தலை வணங்கினார். ஒரு பணிப்பெண்ணை அழைத்தார். “ பெண்ணே, இந்தப் பெண் முணுமுணுப்பதை, உணர்ச்சி மாறாமல் உரத்த குரலில் அனைவரும் கேட்கக் கூறு” என்று ஆணை பிறப்பித்தார்..!

விசாரணை ஆரம்பித்தது. எண் பேராயத்தவருள் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“ யார் நீ? ! ”

“ நான். .நான்.. ”

அவள் மௌனத்தைத் தாள முடியாமல் மன்னன் குறுக்கிட்டான்.

“ ஆற்றிலாடும் மான்..! அது நீதான்..! என் தேவி நடையில் கம்பீரமிருக்கும்..! உன் நடையிலிருப்பது போல் மான் துள்ளல் இராது..! மூலிகைப் பரல் கொண்ட சிலம்பு, ஆற்று நீரின் சலசலப்பை சப்திக்கிறது..! உன் பெயரென்ன ஆற்று மானே ? சாகப் போகும் நேரத்திலாவது உண்மையைச் சொல்..! என் தேவியின் மறைவைத் தாங்கிய என் மனம், அது நடந்த விதத்தை எண்ணி என்னைத் தின்று கொண்டிருக்கிறது..! உன்னால் உத்தமியான அவள் பெயர் களங்கமாகியிருக்கிறது. அதைப் போக்கி விடு..! உன்னை உயிரோடு வைத்திருப்பது அதற்காகத்தான்....! ”

“ ம... மன்னா..! நான் காங்கேய தேசத்து ராஜ நர்த்தகி.. மாலி..! உங்கள் தளபதியின் ஆசை நாயகி..! ”

“ என் நாயகியை என்ன செய்தாய்? ” மன்னன் உறுமினான்..

“சூழ்ச்சியெல்லாம் தளபதியுடையது..! கருவிதான் நான் மன்னா..! உங்கள் தந்தை இறந்த பிறகு நீங்கள் அரசரானீர். ஆனால் அரசனாகும் தகுதி உங்களை விட தனக்குத்தான் அதிகமென்று நினைத்தார் உங்கள் தளபதி..! ஆனால் என்ன செய்வது? மரபை மாற்ற இயலாதே? உங்களைத் தன் கைப்பாவையாக்க முயன்றார்.. நீங்கள் சிக்கவில்லை..! மக்களின் அபிமானத்தை அதி விரைவாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டீர்..! அதனால் உங்களை நேரிடையாக வெல்ல முடியாமல் சதி செய்து கொல்ல முயன்றார்..! அப்போதுதான் நான் அறிமுகமானேன்.. எனக்கும் மகாராணிக்கும் உள்ள உருவ ஒற்றுமை அவரைச் சிந்திக்க வைத்தது..!

தளபதிக்கும் நற்பெயர், மரியாதை, செல்வாக்கு எல்லாம் உண்டு. தனக்குக் களங்கம் ஏற்படாமல் உங்களைக் களைய நினைத்தார்.. தளபதியின் காவல் இல்லாத இடம் அந்தப்புரம்தான்.. அங்கு வைத்தே உங்கள் கதையை முடிக்க நினைத்தார்... ”

மெதுவாக அவள் தளர்ந்தாள்.

“ சொல்..! இதற்காக மகாராணியைக் கொல்ல சதி செய்தீர்கள்..! இந்தப் பெண் அணிமா அதைத் தடுத்து விட்டாள்..! ”

“ ஆம் மன்னா..! மணிமாறனைக் கொண்டு அந்தச் சதியை நிகழ்த்த முயற்சித்தார் தளபதி. மணிமாறனுக்கு சூழ்ச்சி தெரியாது..! தளபதி உரைத்ததை அவர் நம்பினார்..! அந்தப்புரத்தில் சம்பங்கி மணம் தவழ்ந்ததும் நினைத்தபடி நடக்கிறது என்று நிம்மதியாக நகர்ந்தனர் மணிமாறனும் தளபதியும்..! ஆனால் அந்த சதி தோற்றதும், அது தளபதிக்கு முதலில் தெரிந்ததும் தாங்கள் அறிந்ததே..! காற்றிலும் கடுகிச் சென்று மணிமாறனின் இல்லத்தை அடைந்தார் தளபதி. மணிமாறனின் இல்லக்கிழத்தியை கொன்றார். அழுது சப்தமிடாதிருக்க குழந்தையைக் கொன்றார்.. மலையுச்சி முருகன் கோயிலிலிருந்த மணிமாறனை மேலிருந்து உருட்டிக் கொன்றார். அது தற்காலிகத் தோல்விதான்..!

அதன் பிறகு நானும் என் தோழியும் எங்கள் சாகசத்தால், குறி சொல்லும் குறத்தி போல் மகாராணியின் அந்தப்புரத்தில் நுழைந்தோம். குறி சொல்வதைப் போல நடந்த சதியை புட்டு புட்டு வைத்தோம். சதிகாரர்களைப் பற்றி தனிமையில் தெரிவிப்பதாக மகாராணியிடம் உரைத்தோம். மகாராணி அசந்த நேரம் அவளைத் தாக்கி மயக்கமடையச் செய்தேன். மகாராணியாக நானிருக்க, குறத்தியாக என் தோழியால் தாங்கப்பட்டு வெளியேறினாள் மகாராணி. யார் நீங்கள் என்று முரட்டுத்தனமாக வினவிகொண்டே அங்கு வந்த தளபதி என் தோழிக்குச் சங்கடம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்.

மகாராணியை தாஹிணி பீடித்தது என்று வதந்தியைப் பரப்பி விட்டு காங்கேயம் ஏகினாள் என் தோழி..!

தன்னை நம்பியிருந்த உங்கள் ராஜ்ஜியத்தின் மகாராணியை சித்திரவதை செய்து இழுத்துக் கொண்டு போனார் தளபதி.

காராக்கிரகத்தில் ஏற்கெனவே இரண்டு பெண் கைதிகள் இருந்தனர். அவர்களில் ஒருத்தியைக் கொன்று அந்த இடத்தில் மகாராணியைச் சிறை வைத்தார்.

நான் மகாராணியாக அந்தப்புரம் வாழ்ந்தேன். நான் போலி என்பது தெரிந்து விடாதிருக்க பழைய விசுவாசமான பணியாளர்களை அந்தப்புரம் விட்டு நீக்கினேன்..

காசி யாத்திரை முடித்து வந்த கீர்த்திவதனாவின் தாய்க்கிழவி..! முதியவள்தானே, என்ன கண்டுபிடித்து விடப் போகிறாள் என்று அலட்சியமாக இருந்தேன்..! எனக்கு மஞ்சள் தேய்த்தவள், யார் நீ என்றாள்..! அவள் தலையை தடாகத்து நீரில் அமிழ்த்திக் கொன்றேன்..!

அன்றைக்கு பெண் கைதிகளுக்கு ராஜ தண்டனை நிறைவேற்றும் நாள்..! கருப்புத் துணியால் முழுதும் மூடி இரண்டு பெண்கள் உங்கள் முன் நின்றனர். அதில் ஒருத்தி உங்கள் மகாராணி..! அரைகுறை மயக்கத்திலிருந்த மகாராணி..! ”

மாலி கடகடவென்று சிரித்தாள். மன்னன் முகம் இறுகினான்.

“ பெண் கைதி ஒருத்தி முகத்தில், ஒரு பாதியை ஒப்பனை செய்திருந்தோம். உங்கள் கவனத்தைக் கவர நான் மாடத்தில் அலங்காரப் பதுமையாய் நின்றிருந்தேன்..! நீங்கள் என்னதான் அரசர் என்றாலும் இளவயதினர் அல்லவா?

தளபதி முதல் பெண்ணின் வலது பாதி முகத்தைக் காட்டினார். நீங்கள் பார்த்தீர்கள். நான் மாடத்தில் அப்போது வலது மூலையில் நின்றிருந்தேன்.! பிறகு நடந்து போனேன்..! நீங்கள் தலை திருப்பிப் பார்த்தீர்கள்..! அந்த கணப்பொழுதில் மயக்கத்திலிருந்த மகாராணியைத் தன் காவலர்களிடம் ஒப்படைத்தார் தளபதி.. நான் பிறகு இடது மூலைக்கு வந்து உங்களைப் பரிகசித்தேன்.. தளபதி முதலில் காட்டிய பெண்ணின் ஒப்பனை செய்யப்பட்ட இடது பாதி முகத்தைக் காட்டினார்.! நீங்கள் இரண்டு பெண்களின் முகத்தைப் பார்த்த பிரமையை ஏற்படுத்தினார்..! உங்கள் முன், உங்கள் மகாராணி கொதிக்கக் கொதிக்க சுண்ணாம்புக் காளவாயில் வீசியெறியப்பட்டார்..!

அனுபவம் மிகுந்த தளபதியின் சதி இது..! எப்படி இருக்கிறது? ”

அரசன் எதுவும் பேசவில்லை..! அவள் மூச்சுத் திணறினாள். வைத்தியர் சில மூலிகைகளை அவள் வாயிலிட்டார்..! குவளையைச் சரித்து தண்ணீர் ஊற்றினார்..!

மகாராணி இறந்த செய்தியறிந்து சபை சோகத்தில் ஆழ்ந்தது.

மந்திரி எழுந்தார். “ இவளைக் கண்டதுண்டமாக வெட்ட வேண்டும் மன்னா..! ”

வேறு சிலரும் அதை வழி மொழிந்தனர்..

“ வெட்ட வேண்டுமென்றால் அதை முன்பே செய்திருப்பேன்.. அம்பலத்துக்கு வர வேண்டுமென்பதால் பொறுத்திருந்தேன். சதி இன்னமும் முடியவில்லை மந்திரியாரே..! என்னைக் கொல்லச் செய்த சதியில்தான் இவள் சிக்கினாள்..! ”

மாலி தொடர்ந்தாள்.

“ அன்று ராஜகாளியம்மன் கோயில் சென்றேன்.. பூசாரி என்னை அடையாளம் காணாதிருக்க, தூண்டாமணி விளக்கை ஊதி அணைத்தேன். அதுதான் நான் செய்த தவறு..! கெட்ட நிமித்தமாக அதைக் கொண்ட பூசாரி தனது பாணியில் முயன்று, மகாராணி உயிருடன் இல்லை என்பதை யூகித்துக்கொண்டார். முன்பெல்லாம் நானும் தளபதியும் சண்முகா நதி தீரத்தில் சந்தித்துக் கொள்வோம்.. அங்குதான் பூசாரியின் இல்லம் இருந்தது. இதை வைத்து ஏதோ விடுகதையை கற்பித்து பாணிணி முனிவருக்குத் தெரிவித்து விட்டார்..!

நான் தளபதியிடம் பல முறை சொன்னேன், அணிமாவையும் பூசாரியையும் கொன்று விடும்படி..! சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்றார் தளபதி.. நாங்கள் அந்தப்புரத்தை அடுத்த காட்டில் சந்தித்துக் கொள்வோம்..! பூசாரி அந்நிய தேசம் சென்று விட்டாராம். அணிமா பாணிணி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்து விட்டாள்..! ”

வேந்தன் சேரலாதன் சிரித்தான் கசப்பாக.. “ பேதைப் பெண்ணே, அணிமா பாணிணி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் புகவில்லை. கந்தவேளாக உருமாறி உங்கள் கண்களில் மண்ணைத் தூவி அனைத்தையும் கண்டுபிடித்தாள். என்னையும் எச்சரித்தாள்..! உனக்கொன்று தெரியுமா? தளபதி உனக்கு வாக்களித்தபடி உன்னை மகாராணியாக்கியிருக்க மாட்டார். நீ என்னைக் கொன்றதும் முறைகேடான காமத்தினால் மகாராணியே தன் மணாளனைக் கொன்றாள் என்று கதை திரித்து உன்னையும் கொன்றிருப்பார்.. தளபதி எறிந்த வாளை அவருக்கே திருப்பி விட்டேன்..! அவர் இழைத்த துரோகம், மரணமாக அவர் தொண்டையில் இறங்கி விட்டது..! ”

மாலி இதைக் காதால் கேட்டாள்; அழக்கூட தெம்பில்லை.. கருநீலமாக மாறி விட்டது உடல்.. !

விழுந்தாள்..! எழவில்லை..!

ஒரு வருடம் கழிந்தது..

மன்னர் மதுரமொழிச் சேரலாதர் மக்களின் மன்னராக முழு வீச்சில் வலம் வந்தார். அவருடைய தேவியின் இழப்பு அனுபவ அறிவாக, அரசியலில் விளங்காதவற்றையும் விளக்கியது..!

ராஜகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்காக நாள் குறிக்கப்பட்டது. அதற்கு முன் மகாராணியைத் தேட வேண்டிய அவசியம் உண்டானது..

“ அகலாத வகையில் நெற்றித் திலகம் கெட்டியாக இருக்கிற அணங்காகப் பாருங்கள்” என்று மந்திரி வேண்டியபோது பழைய ஞாபகத்தில் சிரித்து விட்டார், அங்கிருந்த வைத்தியர்.

சிரிப்பின் பொருள் அரசருக்குப் புரிந்திருந்தது....!

அரசர் கந்தவேளை வரச் செய்தார்..

பெரியவர்கள் முன்னிலையில் மங்கல மேடையில் கந்தவேள் அணிமாவின் கைப்பிடித்து மன்னரின் கரத்தோடு பொருத்தினார். மங்கள வாத்தியங்கள் முழங்கின. அணிமா தன் காந்தக்கடிகையை ஓரக்கண்ணால் பார்த்தாள்..

சரியான முகூர்த்தம்தான்..! ! !

சுபம்
....................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (19-Nov-15, 10:52 am)
பார்வை : 305

மேலே