தேவதைகள் தூங்குகிறார்கள் - பாகம் 8 - சந்தோஷ்
சென்னையில் ஓர் இரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தான் விஜி. மேலாடைகள் அவிழ்க்கப்பட்டு .. உள்ளாடையோடு... . இரத்த ரணங்களோடு.. முகமும் வீங்கி.. உடல் மொத்தமும் வீங்கிய நிலையிலும் அவன் உடல் செல்கள் ஒவ்வொன்றும் உச்சரித்துக்கொண்டிருந்தது.. விஷாந்தினி.. விஷாந்தினி... விஷாந்தினி...
தன்னை நம்பியிருந்த காதலியை காப்பாற்ற முடியாத குற்ற உணர்வோடு.... பிரிவின் வேதனை... நடக்கும் சோதனை.. மனமெங்கும் வலி... தன் உடலெங்கும் ரணம் அவன் பாழ்வெளியெங்கும் விஷாந்தினி முகம் யாவற்றையும் மீறி.. விஜி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
விஜி எதையும் நுணுக்கமாக சிந்தித்து தீர்வு காண்பதில் வல்லவனே. விஜியின் யூகங்கள் எப்போதும் 95 % சரியாகவே இருக்கும்....
”விஷாந்தினியை ஒரு நாள் ஐஸ் கிரீம் கடையில பார்த்தாரே..? அவர் உண்மையில விஷாந்தினி சித்தப்பாவோட நண்பர்தானா? அந்த நேரத்தில அந்த ஆளை பார்த்து .. விஷாந்தினி ஏன் அவ்வளவு பதட்டமா இருந்தா...? சித்தப்பாவுக்கும் இவ அப்பாவுக்கும் சின்ன பிரச்சினையா?.. பெரிய பிரச்சினையா....? யெஸ்.....இப்படித்தான் இருக்கும் சித்தாப்பாவுக்கும் இவ அப்பாவுக்கும் சொத்து பிரச்சினையா இருக்கனும். CYANIDE கம்பெனி ஒனருக்கும் அவ சித்தாப்பாவுக்கும் எதாவது லிங்க இருக்கனும்... CYANIDE கம்பெனிக்காரன் பேருகூட என்னமோ சொன்னாளே... !?? ஆங்....சந்தோஷ் குமார்.... ! அப்போ. .., விஷாந்தினியை கடத்தி.. காரியம் சாதிக்கலாமுன்னு சித்தாப்பாக்காரனும்.. CYANIDE காரனும் பிளான் பண்ணியிருப்பாங்க... வேவு பார்க்கதான்..சித்தப்பா நண்பருன்னு சொல்லி அந்த ஆள் அன்னிக்கு வந்திருக்கான்... நான் கூட இருப்பத பார்த்து, நான் யாருன்னு தெரிஞ்சிக்க விஷாகிட்ட கேட்டு இருப்பான்.
என் தேவதை விஷாந்தினி..இப்படியொரு பிரச்சினை இருக்குன்னு ஏன் என்கிட்ட சொல்லாம விட்டா.. ? . என்கிட்ட இதெல்லாம் எப்படி சொல்றதுன்னு... யோசிச்சி இருப்பா..! பாவம்.. ! நானா அத கேட்டு இருக்கனும்.. !
பிரச்சினை தீர்க்கதான் காதலிக்கிறான்னு நான் தப்பா நினைச்சிடுவோன்னு சொல்ல முடியாம தவிச்சி இருப்பா... ம்ம் என்னை பற்றி அவகிட்ட சொல்ல தயங்கியது போல..,
சொல்லியிருக்கலாம்.. அதுக்குள்ள..... ச்சே....இப்படியொரு பிரச்சினை வந்திடுச்சே.... !.. இந்த போலீஸ் நாய்ங்க என்னை எப்படி மோப்பம் பிடிச்சானுங்க.. .?. விஷா க்கு என்ன ஆச்சின்னு தெரியலேயே....பக்கத்துல தானே இருந்தா... யாரு கடத்திட்டுபோனா....? “ விஜிக்குள் எழுந்த கேள்விகள் எல்லாம் அவனுக்குள் தீர்வை தேடி எரிந்துக்கொண்டிருந்தன காதலோடு..... !
* விஜி அடைக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே...........
”சென்னையில் கியூ பிரிவு போலீசார் அதிரடி ! . கைது செய்யப்பட்டவர் நக்சலைட் தீவிரவாதியா ? ” காலை நாளிதழ் ஒன்றின் தலைப்புச் செய்தியை சத்தமாக படித்தார் காவலர் வெங்கட்.
சத்தமாக சிரித்தான் விஜி... “ ஹா ஹா ஹா அட... கே...ப்..... . நான் தீவிரவாதியா..? போராளி டா.. போராளி.. ! அன்னிய முதலாளிகளின் காலை நக்கிச்சுவைக்கும் உரிமைகளைச் சுரண்டும் அரசாங்கத்து பேடிகளே. ஒழிக..! போலீஸ் கூலிகளே !ஒழிக...! “ சிரித்தான்.. பலமாக சிரித்தான்.. சிவப்பு எச்சில்கள் ஒழக சிரித்தான்.
சிரித்த விஜியின் உதட்டில் விழந்தது அறைக்குள் ஆவேசமாய் ஒடிவந்த கியூ பிரிவு போலீஸ் அதிகாரியின் உதை.. உதடுக் கிழிந்து வெடித்து சீறியது சிவப்பு இரத்தம்.
“நேத்து ராத்திரியில இருந்து அடிச்சி துவைச்சாச்சி பிளடி ராஸ்கல்..உண்மையை சொல்றான்னு சொன்னா....கோஷம் போடுறீயோ...? தொலைச்சிடுவேன்.. தொலைச்சி... ! சர்வசாதாரணமா நீ ஜனங்களோட ஜனமா இருந்தா.. நாங்க கண்டுப்பிடிக்க மாட்டோமுன்னு நினைச்சியா.. ?போலீஸ்காரங்க என்ன மசிருப்புடுங்குற வேலையில வெட்டியா இருப்பானுங்க.. கண்டு பிடிக்கமாட்டங்கன்னு நினைச்சியா... உண்மைய சொல்லு.... உன் கூட்டம் எங்க இருக்கு.? யாரு யாரெல்லாம் இருக்காங்க.?. போன மாசம் ஊத்தங்கரை மாந்தோப்புல என்ன பயிற்சி முகாம் நடந்துச்சி.. ?நீ எதுக்கு அங்க போன.. ? சொல்லுடா.... “ சொல்லு சொல்லு என விஜியை கையிலிருக்கும் தடித்த இரும்புக் கம்பியால் அடித்து அடித்து கொன்றெடுத்தார் போலீஸ் அதிகாரி வேளாங்கண்ணி..
இம்முறை பலமாக சிரித்தான் விஜி... “ அதான் மசிரப்புடுங்கிட்டு வெட்டியாவா இருக்கோமுன்னு கேட்டில .. மயிரப்புடுங்காம வெட்டியா இல்லாம கண்டுப்பிடி.. போ... போ...ஐம் இன் லவ் மூட்.... ஐ ம் இன் லவ் பீல் போலீஸ் சார்.............என்னோட வி....வி...வி.............” பேரைச் உச்சரிக்க வந்தவன்.. உள்ளிழுத்து எச்சிலில் நனைத்து.. இதயத்தில் திணித்து ஒளித்துக்கொண்டான். விஷாந்தினி பெயரையும்..அவளையும்..
“என்ன வி.. வி.. வி...... யாரு அது..............? “
“ ம்ம்ம் வி.கே.ராமசாமி.. சூப்பர் ஆக்டர் பா. பாவம் செத்துட்டார். அக்னி நட்சத்திரம் படத்துல.....” கிண்டலாக சமாளித்து சிரித்து குலுங்கிய விஜியின் வயிற்றில்.. தடித்த இரும்பு லாடம்.. பதம் பார்த்தது.... அடித்த வேகத்தில் இடுப்பு விலா எலும்பு துடிதுடிக்க... அடிவயிறு கிழிக்கப்பட்ட மெளனச் சத்தம் கேட்க சுருண்டு மயங்கத் தொடங்கினான் விஜி...
காவலர் வெங்கட்.. “ சார்... போதும்.. இனி அடிச்சா செத்திடுவான்.....”
இல்ல வெங்கட்.. இவன் கண்ண பாருங்களேன்.. சுருண்டாலும் மிரண்ட மாதிரியா இருக்கான்.?. இவன் நக்சலைட்டா.. ?மாவோயிஸ்டான்னு ?தெரியல.....இல்ல வெறும் இன்பார்மரான்னும் தெரியல.. ச்சே....”
”மாவோயிஸ்டுன்னா என்ன .. நக்சலைட்டான்னா என்ன சார்...”
இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல வெங்கட்...பொதுவுடைமைச் சித்தாந்தம் கொள்கைதான்.. கம்யூனிஸம் தான்.. .. ஆனா முரட்டுக்கம்யூனிஸம்.... என்ன கம்யூனிஸ்ட் போராடுவாங்க.. இவனுங்க.. போரிடுவாங்க.. அது பெரிய விஷயம்.. .இப்போ டீடெயிலா சொல்ல முடியாது.. இவன் மாதிரி ஆளுங்கலாம் சின்ன வயசுலயே கம்யூனிசம் படிச்சிட்டும் மாவோ லெனினை படிச்சிட்டும்.. ஒரு அசட்டு தைரியத்துல புரட்சி பண்றேன் பேர்வழின்னு...டி-ஷர்ட்ல சே குவேரா படத்தை போட்டு... திரிஞ்சி.. இப்படி எதாவது கிரிமினல் குரூப்ல மாட்டிப்பானுங்க..... “
”No.. சே.. Not in my t-shirt. He is my heart beat…..” மயங்கி சுருண்ட விஜிதான்....
“ பாருங்க வெங்கட்.. அடங்க மாட்டேன்னு புலம்புறான் .. பாருங்க..இவன.. அடிச்சி கிழிச்சாதான் என் ஆத்திரம் தீரும்.. “
” சார் சார் விடுங்க.. தெளியட்டும்.. அப்புறம் பார்ப்போம்.. இவன அரெஸ்ட் பண்ணுவதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு இவன் கூட இருந்தால.. அவ யாரு.... இன்பார்ம் எதாவது...?
“வெங்கட்..! அந்த CYANIDE .. கம்பெனியில பின் கேட் வழியாதான்.. பதட்டமா .. விஜியும்..அவளும் வெளியே வந்திருக்காங்க.... இத பார்த்த சாட்சி ஒருத்தர் இருக்கிறார்.. அப்புறம் சோழிங்கநல்லூர் காட்டுக்கு பக்கத்துல இருக்கும் கடைக்கும் இரண்டு பேரு வந்திருக்காங்க.. இவன் தண்ணி பாட்டில் வாங்கி திரும்பும்போது அவ காணலன்னு கத்தி கத்தி இவன் தேடினான்னும் அந்த கடைக்காரர் சாட்சி சொல்லி இருக்கார். இதெல்லாம் இன்னும் கூடுதலா விசாரிச்சி இன்னும் அரை மணி நேரத்தில் முழு தகவலும் சொல்வதா சொன்னார் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கோபி..! அதுக்கு அப்புறம்.... ரவுண்ட்ஸ் போன நாம. இவனை அரெஸ்ட் பண்ணினோம். ஆனா அந்த கம்பெனிக்கு எதுக்கு இரண்டு பேரும் போனாங்க.. ? அந்த பொண்ணு எங்க போனா..? நம்மள பார்த்து தப்பிச்சி ஒடினாளா ?
யெஸ்ஸ்....! காட் இட்..வெங்கட் .!! அந்த பொண்ணு காணாம போகும் போது இவன்.. விஷாந்தினின்னு பேரைச் சொல்லிதான் தேடி இருக்கான்..... சோ... , இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. வி..வி..வின்னு சொன்னால இவன்..?!!.,, அப்போ அவ இவனோட காதலியா.... ? ம்ம்ம் அப்போ அவளும் இந்த க்ரூப்பாதான் இருக்கும்....,ஒஹோ...!.. வி.. வி... வின்னா விஷாந்தினியா......? “
விஷாந்தினி............. !! விஷாந்தினி..........!
மயங்கியவனின் மூளையில் சுர்ரென ஏறியது வேளாங்கண்ணி உச்சரித்த விஷாந்தினியின் பெயர்....தெளிய முயன்றும் வலியில் தெளியமுடியாமல் விஷாந்தினியின் நினைவுக்குள் மூழ்கத்தொடங்கியது அவனுக்குள் முழித்திருந்த மூளை. ஒரு புரட்சிக்காரனின் மனதில் காதலிருந்தால்...முத்தமிடும் நாழிகையில் துப்பாக்கி வெட்கப் புன்னகை வெடிக்கும்... வெடி சத்தத்திலும் காதில் காதல் மெட்டிசைக்கும்... சிலபோது துப்பாக்கியில் தோட்டாக்கள் பூக்களாகும்.. பூக்களும் தோட்டாக்களாகும்..
விஜியின் ஆழ்மனம்.. விஷாந்தியுடன் நாற்புறமும் மலையோங்கி நிற்கும் மலைப்பிரதேசத்தின் இளமை நதி ஒடும் காதல கானகச் சாலையில் கைகோர்த்து செல்கிறது. விஜியின் இடது கரமும் விஷாந்தியின் வலது கரமும் தொட்டு உரசி.. உரசித்தொட்டு.. சுண்டு விரல் முளைத்து... மோதிரவிரல் சூடேற்றி , நடுவிரல் அத்துமீறி.. பெருவிரல் சிலிர்ப்பூட்டி.. ஆட்காட்டி விரல் இழுத்து அணைத்து... காற்றுக்கு தடைச்சொல்லி... தென்றல் புகும் இடைவெளியும் பெரும் பாவமென்று.. கூடி குலாவி ,ஜோடி சாரப்பாம்புகள் கலவிக்கொள்ளும் பேரின்பத்தையும் மீறும் இன்பமயமாக பிணைந்து இணைந்து பிசைந்து உருகி, காதல் உளறி.... இருவரின் கால்களும் வெள்ளி பனிப்போர்த்திய கருப்புச்சாலைக்கு வலிக்கொடுக்காமல் தொட்டுத்தடவி நடக்கிறது.
மார்கழியின் அதிகாலை குளிரில் காதல் ஜோடிகள் இணைந்தால் சித்திரையின் நண்பகல் அனல்தானே....! அவர்களுக்கு..!! குளிரில் நடுங்கிய இதழோடு... “ வி...........வி..........வி.... வி....ஸ்ஸ்ஸ் ஜி “ விஷாந்தினி ஓரவிழி பார்வை சூடேற்ற... மெல்லியத் தென்றல் வீச. கூந்தல் கற்றையிலிருந்து இரு நீளமுடி.. வள்ளுவனின் இருவரி காமத்துப்பால் குறளாய் விஜியின் கழுத்தில் காதல் கோடிட.....விஜி உணரத்தொடங்கினான் இருதயத்தின் ஆழத்திலிருந்து மிருதங்க இசை ஒலிக்கும் அதிர்வாய்......... அதிர்வாய்.. அதிக அதிர்வாய்..மாறி ..மிக அதிக அதிர்வாய்... மாறி மிருதங்க ஒலி..மாறி இடியொலி என..........
” நங்” என கேட்டது விஜியின் இதயத்தில்... விஜி திடுக்கென கண்முழித்துப்பார்க்க....
நெஞ்சில் எட்டியுதைத்து தட்டி எழுப்பிக்கொண்டிருந்தார் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி....... ”என்ன இன்னுமா மயக்கம்....? அடிச்சே சாகடிச்சிடுவேன்.... ஜாக்கிரதை... !”
தன்னுடல் ஒத்துழைக்கா விட்டாலும்.... போராட்ட மனப்பான்மையுள்ள புரட்சிக்காரன் விஜி.. தன்னை காதல் நிலையிலிருந்து போராளி நிலைக்கு மாற்றியவனாக... தட்டுதடுமாறினாலும் கம்பீரமாக ஏறிட்டு பார்த்தான்.. “ என்னய்யா உனக்கு வேணும்...? வா அடி....... அடிச்சிக்கோ...ஒருத்தன அடிச்சா ....புரட்சி ஒயாது..எங்கள் தோழர்கள் ஒவ்வொருத்தனுக்கும் விதைச்சி வச்சிருக்கோம்........வெடிச்சி கிளம்பும்...... ஜாக்கிரதை...”
“புரட்சியாம் மண்ணாங்கட்டி..... அடச்சீ மூடு டா.... விஷாந்தினி யாரு. ?.
” தெரியாது.. ”
”அவளுக்கும் உனக்கும் என்ன தொடர்பு....? அவ கூட எதுக்கு CYANIDE கம்பெனிக்கு போன ? ”
” தெரியாது.”
”உங்களுக்குள்ள எத்தன நாளா பழக்கம்..? என்ன பிரச்சினை.....?”
”தெரியாது ”
”அவ அப்பாவை நீதானே ஆள் வச்சி லாரி ஏத்தி கொல்லவச்ச...? ”.
” என்னது.. ?விஷாந்தினி அப்பா செத்தது விபத்து இல்ல .. கொலையா ? என மனதுக்குள் அதிர்ந்த விஜி.....
” தெரியாது “ என பதில் சொல்ல...
. ”உன் போன்ல திருடின்னு இருக்கே..அது யாரு...? .”
” அவ ஒரு திருடி”
இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி இந்த ‘ தெரியாது’ களை கேட்டு மிகுந்த சினத்திற்கு உள்ளானார்.. என்றாலும் விஜியை வைத்துதான்.. போராளி குழுக்களை கண்டறிய முடியும் என்பதால் அதிக சித்ரவதைக்கு உள்ளாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்க வேண்டாமென... மேலிடம் தகவல் சொல்லியதால்... வேறுவழியின்றி கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டே உண்மை வரவழைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார்.
” உன் போராளிக்குழு தலைவன் யாரு.. ? ”
சே.குவேரா...
”டேய் டேய்.... மரியாதையா உண்மையைச் சொல்லு..”
”சரி.. திரு. சே.குவேரா.”
”அவர் செத்து போயிட்டாரு.. நக்கலா?”
”இல்ல ஒவ்வொரு தோழர்களுக்குள்ளயும் வாழ்ந்துட்டு இருக்கார். ”
”சொல்லித்தொலை.. உங்க தலைமை எங்க இருக்கு.?”
”தலையில ”
“என்ன உளற ? “
”நீ என்ன கேட்குற.. ? ”
”உங்க திட்டம்தான் என்ன..? ”
”குட் .. நல்ல கேள்வி. உழைக்கிறவன்ன ஆட்சியில அமர்த்தனும். சுரண்டுறவன்ன தூக்குல போடணும். .. சிம்பிள்.. தட்ஸ் ஆல்...”
”அதுக்காக என்ன பண்ணப்போறீங்க “
”என்ன வேணும்னாலும்..”
”உள்நாட்டு போர் கூடவா...?”
தேவைப்பட்டா.... இருக்கலாம்.
”உனக்கு பிடிச்ச கட்சி எது ?”
”அது இந்தியாவுல இல்ல. ?
”அடேய்.. நீ இருக்கிற கட்சி எது?”
”இல்லாதவங்க கட்சி.”
என்ன இருந்தும் ...போராட்டக்குணமுடைய நெஞ்சழுத்தமுடைய விஜி எதற்கும் அசந்துவிடுவது போலில்லை.. வேறுவழியின்றி வேளாங்கண்ணி நாற்காலியை எட்டியுதைத்து புகைப்பிடிக்க சென்றுவிட, தனிமையில் விடுப்பட்டான் விஜி... சிறையெங்கும் வானமாய் விரிந்தாள் விஷாந்தினி.........வானமெங்கும் சிறகாய் முளைத்து பறவையாய் பறந்தாள் விஷாந்தினி
.
காதல் மந்திரமாய்
காமம் எந்திரமாய்
கனவு முழுவதுமாய்
நினைவுச் சித்திரமாய்
அவளே கடவுளாய்..!!
நிமிடப் பிரிவும்
மாபெரும் துயரமாய்
தேடும் பார்வையெங்கும்
பாவையவளின் முகமாய்...
உயிர் மூச்செங்கும்
ஆடும் தாண்டவமாய்
அவளே... அவளே...
என்ன ஆனாள் விஷாந்தினி ? .. எங்கு போனாள் விஷாந்தினி.. ?
தேவதை உறங்குகிறாளா.. உயிரோடா... உயிரற்றா ?
(தொடரும்)
-- இரா.சந்தோஷ் குமார்.
( *தகவல் : இத் தொடரின் அடுத்த பாகத்தை எழுத விரும்புவோர் தோழர் கவிஜியை தொடர்பு கொள்ளவும்.)