ஸ்கைஹென் - நகைச்சுவை குட்டிக்கதை
........................................................................................................................................................
“ ஒரு வான்கோழி வாங்கிட்டு வரலாண்டா.. ” நச்சரித்த சோமுவுடன் கடைத்தெரு போனான் பாலு. நாலைந்து கடைகள் ஏறி இறங்கியும் வான்கோழி கிடைக்கவில்லை.
“ சே..! திருவண்ணாமலை பின் தங்கிய மாவட்டம்கிறது சரியா இருக்கு..! ” சலித்துக் கொண்டான் சோமு.
அப்படி பின் தங்கிய மாவட்டமாக திருவண்ணாமலையை ஒரே முட்டில் ஒதுக்கி விட முடியாது என்பது போல வேலையத்த ஒரு ஜெர்மன்காரன் ஷாட்ஸ் மட்டும் அணிந்து, நெற்றி நிறைய திருநீறு பூசி, பறவைகளை விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் வான்கோழிகளும் இருந்தன.
“ எஸ், வாட் யூ வாண்ட் ? ” என்றான் அவர்கள் கடையை நெருங்கியதும்.
“ வான்கோழிக்கு இங்கிலீசுல என்னடா? ”
இந்த ஈ ஃபார் இங்கிலீஷ் ச ஃபார் சமயம் பார்த்து க ஃபார் கழுத்தை அ ஃபார் அறுத்தது.
அவ்வளவு சீக்கிரம் அறியாமையை ஒத்துக் கொள்ளாத பாலு சட்டென்று ஸ்கைஹென் என்றான்.
“ வீ வாண்ட் தட் ஸ்கைஹென்..! ”
“ யூ மீன் டர்க்கி? ”
“ என்னடா இம்சை, இவனுக்கு இங்கிலீசும் தெரியல? டர்க்கியாவது, டவலாவது? ” முணுமுணுத்த பாலு உரக்கக் கத்தினான், “ ஸ்கைஹென்..! ஸ்கைஹென்.. ”
கடைக்காரன் ஒன்றும் சொல்லாமல் ஒரு வான்கோழியைத் தூக்கிக் கொடுத்தான்.
“ டேய், எனக்கு வான்கோழி வேணாண்டா.. ” என்றான் சோமு.
பாலுவுக்குக் கொலைவெறி வந்தது. “ ஏண்டா, காலையிலேர்ந்து வான்கோழி வேணும்,, வான்கோழி வேணும்னு என்னையும் சேர்த்துகிட்டு லோ லோன்னு அலைய வச்சிட்டு இப்ப என்ன வேணாங்கிற? ”
“ ஐயையே..! எனக்கு வான்கோழி வேணாண்டா..! வான்கோழன்தான் வேணும்..! ”
“ யூ மீன் ஜென்ஸ்? ஸ்கைகாக்? கொக்கக்கோன்னு கூவுமே? ”
“ இல்லியே, இது கொலகொலகொலன்னு கத்தும்..! ”
ஒரு வழியாக ஆண் பறவையை தூக்கிக்கொண்டு, பெற்ற மகளுக்கு மாப்பிள்ளை நிச்சயித்த தந்தையாய் கொட்டிலுக்குப் போனபோது..
பெட்டை வான்கோழியைக் காணவில்லை...!
பதறித் தேடியபோது பக்கத்து வீட்டு பரமு வந்தான்.
“ உங்க வீட்டுப் பொண்ணு கட்டிய ரெக்கையோட எங்க பயல் கிட்ட ஒட்டிட்டா இல்லே..! ” காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான், என்னவோ இவன் கிட்ட வந்து ஒட்டிகிட்ட மாதிரி..!
எட்டி பார்த்தான் சோமு. ஆணின் ரெக்கைக்குள் அலகு நுழைத்து படுத்துக் கிடந்தது அது.
“ சரி, அது அங்கேயே இருக்கட்டும்... ” என்ற சோமு பாலுவை அழைத்தான்.. “ போய் இதுக்கு ஒரு ஜோடிய பிடிச்சுட்டு வந்துடலாம்டா..! ”
நச்சரிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.. பயல் தானாக ஜோடி தேடிக் கொள்ளும் வரை..!
...................................................................................................................................................................