சிறகில்லா தேவதை கீர்த்தி - கோபி சேகுவேரா

மறைத்து வைக்கும் எல்லாமே ஏதோ ஓர் அதிசயம் தான்... இந்த மூன்று ஆண்டுகளில் அலைந்து திரிந்து சேமித்த கொஞ்சமான நினைவுகளும், நிறைய அன்பும்...யாருக்குமே தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறேன்... அவள் பெயர் கீர்த்தி... நான் சொன்ன அந்த ரகசிய அதிசயம் கீர்த்தி தான்...

கீர்த்தி... ரொம்ப அழகாக பொண்ணு... கொஞ்சம் திமுரான பொண்ணும் கூட... பார்த்ததும் பிடிச்சிபோற முகம்... பார்க்க பார்க்க இன்னும் பார்க்க தூண்டும் கண்கள்... கொழுகொழு கன்னம்... உயிர் தாக்கும் உதடு... பின்னழகின் சற்று மேல் வரை கருமை நீர்வீழ்ச்சியாய் கூந்தல்... கவிதைக்கு நிகரான நடை... அவளது தோற்றமே ஒரு பேரரழகியின் சாயல்... அழகியல் குவியல்... கல்லூரியில் இவளுக்காக ஏங்கி ஏங்கி வீங்கி போகாத பயலுகளே கிடையாது... அப்படி ஒரு பொண்ணு...

எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு... நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது தான்... 'நீதானே என் பொன்வசந்தம்' படம் வந்தது... எங்களது விடுதியில் இப்பட பாடலெல்லாம் அமோக பிரபலம்... அதில் இளையராஜாவின் குரலில் 'வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே' பாடல் என் ஆன்மாவோடு மிகவும் நெருக்கம்... நான் முதன்முதலில் கீர்த்தியை பார்த்தபோது... என் மூளை நியூரான்களில் ஒலித்த பாடல் இதுதான்... இன்றுவரை இப்பாடல் அவளுக்காகவே இன்னும் ஒலிக்கிறது உயிரெங்கும்...

ஒரு மழைக்காலத்தில் தான் கீர்த்தியை பார்த்தேன்... கல்லூரி தொடங்கி ஒரு மாதம் இருக்கும் ஒரு மழைத்தூறல் போல தோன்றினாள்... அவளது ஒவ்வொரு செயலிலும் ஒரு குழந்தை தனமிருக்கும்... அது தான் அவளை இன்னும் என்னுடன் நெருக்கியது... வெள்ளை சுடிதாரில் தேவதை போல் காட்சியளித்தாள்...

அவளை இப்படியே பார்த்துக் கொண்டிருக்கனும் போல தோன்றியது... ஒரு சில கவிதைகளை எத்தனை முறை வாசித்தாலும் சுவை குறையவே குறையாது... எனக்கு அப்படித்தான் கீர்த்தியை பார்ப்பதும்... தினமொறு அழகாகவே என் கண்களுக்கு தெரிந்தாள்... இது என்ன..இந்த வயதின் பிரமையா என்றுகூட நினைத்திருக்கிறேன்... ஆனால் எல்லாப் பெண்களை போல் கீர்த்தியில்லை என்பது மட்டும் உண்மை... அவள் என்னை கடந்து செல்கையில்.... நான் தண்டவாளமாகவும் அவள் ரயில் பெட்டியாகவும் தெரிகிறாள்.... என்னை அப்படி பாடுபடுத்துகிறாள்... எத்தனை பேர் என் முன் நடந்தாலும் சரி.... அவள் எதிரில் போகும்போது மட்டும் இதயமெல்லாம் ராஜாவின் இசையோடு துடித்துடித்து கிடக்கும்...

தினமும் அவளை பார்ப்பதற்கே மதிய உணவு இடைவேளைகளில் அவளது வகுப்பறை பக்கம் செல்லுவேன்... அவள் தோழிகளோடு அரட்டையடித்துக் கொண்டும்... உணவருந்திக்கொண்டும் இருப்பாள்... இப்படியே ஆறு மாதங்கள் கடந்தது.. எங்கள் கல்லூரியில் முழுக்க முழுக்க முதலாம் ஆண்டு மாணவர்களால் நடத்தப்படும் அறிவியல் தின விழாவில்... அவளை இன்னும் நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... நிறைய தலைப்புகளில் நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும்... அன்று முழுவதும் அவளை பார்த்து ரசித்தேன்.... நான் அவள் பின் அலைவது அவளுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்... ஆனால் அவள் ஏதும் அலட்டிக்கொள்ளவில்லை... அவளிடன் ஏதோ ஒர் ஈர்ப்புவிசை இருக்கிறது... என்னை அப்படி புலம்பவிட்டாள்..

இரண்டாம் வருட தொடக்கத்தில்.. கீர்த்தி இன்னும் அழகாக காட்சியளித்தாள்... ஒரு ஓவியம் தன்னைத் தானே வரைந்துகொள்வதைப் போல... அவளது உடைகளை சரிசெய்து கொள்வாள்... அவளது தின செய்கைகளில் எந்த மாற்றமும் இல்லை... ஆனால் கொஞ்சம் தூரம் சென்றுவிட்டாள்.. நான் முதல் தளம் அவள் ஐந்தாம் தளம்... முதலாம் ஆண்டில் எல்லாத் துறையினரும் தரைத் தளத்தில் தான் இருப்போம்... நான் குடிசார் பொறியியல் படிக்கிறேன், கீர்த்தி கணினி பொறியியல் படிக்கிறாள்... இது தான் அவள் தூரம் செல்வதற்கு காரணம்..
சில தினங்கள் அவளை பார்க்காமலே கழிந்தன... கல்லூரியில் ஏதேனும் நிகழ்ச்சிகள் வந்தால்... எல்லாப் பெண்களும் புடவை கட்டுவது வழக்கம்... கல்லூரியின் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில்.. கீர்த்தியை முதன்முதலில் புடவையில் பார்த்தேன்.. அவளது நிறத்திற்கு சிகப்பு நிற புடவை... அவளது அழகை இன்னும் கூட்டியது..

இந்திய பெண்களுக்கு நிறைய சிரமங்கள் உள்ளன என எங்கோ படித்த நியாபகம் வந்தது... அது உண்மை தான் என அவள் நிமிடங்களுக்கு ஒரு முறை முந்தானை சரி செய்தபோது புரிந்தது.... இப்படியே அவளை பார்த்துக்கொண்டே சில பல எண்ணங்களை எனக்குள்ளே சொல்லிக்கொண்டே இருந்தேன்.. இரண்டாம் வருட கல்லூரி முடிந்தது.. விடுமுறை வந்தது... அவளை பற்றிய சிந்தனைகள் நிறைய வந்தது.. சீக்கிரமே கீர்த்தியை பார்க்க வேண்டுமென ஏங்கி கிடந்தேன்.. நிலவில்லாத வானம் போல் வெறிச்சோடி கிடந்தது எனது விடுமுறை நாட்கள்...

மூன்றாம் ஆண்டு கல்லூரி திறந்தது... முதல் நாளில் அவளை தேடாத இடமில்லை.. எங்கும் காணவில்லை மிகுந்த ஏமாற்றமாக பதினைந்து நாட்கள் கடந்தன... எடை குறைந்து... கொழுகொழு கன்னம் வற்றி... நடக்கவே முடியாமல் நடந்து வந்தாள்... என் உயிரை யாரோ வெளியே எடுத்து போட்டு நசுக்குவது போலிருந்தது.. கீர்த்திக்கு என்ன ஆச்சு??? என்று கல்லூரி முழுக்க இதே பேச்சுக்கள் தான் வந்தது... விடுமுறையில் அவளுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது என்று தெரிந்தது... அவள் மீண்டும் கல்லூரிக்கு வந்ததே போதுமென மனம் சொன்னது... அவளது உடல் தோற்றம் மாறியிருந்தது.. ஆனால் அவளது புன்னகைக்கு குறையில்லை... அவளை பார்ப்பதுமாகவே நாட்கள் கடந்து ஓட...

ஆண்டு விழாவில் அவ்வளவு கூட்டத்திலும் அவளை பார்த்தேன்... கடந்த இரண்டு ஆண்டுவிழாக்களிலும் அவள் கலந்துகொள்ளவில்லை.. இந்த ஆண்டு அவளின் தோழிகள் கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருப்பதாக தெரிந்தது.. அவளது மெல்லிய புன்னகையோடு விழாவை ரசித்துக்கொண்டிருந்தாள்.. நான் அவளை ரசித்தேன்.. இந்த மூன்று ஆண்டுகளில் அவள் என்னை திரும்பி பார்த்தாள் என்பதற்கு எந்த சாட்சியமும் என்னிடம் இல்லை... இந்த ஆண்டு விழாவில் என்னை பார்த்தாள்.. நான் பார்த்ததும் சட்டென்று அவள் திரும்பிவிட்டாள்... உடல் சிலிர்த்து.. உயிர் எகிறி விழுந்தது.. விழா மேடையில் அழகு பெண்னொருத்தி அமுத குரலால்.. இசைஞானியின் 'நீ பார்த்த பார்வைக்கு ஓர் நன்றி' பாடலை பாடிக்கொண்டிருந்தாள்... இந்த நேரத்தில்.. இந்த பாடல்.. எனக்கே எழுதி பாடியதை போல இருந்தது.. எப்போதும் என்னை பின்தொடர்வது ராஜா மட்டுமே என்று தோன்றியது..

மழையில் நனைந்துகொள்ளாமல் தப்பிவிடலாம் ஆனால் அதன் சத்தத்தை கேட்காமல் தப்பிவிட முடியாது.. அது போல தான் இசைஞானியின் இசையும்.. அவரது இசையை அனுபவிக்காமல் இருக்கலாம் ஆனால் கேட்காத ஆளில்லை.. நம் வாழ்வோடு கலந்துவிட்டார் இசைஞானி.. இந்த இசை ஆளுமையின் பாடல் மேலும் அவள்மேல் உள்ள நேசத்தை அதிகமாக்கியது.. இப்படியே மூன்றாம் ஆண்டு முடிந்தது...

விடுமுறைகள் முடிந்து கல்லூரி திறந்தது... இந்த நான்காவது ஆண்டிலும் அவளை பார்த்துக்கொண்டே நாட்கள் கழிந்தன... இப்போது கொஞ்சம் பயம் வர தொடங்கியது... அடுத்த வருடம் அவளை பார்க்க முடியாது. இந்த வருடத்தோடு படிப்பு முடிகிறது என அடிக்கடி தோன்றியது....

இதுவரை நான் கீர்த்தியிடம் பேசியது இல்லை... அவளுக்கு என் பெயர் தெரியுமா என்றுகூட தெரியவில்லை... ஆனால் அவளை எனக்கு மிகவும் பிடிக்கும்... அவளை காதலித்து கல்யாணம் பண்ணி... அந்த லட்சிய வாழ்க்கையை வாழ வேண்டுமென ஒரு நாளும் தோன்றியதேயில்லை... அவளை பிடிக்கும் அவ்வளவு தான்....

ஆனால் இந்த மூன்று ஆண்டுகள் அவளிடம் பேசமலே வீணடித்தற்கு ... பெரும் வருந்தம் என்னிடமிருந்தது... அவளிடம் நட்புக்கொள்ள தான் இத்தனை நாட்கள் இப்படி திரிந்தேன் என புரியாமலே இருந்தது... அவள் மீதான என் நேசத்தை அவளிடம் விரைவில் சொல்ல வேண்டுமென தோன்றியது... இதை அவள் எப்படி எடுத்துக்கொண்டாலும் எனக்கு சரி தான்... ஆனால் அவளிடம் கண்டிப்பாக பேச வேண்டும்... இந்த தயக்கத்தை தகர்த்தெறிய வேண்டும்... 'கீர்த்தி, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குமென' சொன்னால் போதும் என நினைத்துக் கொண்டிருந்த போது... சட்டென்று என்னை கடந்து சென்றாள்.. ஓர் அவசர மேகம் போல்... 'போய் பேசுடா பேசு' என்று உள்மனம் சொல்ல.... 'இன்னைக்கு வேண்டாம்... நாளைக்கு பேசுறேன், அதான் இன்னும் ஒரு வருடமிருக்கே' என்று பதில் சொன்னேன்...

கீர்த்திகிட்ட கண்டிப்பா பேசிடனும்... இந்த வருடம் முடிவதற்குள்...

எழுதியவர் : கோபி சேகுவோரா (21-Nov-15, 9:56 pm)
பார்வை : 307

மேலே