மனதில் இடி இடித்தது

லேசான தூறலாக இருந்தது. மேசை, நாற்காலிகள் நனைந்திருந்தன. கடை முதலாளி "கொஞ்சம் இருங்க சார்", என்று சொல்லி விட்டு, மேசையை கடை உள்ளே எடுத்துப் போட்டார். அது உளுந்தூர்பேட்டை தாண்டி ஒரு ரோட்டோரக் கடை.

ஒரு சிறுவன் வந்து இலை வைத்தான். டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். உட்காராமல் நின்றுக் கொண்டிருந்த என்னை ஏறிட்டுப் பார்த்தான். "சேர் ஈரமா இருக்கு" என்றேன். போய், பழைய நாளிதழ் எடுத்து வந்து துடைத்தான்.

வானத்தை பார்த்தவன் முனகினான். "என்ன?" என்றேன். "ஒன்னு பேயனும், இல்ல நிக்கனும். சும்மா தூறிக்கிட்டு",என்றான். "மேல சொல்லுவோம்", என்று வானத்தைக் காட்டினேன். லேசான முறுவலோடு நகர்ந்தான்.

முதலாளி தோசை வைத்து விட்டுப் போனார். இவன் வந்து சட்னி, சாம்பார் ஊற்றினான். "வேற ஏதும் வேணுமா சார்?". அவன் கேட்ட தொனியால், "ஒரு ஹாப் பாயில்" என்றேன். இங்கிருந்து ஆர்டர் சொன்னான்.

"பேர் என்ன", கேட்டேன். "அஜய்" என்று நகர்ந்தான். ஹாப்பாயிலோடு வந்தான். வைத்து விட்டு பார்த்தான். "பள்ளிக் கூடம் போறீயா?" என்றுக் கேட்டேன். "இல்லை",என்றான். "எத்தனையாவது வர படிச்ச".

"பத்தாவது" என்றான். "பாஸ் பண்ணினியா?". "இல்லை, பரிட்சை எழுதல", என்றவன் போய் விட்டான். திரும்பி வந்து "வேற ஏதும் சார்?" என்றுக் கேட்டான்.

"பரிட்சை எழுதி இருக்கலாம்ல". இப்போது என்னைக் கூர்ந்து பார்த்தான். "வேலைக்கு வரணும்ல", என்றான். அதற்கு மேல் கேள்வி கேட்க மனம் வரவில்லை. குடும்ப சூழலாக இருக்கும் என்று புரிந்தது. அவனது பார்வை சங்கடமாக இருந்தது.

ஆனால் அவன் தொடர்ந்து பேச ஆரம்பித்தான். ஏதோ ஒரு ஆறுதலாக இருக்க வேண்டும். "அம்மா செத்துட்டாங்க. அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. தம்பியவும், பாப்பாவயும் படிக்க வைக்கணும். அதான் படிப்ப நிறுத்திட்டு, வேலைக்கு வந்துட்டேன் ".

கொஞ்சம் விட்டு சுதாரித்து, பேச ஆரம்பித்தேன்,"இப்போ எங்க இருக்கீங்க?". "பெரியப்பா வீட்டுல". "தம்பி, பாப்பா என்ன படிக்கிறாங்க ?". "பாப்பா ஆறாவது, தம்பி மூணாவது". அதற்கு மேல் கேட்க எனக்கு சக்தி இல்லை. முதலாளி அவனை அழைத்து ஏதோ வேலை சொன்னார். முடித்தவன்,"சாம்பார் வேணுமா சார்?"என்று வந்தான்.

கையில் இருந்த அலைபேசியில் அவனுக்கு தெரியாமல் படம் எடுத்தேன். புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது பேச தயாராக, அவன் நின்று கொண்டிருந்தான். ஆனால் என் நாக்கு எழவில்லை. இதற்கு மேல் கேட்டால், இன்னும் எவ்வளவு சோகக் கதை வெளி வருமோ. கை கழுவிய எனக்கு, கை துடைக்க பழைய நாளிதழை கிழித்துக் கொடுத்தான்.

பில் கொடுக்க, பணம் எடுக்க காருக்கு வந்தேன். கல்லா அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் அஜய். பணத்தை டிரைவரிடம் கொடுத்து அனுப்பி விட்டேன். திரும்பி அந்த துயரம் தோய்ந்த கண்களை காணும் தைரியம் இல்லை.

கார் கிளம்பியது. மின்னல் வெட்டியது. அவன் கண்கள் நினைவு வந்தது.

# மனதில் இடி இடித்தது...

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (25-Nov-15, 8:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 250

மேலே