விபத்து - குறுங்கதை

செல்போன் ஒலித்தது. சண்முகம் எடுத்துப்பேசினான்.
நடிகர் சுர்ஜித்தின் அஸிஸ்டெண்ட் தான் பேசினான்.

"சார் கெளம்பிட்டீங்களா"?

" இதோ கெளம்பிட்டேங்க"

"நல்லதுங்க. வண்டி வந்திருச்சிங்களா"?

" ஆங் வந்துருச்சிங்க. எதுக்குங்க காரெல்லாம் அனுப்பிக்கிட்டு... என் பைக்லயே வந்திருப்பேனேங்க"?

"நல்லா சொன்னீங்க சார். எவ்ளோ பெரிய வேலை செஞ்சுட்டி... நீங்க வாங்க... அண்ணன் இருக்காரு. நேர்ல பேசிப்போம்"

"சரிங்க. நல்லதுங்க"

போனை துண்டித்துவிட்டு மனைவியைப்பார்த்தான். அவள் முகத்தில் பெருமை வழிந்தது.

"சரி பார்த்து போயிட்டு வாங்க. எதாச்சும் குடுத்தா தியாகிமாதிதி தடுக்காம வாங்கிட்டுவாங்க"

"ச்சீ அல்பம் மாதிரி பேசாத"

"இதுல என்ன இருக்கு ? கேக்கவா சொன்னேன். அவங்களா குடுத்தா வாங்கிக்கங்கன்னுதானே சொல்றேன்"?

" உங்கிட்ட பேசி என்னிக்கி நா ஜெயிச்சிருக்கேன். எனக்கு டைமாச்சு கெளம்புறேன். சாயந்திரம் நீயே போய் பையனை ஸ்கூல்லருந்து கூட்டிட்டு வந்திரு" என அவள் பதிலுக்கு காத்திராமல் வெளியில் வந்தான்.

அப்பார்ட்மெண்ட் வாசலில் கார் காத்திருந்தது. மிக ஆடம்பரமான கார் அது. உலகிலேயே எட்டுபேர்களிடம்தான் அந்தக்கார் இருக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறான். சாதாரண இன்சூரன்ஸ் ஏஜண்டான சண்முகத்திற்கு கார் என்பதெல்லாம் பெரிய அதிசயம்தான். அவன் எக்ஸல் சூப்பரை ஒருமுறை பார்த்துவிட்டு வாசலில் இறங்கினான்.

சுத்தமான சீருடை டிரைவர் உள்ளிருந்தபடியே முன்பக்கம் கதவைத்திறந்துவிட சண்முகம் ஏறிக்கொண்டான். சில்லென்று ஏஸிக்குளிர் முகத்தில் வீச, துளி குலுங்கலின்றி கிளம்பியதுகார். டிரைவர் சளசளவென பேசியபடியே வந்தான். முக்கால்வாசி நடிகரின் புராணம்தான். சண்முகத்தின் மனமெங்கும் ஒருவாரத்திற்கு முந்தைய சம்பவங்கள் கண்முன்பு வந்துபோயிற்று.

ஒரு கிளையண்டை சந்தித்துவிட்டு புறவழிச்சாலையில் எக்ஸல் சூப்பரில் சென்றுகொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது. சுர்ஜித்தின் காரை ஒரு மணல் லாரி மோதி பள்ளத்தில் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அதுவும் இதேபோன்ற காராக இருந்திருந்தால் சேதாரம் குறைவாக இருந்திருக்கும். அது ஒரு சாதாரண கார்தான். உள்ளே ஓட்டிவந்த சுர்ஜித் நிறைய அடிபட்டு ரத்தமாகக்கிடந்தான்.

மிகப்பிரபலமான முண்ணனி நடிகன் சுர்ஜித்தை தெரியாதவர்கள் யாருமில்லை நாட்டில். அவசரமாக ஆம்புலன்ஸை வரவழைத்து ஏற்றிக்கொண்டு ஜீஹெச்சில் அட்மிட்செய்துவிட்டு சுர்ஜித்தின் போனுடன் காத்திருந்தான். அதுவும் இம்போர்ட்டட்தான். சுர்ஜித்தின் மனைவி அழைத்ததும் விபரம்கூற, வரிசையாக கார்களால் நிரம்பியது மருத்துவமனை. சற்றைக்கெல்லாம் வேறொரு ஆம்புலன்ஸ் வைத்து நகரின் மிக வசதியான மருத்துவமனைக்கு மாற்றிக்கொண்டார்கள்.

சுர்ஜித்தின் மனைவியும் மற்றும் சிலரும் சண்முகத்தை கடவுள்போல பார்த்தார்கள். திரும்பத்திரும்ப நன்றிகூறினார்கள். மறக்காமல் இவன் செல் எண்ணை வாங்கிக்கொண்டார்கள். நாளிதழ்களில் எல்லாம் சண்முகத்தின் செயலும் அதற்கான பாராடுக்களும் வந்திருந்தன. ஒருவாரத்திற்குமேல் ஆயிற்று. இப்போது வீட்டிற்கு அழைத்துச்செல்கிறார்கள்.

நகரத்தின் செழிப்பான பிரதேசத்தில் செல்வச்செழிப்புடனிருந்த அந்த பங்களாவிற்குள் நுழைந்தது கார். கேட்டருகே நிறைய கும்பல். சுர்ஜித்தின் ரசிகர்களாக இருக்குமென்று புரிந்துகொண்டான். அஸிஸ்டெண்ட் வாசலிலேயே காத்திருந்தார். வீட்டின் ஒவ்வோர் அங்குலத்திலும் பணம் சிரித்தது. வளைந்து நெளிந்து மேலே சென்ற மாடிப்படிக்கட்டுகளில் காழ்பெட் மெத்தென்றிருந்தது. சுர்ஜித்தின் மனைவி முகமெல்லாம் புன்னகையாக வரவேற்றாள். பெரிய அறைக்குள் படுத்திருந்தான் சுர்ஜித்.

பல சினிமாக்களிலும் வில்லன்களை பந்தாடிய அவன் கால்களில் பெரிய பேண்டேஜுகளுடன் படுத்திருந்தான். கையில் ஏதோவொரு ஆங்கிகப்புத்தகம் வைத்திருந்தான் இவனைப்பார்த்ததும் எழுந்திருக்க முயன்றான். அஸிஸ்டெண்ட் தடுத்தான்.

"அண்ணே ஸ்ட்ரெய்ன் பண்ணவேணாமே ப்ளீஸ்"

அவன் முகம் கருத்துக்களைத்திருந்தது. கண்களுக்கு கீழே கருவளையங்கள் இருந்தன. மரணத்தின் சமீபத்தை நெருங்கி மீண்டதன் சுவடுகள் தெரிந்தன. சுர்ஜித்தின் மனைவியுடன் கூடவே ஒரு பணிப்பெண்ணும் பழச்சாற்றுடன் நுழைந்தாள். சண்முகம் சற்றுநேரம் பேசாமலிருந்தான். பிறகு சம்பிரதாயத்திற்காக கேட்டான்.

"டாக்டர் என்ன சொல்றாங்க"?

அஸிஸ்டெண்ட்தான் பதில்கூறினான்

" இப்ப பரவால்லங்க. பட் நடக்கத்தான் கொஞ்சநாளாகுமாம்"

அவன் மனைவி சொன்னாள்,

"நானும் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். தனியா காரெடுத்திட்டு போகாதீங்கன்னு. கேட்டாத்தானே ? நல்லகாலம் நீங்க அன்னிக்கி இருந்தீங்க. இல்லாட்டி"... என்று மெல்ல அவள் குரல் தழும்பியது.

" விடுங்கம்மா... அதான் சரியாய்டுச்சே. திரும்பத்திரும்ப அதையே நெனச்சிட்ருந்தா சங்கடந்தான்"

"நீங்க அன்னிக்கி செஞ்சது ரொம்பப்பெரிய உதவிங்க. என்னிக்குமே மறக்கமுடியாது"

சண்முகம் கூச்சத்தில் நெளிந்தபடி சொன்னான்,

"அப்டியெல்லாம் இல்லங்க. நா இல்லாட்டியும் வேற யாராவது இதை செஞ்சிருப்பாங்க. எப்டியோ பொழைச்சிட்டாருங்களே, அதுவே போதும்"

அறையில் நிலவிய அமைதியை சுர்ஜித்தின் போன் கலைத்தது. அஸிஸ்டெண்ட் எடுத்து பேசினான்.

"இல்ல சார். இப்ப பரவால்ல. இல்லங்க எப்டியும் ஒருமாசமாச்சும் ஆயிடும். ஆமாமா... என்ன செய்யிறது. ஆகட்டுங்க, அண்ணங்கிட்ட சொல்றேன். சரிங்க. நல்லதுங்க"

போனை வைத்துவிட்டு சுர்ஜித்திடம் சொன்னான்.

"ஆந்திராலருந்து ******* தான். விசாரிச்சார்.

சுர்ஜித் சைகை செய்ய அஸிஸ்டெண்ட் அறையிலிருந்து வெளியேறி சில நிமிடங்களில் மறுபடி திரும்பினான். லையிலிருந்த சூட்கேஸிலிருந்து சில நோட்டுக்கற்றைகாலை எடுத்து நீட்ட சண்முகம் பதறி விலகினான்.

" அய்யோ என்னங்க இது... பேசாம இருங்க"

சுர்ஜித் சொன்னான்,

"தயவுசெஞ்சு தப்பா நெனைக்காதீங்க. நீங்கமட்டும் அன்னிக்கி உதவி செய்யலன்னா என்ன நடந்திருக்கும்னு நெனச்சே பாக்க முடில. அதுக்கான சின்ன நன்றிதான் இது. ப்ளீஸ் வாங்கிக்கங்க"

சண்முகம் அதை வாங்கிக்கொள்ளவேயில்லை.

"இதெல்லாம் எதிர்பார்த்து நா செய்யலங்க. அந்தநேரம் ஒரு உசிருக்கு எதும் ஆயிடக்கூடாதுன்னு மட்டுந்தான் போராடுனேன். மத்தபடி பணங்காசெல்லாம் குடுத்து அந்த அந்த மனிதாபிமானத்தை கொன்னுடாதீங்க. நாளப்பின்ன யாருக்காச்சும் உதவி செய்யிறப்ப, இந்த உதவியால நமக்கு எவ்ளோ லாபம்னு மனசு கணக்குப்போட ஆரம்பிச்சிரும். அதான் நீங்க நல்லாயிட்டீங்களே. அதுவே போதும் எனக்கு"

சுர்ஜித்தும் அவன் மனைவியும் அஸிஸ்டெண்டும் அவனை விசித்திரமாக பார்த்தார்கள். அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் பணம் வாங்கிக்கொள்ளவேயில்லை. அவர்களிடம் விடைபெற்று வீடுதிரும்பினான். மனைவி கேட்டாள்,

"ஏஙக அதுல எவ்ளோ இருந்திச்சு"?

" இருக்கும்மா, ஒரு ரெண்டுலட்சம் கிட்ட"

அவள் முகம்போனபோக்கை வர்ணிக்கவே இயலவில்லை.

"நாட்ல யாருனாச்சும் இப்டி இருப்பாங்களா? வலிய வர மகாலட்சுமிய வராதன்னு சொல்லுவாங்களா ? ஏந்தான் இப்டி பொழைக்கத்தெரியாம இருக்கீங்களோ... ரெண்டு லட்சம் சம்பாதிக்க நமக்கு எவ்வளவு வருசமாகும் தெரியுமா"

அவள் புலம்பும்பிமுடியும்வரை காத்திருந்துவிட்டு சண்முகம் இப்படிச்சொன்னான்.

"கடவுள் நமக்கு என்ன விதிச்சிருக்காரோ அது எப்டியாச்சும் நம்மகிட்ட வந்திரும்மா. போயி சாப்பாடு எடுத்திட்டுவா"

இத்துடன் இந்தக்கதை முடிந்துவிட்டால் நன்றாக இருக்குமோ என்னவோ. ஆனால் முடியவில்லை.

அடுத்துவந்த சிலதினங்களில் சில சம்பவங்கள் நிகழ்ந்தன. சுர்ஜித்தின் அஸிஸ்டெண்ட் வந்து சண்முகத்தை மறுபடி வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவன் சார்ந்த இன்சூரன்ஸ்
கம்பெனியில் பலகோடி ரூபாய்களுக்கு பாலிஸிகள் எடுத்த்துக்கொண்டார்கள். அத்துடன் இண்டஸ்ட்ரியில் சுர்ஜித்தின் பல நெருங்கிய பெரிய மனிதர்களின் தொடர்புகளும், அவர்கள்மூலம் பல பாலிஸிகளும் கிடைத்தன. கம்பெனியில் பிரமோசனெல்லாம் கிடைத்து சண்முகம் படுபயங்கர பிஸியானான். அவன் போன் ஒலித்தபடியே இருந்தது எப்போதும்.

அப்படித்தான் ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது,

"என்ன தல நம்மள மறந்துக்கினியே" என்ற குரலை கேட்டதுமே சண்முகத்திற்கு ஞாபகம் வந்துவிட்டது.

அவன் தான் சுர்ஜித்தின் காரை இடித்த லாரி டிரைவர்.

எழுதியவர் : மாதவன் ஸ்ரீரங்கம் (28-Nov-15, 11:55 pm)
பார்வை : 199

மேலே