பரந்தாமனின் சங்கடம்

பக்கத்து வீட்டுக்கு புதிதாய் வாடகைக்கு குடிவந்த குடும்பத்தில், ஒரு அழகான பிகரும் இருந்தது,
பரந்தாமனுக்கு பயத்தை கொடுத்தது.

காலப்போக்கில், லவ்வு கிவ்வு ன்னு ஏதேனும் ஆக நேர்ந்தால்..
தான் கண்ட கனவு,லட்சியம்,இலக்கு எல்லாம்
பாழாகி விடுமே என்ற பயம் பரந்தாமனுக்கு.

குடி வந்த ரெண்டாவது நாளே,அவள் வீட்டிலிருந்து ஒலிக்கும் ,
'கண்ணாளனே..'
'நீ எங்கே ..'
'ஒருநாளும் உனை மறவாத ' போன்ற பாடல்கள்
கொஞ்சமும் பரந்தாமனுக்கு பிடிக்கவில்லை.

எனவே,அந்த பாடல்கள் காதில் விழுந்து விடாத படியும்,அவளை கண்ணெதிரே கண்டுவிடாத வாரும்,
தன் வீட்டு ஜன்னல்களை எல்லாம் இழுத்து மூட வேண்டிய அவசியம் பரந்தாமனுக்கு ஏற்பட்டது.

காற்று சுத்தமாக வீட்டுக்குள் வரவில்லையே என்று ,
சில நேரம் ஜன்னலை திறந்து வைக்க,
அந்த நேரம் பார்த்து,அவள்,அசத்தலான உடையில் தோன்றி,பரந்தாமனைப்பார்த்து புன்னகைக்கிறாள்.

அறிமுகமாகாத அடுத்த வீட்டிலிருந்து ,அவள் வீசிய இந்த புன்னகை,ஒரு பெரிய ஆபத்தாகவோ,ஆப்பாகவோ பரந்தாமனுக்கு தோன்றியது.

இது ஒன்றும் சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு வந்த பரந்தாமன்,
''சாவி..சாவி ''என்று சத்தம் போட்டுக்கொண்டே ,சமையல்கட்டு பக்கம் ஓடினார்.

அவரது மனைவி சாவித்திரி நிதானமாக,
''என்னங்க..என்னாச்சு ?''என்றதும்,

''எனக்கு ஒண்ணும் பிடிக்கலடி..பக்கத்துவீட்டுக்கு வந்திருக்கிற அந்த அழகான பொண்ணு..நம்ம மவனின் மனசை மாத்திடுவாளோ ன்னு பயமா இருக்குடி..

இந்த வருஷ பிளஸ் டூ எக்சாம்ல அவன் ஸ்டேட் பர்ஸ்ட் வரணும் என்கிற என் கனவு பலிக்காம போயிடுமோ ன்னு கவலையா இருக்கு..நாம வேணும்ன்னா வீடு மாத்தி போய்டலாமா ?''என்று பதறினார்.

சாவித்திரி தலையில் அடித்துக்கொண்டு,
''ஐயோ..ஐயோ./புள்ள சின்சியரா படிச்சுகிட்டு இருக்கான்..அவனுக்கு,பக்கத்து வீட்டுக்கு புதுசா குடிவந்த
விசயமல்லாம் தெரியாது..
நீங்களா, அழகான பொண்ணு,பிகரு ன்னு பில்டப் பண்ணாம,
வாய மூடி த்தோலைங்க'' என்றாள்.

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (28-Nov-15, 11:19 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 290

மேலே